ஞாயிறு, 12 ஜனவரி, 2014

போகிப்பொங்கல் பண்டிகையெனும் சங்கறாந்தி போதிப்பண்டிகை.

  தி.ஸ்டாலின்.          


மார்கழி மாதத்தின் கடைசி தேதியன்று கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை. போகிப்பண்டிகைக்கான காரணமென்ன? அது யாரால் கொண்டாடப்பட்ட பண்டிகை? யாரை முன்னிருத்தி கொண்டாடப்படும் பண்டிகை அது?

     சிலர் இதனை இந்துபண்டிகை என்கிறார்கள். சிலர் தமிழர் பண்டிகை என்கிறார்கள். இன்னும் சிலரோ அறுவடைப் பண்டிகை என்கிறார்கள். இதில் உண்மை எது? இதில் எதுவும் உண்மையில்லை என்பதே உண்மை.

இந்துப்பண்டிகை என்று பாமரமக்கள் கொண்டாடும் பண்டிகை எதுவும் வரலாற்றில் இல்லை. எல்லோருக்குமான ஓர் பண்டிகை என்பது இந்து மதத்தில் சாத்தியமில்லாதது. பண்டிகை என்பதற்கே எதிரான கருத்துடைய மதம் இந்து மதம். பண்டிகை என்பதற்கான அர்த்தம் தங்களிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வதாகும் (பண்டம்+ஈகை=பண்டிகை./பண்டம்=பொருட்கள்; ஈகை=கொடுத்தல்.).இப்போதும் மக்கள் பண்டிகைக்காலத்தில் தங்களுக்குள் பண்டங்களை கொடுத்து மகிழ்கிறார்கள். ஆனால் இந்து மதம் இத்தகைய பண்பாட்டை ஏற்பதில்லை. அது யார் யாரோடு நட்பாக இருக்கவேண்டும் என்பதை விதியாக கூறுகிறது. பிராமணன் பிராமணனோடு மட்டும் தான் நட்பாய், உறவாய் இருக்க முடியும்.அப்படியே ஒவ்வொரு சாதியினரும் அவரவர் சாதியினருடன்தான் உறவாடமுடியும். எனவே பொதுவான ஓர் பண்டிகை என்பதே இந்து மதத்தில் இருந்ததில்லை என்பாதே வரலாறு. தமிழர் பண்டிகை என்றும் சொல்லமுடியாது. ஏனெனில் பௌத்த ஞானிகளால் தமிழ் எனும் மொழி உருவாக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே போகிப்பண்டிகை ‘தீப சாந்தி’ இந்திர விழா’ என்றெல்லாம் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்படியெனில் போகிப்பண்டிகை யாருடைய பண்டிகை? எதற்காக கொண்டாடப்படும் பண்டிகை?

     போகிப்பண்டிகை பூர்வ பௌத்த மக்களான சாக்கியர்களின் பண்டிகை என்பதே சரியான பதில். பூர்வ பௌத்த மக்களான சாக்கியர்களே இக்காலத்தில், பறையர்,பள்ளர்,வண்ணார்,சக்கிலியர்,போன்ற பெயர்களால் அழைக்கப்படும் தலித் மக்களாவார்கள். இந்த மக்கள் கொண்டாடிய பண்டிகைதான் போகிப்பண்டிகை. அதாவது போகிப்பண்டிகை என்பது 'பௌத்தப் பண்டிகை'யேயாகும்.

போகிப்பண்டிகைக்கான காரணமும் வரலாறும் என்ன?

