புதன், 25 நவம்பர், 2015

சகிப்பின்மையே இந்துக் கலாச்சாரம்.

க.திருவள்ளுவன்

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமர்த்தப்பட்ட பிறகு 'இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை' என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல எழுத்தாளர்கள், கலைஞர்கள்,அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் இக்கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். நடிகர் அமீர்கானும் இக்கருத்தை வலியுறுத்தி "நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்" எனக் கூறியிருக்கிறார். அமீர்கான்  போன்றவர்கள் கூறும் சகிப்பின்மை இங்கு குறைந்துகொண்டிருக்கிறத என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால்  கடந்த ஆறு, ஏழு மாதகாலமாகத்தான் இந்நிலை இருக்கிறது என்பதைப் போல் சிலர் பேசுவதை நாம் மறுத்தே ஆகவேண்டும்.

"கடந்த 6 முதல் 8 மாதங்களாக நாட்டில் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளது. அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது" என்கிறார் அமீர்கான். ஆனால் உண்மையென்ன? ஆயிரம் ஆண்டுகளாகவே இந்திய மண்ணில் சகிப்பின்மையும் அதன்காரணமா அச்சுறுத்தல்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை.

இந்திய சகிப்பின்மையின் கொடிய வரலாறு பௌத்தம் வீழ்த்தப்பட்ட காலத்திலிருந்தே தொடர்கிறது. சகிப்புத்தன்மையை போதித்த  பௌத்தத்தை பார்ப்பனியம் வீழ்த்தியபோதே இங்கு சகிப்பின்மை தலைதூக்கி ஆளத்துவங்கிவிட்டது. தமது சகிப்பின்மைக் கொள்கையையே பார்ப்பனியம் பிறகு தீண்டாமைக் கலாச்சாரமாக ஆக்கியது. இந்த கொடிய தீண்டாமைக் கலாச்சாரத்தை பாதுகாப்பதே ஒவ்வொரு இந்துவின் கடமையாக நடைமுறைப் படுத்தப்பட்டு சகிப்பின்மையை வளர்த்தெடுத்தார்கள் இந்துக்கள். அதன் விளைவுதான் சங்பரிவார்களும் மோடிகளும்.


பார்ப்பனியத்தின் சகிப்பின்மைக்கு முதன் முதலில் தாக்குண்டவர்களும் இன்னமும் தாக்கப்படுபவர்களும் தலித்துகள்தான். ஆனால் இங்கே, ஒரு தலித் பொதுக்குளத்தில் நீரெடுத்தால் தடுக்கப்படுவதும், ஒரு தலித் செருப்பணியத் தடுக்கப்படுவதும், ஒரு தலித் ஊராட்சி மன்றத்தலைவராக ஆனால் கொல்லப்படுவதும், ஒரு தலித் இந்துப் பெண்ணை காதலித்தால் கழுத்தறுக்கப்படுவதும், ஒரு தலித் முதல்வரின் காலடிப் பட்ட கோயிலைக் கழுவிடுவதும், சகிப்பின்மையாகப் பார்க்கப்படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில். எந்த எழுத்தாளரும், எந்த கலைஞரும், எந்த விஞ்ஞானியும் தம் விருதுகளை தலித்துகள் மீதான சகிப்பின்மையைக் கண்டித்து தூக்கியெறிந்ததும் இல்லை. ஆனாலும் நாம் இந்து சகிப்பின்மையை வன்மையாக எதிர்க்கிறோம். இந்துவெறியின் சகிப்பின்மையைக் கண்டு அமீர்கான்கள் பயந்து தேசம்விட்டு ஓடலாம். ஆனால் நாம் ஓட முடியாது. இது நம்முடைய மன். இங்கே சகிப்பின்மைக்குத்தான் இடம் இருக்கக்கூடாது. மீண்டும் பௌத்தம் கொண்டு சகிப்புத்தன்மையை நிலைநாட்டி பார்ப்பனிய சகிப்பின்மையை ஒழித்துக்கட்டுவதே நாம் நம்முடையக் கடமையாகக் கொள்வோம்! 

 

கருத்துகள் இல்லை: