வியாழன், 13 டிசம்பர், 2012

இது நம் ஆண்டைகளின் நாடு  

 - க .திருவள்ளுவன்

     தருமபுரி கலவரத்திற்கு பிறகு டாக்டர். ராமதாஸ் மீண்டும் தனது சாதிய முகத்தை அப்பட்டமாகக்  காட்டிவருகிறார். தானொரு 'சாதிவெறியன்' தான் என்று அவரே குறிப்பிடுகிறார். சமூக கூட்டணி எனும் பெயரில் சாதி  சங்கங்களை   ஒருங்கிணைக்கிறார். தனித் தொகுதிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீதும் கடுமையான வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நண்பர் தொல்.திருமாவளவன் விழுப்புரத்தில் (12.12.12) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "வாஜ்பாய், சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் அமர்ந்து அரசியல் செய்த பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அடையாளம் தெரியாத முகவரி இல்லாத சாதி அமைப்புகளுடன் சேர்ந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர் (ராமதாஸ்) செய்துள்ள சாதனைகள் எல்லாம் கேள்விகளுக்குறிய நிலை ஏற்படும். இதனை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

           தனக்கு நட்பாக இருந்த ராமதாஸ் இன்று தனக்கெதிரியாக நடந்து கொள்கிறாரே என்ற வேதனை திருமாவளவனுக்கு இருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் ஏதோ ராமதாஸ் கடந்த சில நாட்களாகத்தான் சாதிய அரசியல் செய்கிறார் என்று கூறுவதைப்போலவும் திருமாவளவனின் பேச்சில் தெரிகிறது. திருமாவும் ராமதாசும் சில ஆண்டுகளாக ஒரே மேடையில் இருந்தார்கள். ஆனால் அந்த மேடை தலித் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைக்கான மேடையல்ல. அது இலங்கை பிரச்சனைக்கான மேடை. சாதி இந்துக்களுக்கான தேசியம் அமைப்பது தொடர்பான மேடை. அந்த மேடையால் தலித்துகளுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் ராமதாஸ் போன்ற சாதி இந்துகளுக்கு உண்டு. ஏனெனில் சாதி இந்துத் தலைமையிலான ஒரு நாடு உருவாவது ராமதாஸ், வைகோ போன்ற சாதி இந்து தலைவர்களுக்கு இலாபகரமானது. நாம் இப்பொழுது இலங்கைப் பிரச்சனைக் குள் போக விரும்பவில்லை. திருமா-ராமதாஸ்நட்புக்கானமேடையை கொடுத்து இலங்கை பிரச்சனை தானே தவிர தலித் - வன்னியர் பிரச்சனையல்ல என்பதை கூறவே அதைப் பேசுகிறோம்.
            
                    திருமாவளவனோடு அதிகமான நெருக்கம் காட்டிய ராமதாஸ் அந்த கால கட்டங்களில் தலித் விடுதலைக் குறித்தோ வன்னியர் உள்ளிட்ட சாதி இந்துக்களின் சாதிய போக்கை கண்டித்தோ வெளிப்படையாக பேசியவரல்ல. ஏனெனில் ஒரு சராசரி வன்னியர் மனதில் இருக்கும் சாதிய நிலைப்பாடுதான் ராமதாஸின் மனநிலையிலும் உள்ளது. ஒரு சராசரி வன்னியன் கூட உள்ளூரில் தலித்துகளை ஒடுக்கவே சிந்திப்பான். ஆனால் ராமதாஸோ தலித்தல்லாத எல்லா தரப்பினர்களையும் இணைத்து தலித்துகளை தமிழகம் முழுக்க ஒடுக்க திட்டமிடுகிறார் . எந்த விதத்திலும் ராமதாஸ் தன்னை சாதி கடந்த மனிதராக காட்டிக் கொள்ளமுடியாது. சாதியை நேசிப்பவர் அவர். 'தான் ஒரு சாதி வெறியன்தான்' என்று அவரே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர் சாதிய சமூகத்தை ஆதரிப்பவர். ஆனால் திருமாவளவனோ "சாதிசங்களோடு சேராதீர்கள்" என்று ராமதாசுக்கு வேண்டுகோள் விடுகிறார். திருமாவளவன் போன்றவர்கள் தொடர்ந்து ராமதாசிற்குள் 'ஒரு சிறந்த மனிதனை'  தேடித்தேடி ஏமாந்து போவது வேதனையானது. சாதிசங்களோடு ராமதாஸ் இணையக்கூடாது  என்று கூறுவதன் மூலம் நண்பர் திருமா சொல்ல வருவது என்ன?  ராமதாஸ் சாதிசங்கங்களுக்கும் சாதிய நடைமுறைக்கும் அப்பாற்பட்ட தலைவர் என்பதா? சாதிசங்கங்களோடு இணையாமல் ராமதாஸால் இருக்க முடியும் என்று திருமாவளவன் நம்புகிறாரா? அப்படி நம்புவது அபத்தமானது. ராமதாசின் அரசியல் துவக்கம் எதன் அடிப்படையில் இருந்து வந்தது என்பது இங்கு வெளிப்படை. ராமதாசின் அரசியல் பாதையை நாம் மறந்து விடமுடியுமா என்ன. அந்த பாதை முழுவதும் சேரியின் சாம்பல் நிறைந்திருக்கிறது. தலித்துகளின் ரத்தம் உறைந்திருக்கிறது. வன்னியர்களுக்கெதிரான சமூகமாக ராமதாஸ் சுட்டிக்காட்டியது பார்ப்பன சமூகத்தையோ வேளாள சமூகத்தையோ அல்ல. தலித் சமூகத்தை, ஆயிரம் ஆண்டுகளாக சாதியின் கொடூர அடக்குமுறையில் எல்லாவற்றையும்   இழந்து தம் உழைப்பை இந்த நாட்டிற்கு கொட்டிக்கொடுத்த தலித் சமூகத்தைதான் தம் எதிர் சமூகமாக தம் சாதியினருக்கு காட்டிக்கொடுத்தார். அதன் விளைவாகத்தான் ஆயிரக்கணக்கான சேரிக்குடிசைகள் கொளுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான தலித்துகள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தலித்துகள் படுகாயம் பட்டனர். ராமதாஸ் வந்த பிறகு தான் தலித்துகள் ஒடுக்கப்பட்டனர் என்று நாம் கூறவில்லை. ஆனால்  தலித்துகளின் மீதான அடக்குமுறையை அமைப்பாக்கி வலுப்படுத்தியவர் ராமதாஸ் தான். அவரது வன்னியர் சங்கம் வந்த பிறகுதான் ஏரளமாக குடிசைகள் எரிந்தன. குடிசை கொளுத்துவதை தம் அரசியல் வடிவமாக அடையாளமாக ஆக்கிக்கொண்டவர் ராமதாஸ். இத்தகைய அரசியல் அடித்தளத்தைக் கொண்ட ராமதாஸ், எப்படி சாதி சங்கங்களோடு இணையாமல் இருக்கமுடியும். ராமதாஸ் வன்னியர் சங்கத்தை நடத்துகிறார். பிற சமூகத்தை சார்ந்த சிலர் பங்கேற்றாலும் 'பாட்டாளிமக்கள்' கட்சியும் சாதி சங்கம் தான். இதை திருமாவளவனே பலமுறை கூறியிருக்கிறார். அப்படி இருக்க ராமதாஸ் சாதி சங்கங்களை இணைக்காமல் இருக்கமுடியுமா என்ன? சாதி சங்கங்களுக்கு ராமதாஸ் தான் தலைமை கொடுக்க முடியும். கொள்ளைக்கூட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய கொள்ளைக்காரன்தான் தலைமை ஏற்கமுடியும். அந்த வகையில் சாதி சங்க கூட்டமைப்பிற்கு ராமதாஸ் தலைமை ஏற்பதில் நமக்கெந்த