சனி, 30 ஜனவரி, 2016

மகாத்மாக்கள் வந்தார்கள் போனார்கள்.

தி.ஸ்டாலின்.

(தி இந்து நாளிதழில் ஜனவரி 29, 2016 அன்று வெளிவந்த சமஸ்-னுடைய 'காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?' என்னும் கட்டுரைக்கான எதிர்வினையாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.)

ஒரு ரயில் பயணத்தில், அண்மையில் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவரும் டாக்டர் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் செயல்பாட்டாளருமன ரோகித் வெமுலாவின் மரணத்தைக்குறித்து இரண்டு இளைஞர்களுடனான தமது உரையாடலின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் கட்டுரையளர். 'சமூக விடுதலைக்கு காந்தியை எப்படி ஒரு வழிக்காடியாக கருத முடியும்?', 'இந்தியாவில் தலித் அரசியலை சிசுவிலேயே சிதைக்கப்பார்த்தவர் காந்தி', 'காந்தி தலித்துகளுக்காகப் பேச ஆரம்பித்ததெல்லாம் பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகுதானே? அதுவும் அம்பேத்கர் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் பேச ஆரம்பித்தார்' என்றெல்லாம்  சமஸுடன் உரையாடிய இளைஞர்கள் பேசிவிட்டார்களாம். அவர்களின் 'கசப்பான வார்த்தைகளை' தாங்க முடியாமல்தான் இந்தக்கட்டுரையை எழுதியிருக்கிறார் சமஸ். உண்மையில் அந்த இளைஞர்கள் சரியாகவே பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை 'காந்திய வெறுப்பு அரசியலுக்குப் பின்னுள்ள சதிகளுக்கு' உடந்தையானவர்களாகப் பார்த்து இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். 'காந்திரஸை ஒழித்து தம் அரசியலை முன்னே கொண்டுவர அநேகமாக இந்தியாவின் ஏனைய அரசியல் கட்சிகள் பெரும்பாண்மையும் காந்தி எதிர்ப்பை ஒரு செயல்திட்டமாகவே முன்னெடுப்பதாக' கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். கட்டுரையாளரே குறிப்பிடுவதைப்போல் காங்கிரசும் காந்தியை கைகழுவிக்கொண்டிருக்கையில் ஏன் காங்கிரசை வீழ்த்த காந்தியை தாக்கவேண்டும் என்று தெரியவில்லை.

காந்திக்கும் சாதிக்குமான உறவைப்பற்றி கட்டுரையாளர் இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிட்டு காந்தி சாதிக்கு எதிரானவர் எனக்கூறுகிறார். ஒன்று காந்தி சிறுவயதில் தன் வீட்டுக்கு கழிப்பறை சுத்தம் செய்யவரும் உக்கா என்னும் தோட்டியை தொட்டு பேசியது தொடர்பானது. இன்னொன்று அவர் வெளிநாட்டுக்கு போகத்தடையாக இருந்த சாதித்தடையை மீறியது தொடர்பானது.

உக்காவை தொட்டு பேசும் 12 வயது சிறுவனான காந்தியை அவரது அம்மா குளித்து தலைமூழ்கி உக்காவைத்தொட்ட தீட்டைக்கழிக்கச்சொல்லி வலியுறுத்துவாராம். உக்காவைத்தொட்டால் என்ன பாவம் என்று விளையாடிக்கொண்டே கேட்பாராம் காந்தி. இதைக்கூறி காந்தி சின்னவயதிலேயே தீண்டாமைக்கு எதிராக சிந்தித்துவிட்டார் செயல்பட்டார் என்கிறார் கட்டுரையாளர். இந்த நிகழ்வை 1921 இல் ஏப்ரல் 14, 15 தேதிகளில் ஆமதாபாத்தில் நடந்த மாநாட்டில் குறிப்பிட்ட காந்தி இன்னொன்றையும் குறிப்பிட்டார். 'பள்ளிக்கூடத்திலிருந்த போது பலநேரங்களில் நான் தீண்டப்படாத மாணவர்களை தொட நேரிடும். என் பெற்றோரிடம் நான் இதை ஒருபோதும் மறைக்கமாட்டேன். இந்த தீட்டுக்குப் பிறகு தூய்மையடைவதற்கு யாராவது ஒரு இஸ்லாமியரை தொட்டால் போதும் தீட்டுக் கழிந்துவிடும் என்று என் அம்மா எனக்குச் சொல்வார். என் அம்மாவிடம் நான் கொண்டிருந்த மதிப்பு மரியாதையினால்தான் இப்படிச்செய்தேனே தவிர, ஒரு போதும் மதக்கடமை என்று கருதிச் செய்ததில்லை' என்று கூறுகிறார் காந்தி. அதாவது உக்காவை தொட்டால் என்ன பாவமென்றும் கேட்கிறார், பள்ளியில் தலித் மாணவர்களை தொட்ட தீட்டையும் கழிக்கிறார். அதற்கு மதம் காரணமில்லை அம்மா மீதான பாசமே காரணமென்கிறார். சரி இதெல்லாம்  பண்ணிரெண்டு வயதுடைய ஒரு பள்ளி மாணவனுக்கு எவ்வளவு ஆழமாக புரியும். எனவே அதை விட்டுவிடலாம். அதன் பிறகாவது காந்தி சாதியைக் குறித்து என்ன புரிதலுக்கு வந்திருந்தார் என்பதையும் பார்த்துவிடலாம். அவர் வெளிநாட்டுக்கு போகத்தடையாக அவரது சாதி வழக்கம் இருந்ததையும் அதை மீறியே அவர்-அதாவது சாதியக்கட்டுப்பாட்டை உடைத்து- வெளிநாட்டிற்கு சென்றதையும் கூறி அதை சாதியத்திலிருந்து நடத்திய மீறலாகக் காட்டுகிறார் கட்டுரையாளர். இதையெல்லாம் ஒரு சமூகப்புரட்சியின் துவக்கமாகப்பார்ப்பது வேடிக்கையானதாகவே தெரிகிறது. உள்நாட்டில் பள்ளிக்கூடத்தில் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாத அண்ணல் அம்பேத்கர் வெளிநாடு சென்று படித்ததைவேண்டுமானால் சமூகத்தடைகளின் உடைப்பாகப் பார்க்கலாமே தவிர காந்தி வெளிநாடு சென்றதை பெரிய மாற்று சிந்தனையாகப் பார்ப்பதில் அர்த்தமில்லை. மேலும், 'மத, சாதி கலாச்சாரத்தைக் கைவிடமாட்டேன்' என்று தனது தாய்க்கு சத்தியம் செய்துக்கொடுத்துவிட்டே அவர் வெளிநாடு சென்றார்.
இளம்பிராயத்திலேயே தீண்டாமையை வெறுத்து, சாதிக்கட்டுப்பாட்டை மீறி வெளிநாடு சென்றதாகக் கட்டுரையாளரால் புகழப்படும் காந்தி வெளிநாட்டிலிருந்து வரும்போது சாதிய மனத்தை சுத்தமாக தூக்கியெறிந்துவிட்டு வந்திருந்தாரா என்றக்கேள்விக்கு கட்டுரையாளர் என்ன பதிலைத்தருவார் எனத்தெரியவில்லை. ஆனால் காந்தி சாதிய மனத்தோடுதான் வந்திருந்தார் என்பதே சரியான பதிலாக இருக்கிறது.
1915 இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியிருந்தார் காந்தி. பள்ளிக்கூட மாணவனாக இருந்தபோதே சாதிக்கு எதிராக காந்தி சிந்தித்தார் என்று கூறும் கட்டுரையாளர் வழக்கறிஞர் பட்டமெல்லாம் பெற்று, வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய காந்தி சாதியைக்குறித்து என்னமாதிரியானக் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்றும் கூறியிருக்கலாம். நவஜீவன் என்னும் குஜராத்தி மொழிப்பத்திரிக்கையில் 1921-22 இல் காந்தி சாதிக்குறித்த தமதுக் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். 'சாதி அமைப்பைத் தோற்றுவித்த சமூகம் ஈடற்ற அமைப்புத்திறனைக் கொண்டிருப்பதாகச் சொல்லவேண்டும்' என்று  கூறி இந்து அமைப்பை திறன்மிக்க அமைப்பென்று புகழும் காந்தி, இன்னொரு இடத்தில் 'சுயராஜ்யத்துக்கான வித்துக்களை சாதி அமைப்பில்தான் காணவேண்டும்' என்று கூறுவதன் மூலம், சுயராஜ்ய உணர்வை வளர்க்க சாதிய உணர்வை வளர்க்கவேண்டுமென்பதை சூசகமாகக் கூறவருகிறார்.