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இந்திர தேசமெனும் இந்தியாவில் சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் அடிப்படையிலான சமூக தத்துவமான தம்மத்தினைப் போதித்து, பௌத்த வழியில் அன்பும்,கருணையும் கொண்ட மக்களை வழிநடத்தி வந்த சாக்கிய மாமுனி புத்தர் வாழ்ந்து வந்தார்.தனது தந்தை நாட்டிற்கும் தனது அன்னை பிறந்த நாட்டிற்கும் இடையில் ஓடிக்கொண்டிருந்த ரோகிணி நதி நீரினை பகிர்வதில் இரு நாட்டிற்குமிடையே போர் நடக்கப்போவதற்கான சூழல் வந்ததை எதிர்த்து இளவரசனான சித்தார்த்தர்(புத்தர்) போரில் ஈடு படமுடியாது,பிரச்சனைகளுக்கு போர் தீர்வளிக்காது என்று கூறி தேசம்விட்டு,இளவரச வாழ்வைவிட்டு, இளம் மனைவி யசோதராவையும்,குழந்தை இராகுலனையும் இன்னும் பிற சொத்துக்களையும் துறந்து வெளியேறி, துக்கத்திற்கான காரணங்களையும் அதிலிருந்து உயிர்களை காப்பதற்கான வழிகளையும் தேடி தனது 28 ஆம் வயதின் முடிவில் துறவு பூண்டார். ஒழுக்கத்தினாலும், சிறந்த தியானத்தினாலும் உயர் ஞானமெய்து, புத்தராக உயர்வடைந்து, தான் கண்டுணர்ந்த ஞானத்தை போதித்து, மக்களின் மனங்களை வளப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் துக்கமில்லா வாழ்க்கையை கற்பித்த அந்த பகவான் புத்தர், இறுதியாக குஷினாரா எனும் ஊருக்கு வந்தார்.இங்கு, தன் வாழ் நாளையெல்லாம் மக்களின் துயர் போக்க அர்ப்பணித்த புத்தர் தனது 85 ஆம் வயதில் (கி.மு.483 இல் என்கிறார் அண்ணல்), தனது மறைவு நாளென்று, முன்னரே புத்தரால் அறிவிக்கப்பட்ட அந்த பௌர்ணமி இரவின் மூன்றாம் சாமத்தில் பரிநிர்வணம் அடைந்தார். அந்த நாள்தான் மார்கழி மாதத்தின் கடைசி நாள். செய்தியறிந்த மக்கள் கண்ணீர்விட்டு கதறினார்கள், மண்ணில் விழுந்து அழுது புரண்டனர்.

அது முதல் ஒவ்வொரு மார்கழி கடைசி தேதியன்றும் புத்தரின் இறப்பு நாளை கொண்டாடினார்கள் மக்கள். பௌத்த அரசுகள் அரசு பண்டிகையாகவும், இனி ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் குடிமக்கள் மாதத்தின் ஒவ்வொரு நாளும் குளித்து,வீடுவாசல் பெருக்கி தூய்மை படுத்தி தோரணம் கட்டி, வீட்டு வாசலில் கோலமிட்டும்,இறுதி நாளில் தீபமேற்றி,கும்மியடித்து,மண்ணில் விளைவிக்கப்பட்ட வாழை, மஞ்சள், தானியங்களை படைத்து புத்தனை வணங்கவேண்டுமென்றும் அறிவித்தன. மக்களும் அவ்வாறே நடந்து வணங்கிவந்தனர். இவ்விழாவே,தீப சாந்தி,இந்திரவிழா,போதிப்பண்டிகை போன்ற பெயர்களில் கொண்டாடப்பட்டது.இன்று இந்த அர்த்தத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படவில்லை.ஏனெனில் இடையில் ஆதிக்கம் பெற்ற இந்து மதம் பௌத்தர்களை ஒடுக்கியது.பௌத்த பண்டிகைகளை தமது பண்டிகைகளாக மாற்றி பித்தலாட்டம் செய்தது.இருந்தும் பூர்வகுடி மக்களான தலித்துகளிடையே இன்னமும் பூர்வ பண்பாடு இருப்பதற்கான அடையாளங்களாக சில பண்டிகைகள் உள்ளன.அதில் ஒன்றுதான் இந்த போகிப்பண்டிகை.