குழப்பமும் இல்லை. நண்பர் திருமாவளவனுக்குஎன்ன குழப்பமென்று தெரியவில்லை மேலும், திருமா தன்னுடைய பேட்டியில் 'வாஜ்பாய், சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் அரசியல் செய்த ராமதாஸ் சாதிசங்கங்களோடு சேரலாமா? என்றும் கேட்கிறார். இதன் மூலம் வாஜ்பாய், சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மகா புனிதமானவர்கள், சாதிய சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்ல வருகிறாரா என்று தெரியவில்லை. அப்படி சொன்னால் அது தவறு மட்டுமல்ல குற்றமும் கூட. ஆம் சமூக விரோதிகளை சனாதன வாதிகளை சமூகத்தின் நல்லடையாளமாகக்காட்டுவது ஒருவகையான சமூக குற்றம். ராமதாஸ் வட்டார சாதி தலைவர் என்றால் வாஜ்பாய், சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் மாநில இந்தியதேசிய அளவிலான சாதித்தலைவர்கள் அவர்களின் கட்சிகளுக்கும் சாதிசங்கங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் எவையுமில்லை. சாதி சங்கள்கள் எப்படி சாதியைப்பாதுகாக்கின்றனவோ அப்படித்தான் இவர்களின் கட்சிகளும் சாதியைப்பாதுக்காக்கின்றன, பயன்படுத்துக்கின்றன, தங்கள் கட்சியினர் சாதிப்புத்தியோடு இருப்பதையும் இயங்குவதையும் அவர்கள் அனுமதிக்கிறார்கள் வரவேற்கிறார்கள். அதனால்தான் நத்தம் காலனியை அனைத்துக்கட்சிகளிலும் உள்ள சாதி வெறியர்கள் கொளுத்துக்கிறார்கள். ஒரு வன்னியன் வன்னியர் சங்கத்தில் இருப்பதற்க்கும் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளில் இருப்பதற்கும் பெரிய வேறுபாடில்லை. அவனால்   எந்தமைப்பில் இருந்தாலும் எந்தக்கட்சியிலிருந்தாலும் அவனால் வன்னியனாகவே இருக்கமுடியும். அவன் ஒரு தலித் வாயில் மலம் திணிக்க முடியும். செருப்பணியும் தலித்தை தாக்கமுடியும். சாதிமாறி காதல் செய்யும் தலித்தை கொலை செய்ய முடியும். சேரியை சூறையாடவும் கொளுத்தவும் முடியும். அவனை அவன் சார்ந்த அரசியல் கட்சிகட்டுப்படுத்தாது. ஏனெனில் எல்லாக் கட்சிகளும் பார்ப்பனியத்திற்கும் மனுதர்மத்திற்கும் கட்டுப்பட்டவைகள். எங்கள் ஊருக்கு அருகில் (கடலூர்மாவட்டம்) தொளார் சேரியை கொளுத்தி சாம்பலக்கியவர்கள் வன்னியர்களாக மட்டுமின்றி கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இப்படி ஏராளமான வடுக்கள் உண்டு. மேலும் வாஜ்பாய், சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் ராமதாஸை விட ஆபத்தானவர்கள். அவர்களிடம் தலித்துக்களை ஒடுக்குவதற்கு கூடுதல் பலமாக அரசும் அதிகாரமும் இருக்கின்றன. அந்த அதிகாரத்தைக் கொண்டு தலித்துகள்  உரிமை கோரும்போதெல்லாம் அடக்கியே வருகின்றனர். எனவே எந்த விதத்திலும் அவர்களை மகாத்மாக்கள் ஆக்கிவிடக்கூடாது. நம்முடைய எதிரிகள் திண்டிவனம், தைலாபுரத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். சகோதரி மாயாவதி பதவிஉயர்வில் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்ற "மசோதாவை" கொண்டு வர முயற்சி செய்யும்போதெல்லாம் இந்திய ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து எதிர்க்கும் நிலையைப்பார்க்கிறோம். எனவே தான் நாம் கூறுகிறோம், இந்த நாடு நமக்கான நாடில்லை, இங்குள்ள அரசுகள் நமக்கான அரசுகள் இல்லை,இங்குள்ள கட்சிகள் நமக்கான கட்சிகள் இல்லை, அதனால் தான் நம் அம்பேத்கர் கூறினார்: "இது நம்முடைய தாய் நாடல்ல; நம் ஆண்டைகளின் நாடு."