நேரடியான புத்த வழிபாட்டை நம் மக்கள் மேற்கொள்ளாவிட்டலும் அதன் மரபிலிருந்து விலகாமலும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.அதன் தொடர்ச்சிதான் மார்கழி மாத வழிபாடும் போகி பண்டிகையும். நம் முன்னோர்களான பௌத்தர்கள் கொண்டாடியதை போல் மார்கழி மாதத்தில் நம் மக்கள் வீடுவாசல்களை சுத்தம் செய்கிறார்கள். நம் பெண்கள் வாசலில் கோலமிடுகிறார்கள்.புத்தருக்காக அழுத நம் பெண் முன்னோர்களைபோல் இப்போதும் நம் வீட்டுப்பெண்கள் மார்கழி இறுதி நாளில் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்காக ஒப்பாரியிட்டு அழுகிறார்கள்.புத்தரின் புகழைப்பாடி கும்மியடித்த நம் ஆதிகாலப் பெண்களை போல்,இன்றும் நம் பெண்கள் போகியன்றைக்கு கும்மிப்பாட்டு பாடுகிறார்கள். போகியன்று பழைய துணிகளை கொளுத்தும்  பழக்கமும் இருக்கிறது. ஒரு வீட்டில் ஓர் இறப்பு நிகழ்ந்தால் அவ்வீட்டில் இருந்த பழைய துணிகள், பொருட்கள் தூக்கியெறியப்படும் அல்லது எரிக்கப்படும். அப்படித்தான் தம் குடும்பத்தில் ஒருவரான புத்தர் இறந்ததையொட்டி பழையப் துணிகள்,பொருட்கள் எறியப்படுகின்றன,எரிக்கப்படுகின்றன.

மேலும், சேரிமக்கள் போகியன்றைக்கு புத்தரை நேரடியாக வழிபடுவது மறைந்திருந்தாலும்,அவர்கள் அன்றைக்கு வணங்கும் தெய்வம் மாரியம்மனாகும். மாரியம்மன் என்பவர் நம் சாக்கிய குல அரசனுக்கு பிறந்து, பகவான் புத்தரின் வழியில் துறவுபூண்டு, அறத்தைப் போதித்த ‘அம்பிகா தேவி’யே ஆவார். இவரே அவ்வையென்றும், வேளாங்கண்ணியென்றும்,அம்மனென்றும் போற்றப்பட்டார். மாரி எனும் கொடிய அம்மை நோயை தனது மருத்துவத்தால் போக்கியதால் மாரியாற்றாள் (மாரியை ஆற்றியவள்) என்று அழைக்கப்பட்டார்.இதுவே பிறகு மக்கள் பேச்சு வழக்கில் ‘மாரியாத்தாள்’எனப்பட்டது. எனவேதான் புத்தரின் பரி நிர்வாண நாளில் மக்கள் பௌத்த நாயகி மாரியம்மனை போற்றி வணங்குகிறார்கள். ஆக, போகிப்பண்டிகை என்பது பௌத்த பண்டிகைதான் என்பதே நிருபனமாகிறது.

போகிபண்டிகையா? போதிப்பண்டிகையா? சங்கறாந்தி பண்டிகையா?

போகிப்பண்டிகை:
போகி என்பது இந்திரனை குறிக்கும் என்பார்கள். இந்திரன் என்பது புத்தரின் ஆயிரம் பேர்களில் ஒன்று. இந்துக்கள் இந்திரனை பெண் சுகம் தேடி அலைபவனாக சித்தரிப்பார்கள்.ஆனால் புத்தரே இந்திரன்.அதை மூடி மறைக்கவே இந்துக்கள் இப்படி கதைக்கட்டினார்கள். இந்திரர் என்பது ஐந்திரர் என்பதிலிருந்து திரிந்த சொல்லாகும். ஐந்திரர் என்றால் ஐம்புலன்களை அடக்கி வென்றவர் (ஐந்திரியம்=ஐம்புலன்கள்;தீரம்=வெல்வது).எனவே ஐம்புலனடகம் கொண்ட புத்தர் ஐந்திரர் எனப்பட்டார். புத்தரை வழிகொண்டு புலனடக்கம் கொண்டு வாழ்ந்த பூர்வ பௌத்தர்களே (தலித்துகளே) இந்திரர்கள் எனப்பட்டனர்.இந்திரர்(தலித்)கள் வாழ்ந்த தேசமே இந்திர தேசமென்றும் பின்னாளில் இந்திய தேசமென்றும் கூறப்பட்டது. துவக்க காலத்தில் போகிப்பொங்கல் விழா ‘இந்திர விழா’ என்றே அழைக்கப்பட்டது இதன் காரணமாகத்தான். எனவே புத்தரின் பரி நிர்வாண நாளை போகிப் பண்டிகை என்று சொல்வதில் பிழை இல்லை.

போதிப் பண்டிகை:
     போதியென்றால் ஞானம் என்று அர்த்தம். அரசமரத்தின் கீழ் அமர்ந்து தூய்மையான மனதுடன் தியானித்த புத்தர் போதியை (ஞானத்தை) அடைந்தார்.எனவே அம்மரம்  போதி மரமென்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் புத்தரின் அடையாளமாக போதி எனும் சொல் ஆனது. போதியர், போதி மாதவன், போதி தருமன், போதி ராஜன் என்றெல்லாம் புத்தர் அழைக்கப்பட்டார். அதன் அடிப்படையில் புத்தரின் பரி நிர்வாண நாளான மார்கழி கடைசி நாள் போதிநாளாக, போதிப் பண்டிகையாக குறிப்பிடப்படுகிறது. எனவே, போதிப்பண்டிகை என்றழைப்பதிலும் குற்றமில்லை.

சங்கறாந்தி திரு நாள்:
     போகிப்பண்டிகை சங்கறாந்தி நாள் என்றும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பௌத்த மும்மணிகளாக இருப்பவைகள்,புத்தம், தம்மம், சங்கம். புத்தம் என்றால் ஞானம்; தம்மம் என்றால் ஞானத்தினால் கண்டுணர்ந்த உண்மைகள்; சங்கம் என்றால் ஞானத்தினால் கண்டுணர்ந்த உண்மைகளை மக்களுக்கு போதித்து,வழிநடத்தும் இயக்கம். அச்சங்கத்தின் முதல் தலமை முனிவர் புத்தர். எனவே புத்தர் “அறவர்,அறர்,அறவோர்,அறவாழி” என்றெல்லாம் அழைக்கப்பட்டார். மேலும், சங்கத்தின் அறர், சங்கத்தின் அறவோர் போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.இது பிறகு, சங்கறர் என்றாகி(‘ற’கரம் ‘ர’கரமாகி, சங்கரர்)யது.சங்கறர் எனும் புத்தர் மறைந்த(அந்தி=மறைவு) நாளை சங்கறாந்தி நாள் என்றும் அழைப்பதில் குற்றமில்லை.
மேலும், தீபமேற்றி வணங்குவதால் தீப சாந்தி என்றும் போகி அழைக்கப்படுகிறது.

சங்கறாந்தி போதிப்பண்டிகையை தொடர்ந்து கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை வெறும் அறுவடை பண்டிகைதானா? அப்படி இருப்பின் புத்தரின் இறப்பு நாளைத்தொடர்ந்து வர வேண்டிய காரணமென்ன? பொங்கல் அறுவடையை கொண்டாடுகிறது என்பதும் உண்மைதான். ஆனால் அதுவும் பௌத்த பண்டிகைதான் என்பதுவும் உண்மை.

சூரியப் பொங்கல்:
     சங்கறாந்தி போகிப்பண்டிகையின் மறு நாள் (தை முதல் நாள்) கொண்டாடப்படும் பண்டிகை சூரியப் பொங்கல்.உழவுத்தொழிலுக்கு பெருந்துணையாக இருப்பது சூரியன். எனவே அதனை வணங்கும் விதமாக சூரியப்பொங்கள் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. சூரியன் அனைத்து உயிர்களுக்கும் மையமான சக்தியாக இருக்கிறது. கிரகங்களின் இயல்புகளை ஆராய்ந்து சொன்னது நம் சாக்கிய சமூகம்தான். எனவே அதனை வணங்குவதில் தவறில்லை. ஆனால் சூரியப்பொங்கல் அதற்காக மட்டும்தான் கொண்டாடப்படுகிறதா? குறிப்பாக புத்தர் மறைந்த நாளுக்கும் அடுத்த நாளில் கொண்டாடுவது ஏன்?
புத்தரை பகவான் என்றும் அழைப்பார்கள் மக்கள். வள்ளுவர் ஆதி பகவான் என்று குறிப்பிடுவது புத்தரைத்தான். சூரியனை பகலவன் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. பகல் என்றால் ஒளி/வெளிச்சம் என்று பொருள். வெளிச்சம் இருளை அகற்றுகிறது. இருட்டென்னும் இருளை நீக்கும் ஒளியை கொடுப்பதால் சூரியன் பகலவன் என்றழைக்கப்படுகிறது. அறியாமை எனும் இருளை ஞானமெனும் ஒளியால் நீக்கியதால் புத்தர் பகவான்/பகவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

மார்கழி கடைசி நாளில் பகவான் எனும் புத்தர் மறைந்தார். எனவே அதன் காரணமாக மறு (தை முதல்) நாள் பேரொளியின் அடையாளமான பகலவன் எனும் சூரியனை புத்தரின் நினைவாக, அதாவது அவரது ஞான வழி எனும் ஒளியினை வணங்கி, பொங்கல்,பழங்கள்,மஞ்சள் உள்ளிட்ட பண்டங்களை படையிலிட்டு வணங்கும் வழக்கமே சூரியப்பொங்கல் நாளாக ஆகியது.

மாட்டுபொங்கல்:
     பார்ப்பனியம் விலங்குகளை யாகத்தில் பொசுக்கி தின்றழித்தது. பௌத்தமோ விலங்குகளை நேசித்தது.உலகின் முதல் கால்நடை மருத்துவ மனையைக் கட்டியவர் பௌத்த பேரரசர் அசோகரேயாவார். பௌத்தர்களில் உழவர்களாக இருந்தவர்கள் ஏர்கலப்பை,மண்வெட்டி,களைகொத்தி உள்ளிட்ட உழவு கருவிகளையும், உழவுத் தொழிலில் மனிதரின் துணை ஜீவியாகவும்,உழவுக்கான எருவை கொடுக்கும் ஊக்கியாகவும் இருக்கும் மாடுகளையும் வணங்கி வந்தனர். இதுவே மாட்டுபொங்கல் ஆனது.



காணும் பொங்கல்:
     விழாவின் முடிவாக, எல்லோரும் புத்த பகவனை வணங்கி, ஒருவரை ஒருவர் கண்டு, மூத்தவர்களிடம் ஆசி பெற்று,விருந்துண்டு, மற்றவர்க்கும் கொடுத்து, அவர்களிடமும் பெற்று மகிழ்வான நாளைக்காணும் பொங்கல் நாளே காணும் பொங்கல் நாள்.


ஆக, சங்கறாந்தி திருநாளென்றும், போதிப்பண்டிகையென்றும், போகிப்பண்டிகையென்றும், பொங்கல் திருநாளென்றும்,உழவர் பெரு நாளென்றும் கொண்டாடப்படும் “போகிப் பொங்கல்” பூர்வ பௌத்தர்களின் அதாவது இன்றைய தலித்துகளின் திருவிழா என்பதே உண்மை. இந்த வரலாற்றுண்மையை போதித்து, எல்லோருக்கும் வாழ்த்துக்களைக் கூறி, பண்டங்களை பகிர்ந்து, சாக்கிய முனியாம் பகவன் புத்தரை வணங்கியும் போற்றியும் கொண்டாடி, பண்டிதர் அயோத்திதாஸர், அண்ணல் அம்பேத்கர் போன்ற சாக்கிய ஞானிகளின் வழியில் புத்தம் சரணடைவோம்! தம்மம் சரணடைவோம்!! சங்கம் சரணமடைவோம்!!!