சேர்ந்து உண்ணுவதை 'ஜமா பந்தி'களின் மூலம் பிற்காலத்தில் காந்தியவாதிகள் செய்துகாட்டினாலும் காந்திக்கு முதலில் அதில் விருப்பமில்லை. 'மலம் கழிப்பதைப்போலவே உணவு உண்ணுவதையும் தனிமையில்தான் செய்யவேண்டும்' என்று கூறினார் காந்தி. இதுபோலவே கலப்பு மணம் என்பதையும் அவர் எதிர்த்தார்.  'சாதி என்பது கட்டுப்பாட்டுக்கு மறுபெயராகும். அது இன்ப நுகர்ச்சிக்கு வரம்பு விதிக்கிறது. ஒருவர் இன்ப நுகர்ச்சிக்கான சாதி வரம்புகளைக் கடப்பதை சாதி அனுமதிப்பதில்லை.சேர்ந்து உண்ணுவதற்கும் கலப்பு மணம் புரிவதற்குமான தடை போன்ற சாதிக்கட்டுப்பாடுகளின் பொருள் இதுதான்' என்று கூறினார் காந்தி. ஆனாலும் காந்தி 1925 இல் இக்கருத்துகளிலிருந்து வேறுபட்டு பேசத்துவங்கினார். முன்பு 'சாதி அமைப்பு சமுதாயத்தின் இயற்கை ஒழுங்காகும்' என்றும் 'சாதி இல்லாததால்தான் பிற நாடுகள் இந்தியா போன்ற நன்மையை அடையவில்லை' என்றும் பேசிய காந்தி 1925 இல் சாதியமைப்பை விமர்சிக்க ஆரம்பித்தார். 'சாதியானது கட்டுப்பாட்டைக்கூறவில்லை. தடைச்சுவர்களைத்தான் குறிக்கிறது. கட்டுப்பாடு பெருமைக்குரியது, சுதந்திரத்துக்கு உதவக்கூடியது. ஆனால் தடைச்சுவர் என்பது சங்கிலியைப் போன்றது. அது கட்டிப்போடுகிறது' என்று கூறிய காந்தி கலப்பு மணத்திற்கு ஆதரவாக 'கலப்புமணத்திற்கு இருக்கும் தடை முன்னேற்றத்திற்கு ஏற்றதல்ல, வீழ்ச்சிக்கே உதவும்' என்றும் கூறினார். காந்தியிடம் வந்துவிட்ட இந்த ஆச்சர்யமான மாற்றமும் ஏமாற்றமாகிப்போனது. ஏனெனில் அவர் சாதியை விமர்சிக்க ஆரம்பித்தாலும் வர்ணாசிரமத்தை ஆதரிக்க ஆரம்பித்தார். அதாவது சாதியத்திற்கு மாற்றாக காந்தி முன்வைத்தது சாதியை பாதுகாத்து வளர்த்தெடுத்த வர்ணாசிரமத்தையேயாகும். முன்பு சாதியை இயற்கையானது என்றவர் இப்போது 'வர்ணாசிரமம் மனிதனின் கண்டுபிடிப்பல்ல். அது இயற்கையானது' என்றார். எப்படியாகினும் இந்து மதத்தைக் காத்து நிற்பதையே தமது கடமையெனக் கிடந்தவர்தான் காந்தி என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்களைக்காட்டமுடியும். சமஸ் கூறுவதைப்போல் 28,000 பக்கங்களில் காந்தியின் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அக்கருத்துக்கள் எதன் வடிவத்திலாவது இந்து மதத்தைக் காத்துவளர்க்க வேண்டுமென்பதாகத்தான் இருக்கமுடியும்.

புனா ஒப்பந்தத்தை சிலவரிகளில் கடந்துசென்று காந்தியைக் காப்பாற்றுகிறார் கட்டுரையாளர். ஆனால் காந்தியின் வன்மம், வஞ்சகம், துரோகம் என சகல மோசமான முகங்களையும் அப்பட்டமாக காட்டியது பூனா ஒப்பந்த காலக்கட்டம்தான். முதல் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்காத காங்கிரஸ், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் பங்கேற்புக்குப்பின் தலித்துகளுக்கு மத்தியில் எழுந்த 'தனி சிறுபான்மை இனம்' என்ற அடையாளத்தின் மூலம் உண்டான பதற்றத்தில் காந்தியை அனுப்பிவைத்தது. காங்கிரஸ் சார்பில் 20 பேர் கலந்துகொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு கூறியிருந்தும் காந்தியை மட்டும் காங்கிரஸ் அனுப்பியது. அதற்கொரு முக்கியக்காரணமும் இருந்தது. தலித்துகளுக்கான தனிப்பிரதிநிதித்துவத்தை மறுக்க வேண்டும். அதேவேளை மறுப்பவர் சக்திவாய்ந்தவராக இருந்தால் அந்த திட்டம் அதிகம் சிரமமில்லாமல் நிறைவேறும். எனவே காந்தியே சரியான நபர். மகாத்மா செய்வதெல்லாம் மகத்துவமானதுதான். அதில் மறுப்புக்கென்ன வேலை என்று தெளிவாகத்திட்டமிட்டு காந்தியும் காங்கிரஸும் செயல்பட்டார்கள். வட்டமேசை மாநாட்டில் தலித்துகளை தனித்துவமான சிறுபான்மை இனமாக அறிவிக்கவேண்டுமென அண்ணல் அம்பேத்கரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசனாரும் கோரியதைக் கடுமையாக எதிர்த்தார் காந்தி. 'இந்து,முஸ்லீம்,சீக்கியர்களின் சிக்கல்களை தனிவிதமாய்க் கையாள்வதற்கு காங்கிரஸ் இணங்கிவிட்டது. அதற்கு சரியான வரலாற்றுக்காரணங்கள் உண்டு;ஆனால் காங்கிரஸ் எவ்வடிவத்திலும் அந்தக்கோட்பாட்டை விரிவுபடுத்தாது' என்றார் காந்தி. அத்தோடு நிற்காமல் காந்தி இஸ்லாமிய பிரதிநிதிகளிடமும் தலித்துகளுக்கு எதிரான பேரம் நடத்தினார். அதுவரை காங்கிரஸ் எதிர்த்துவந்த முஸ்லீம்களின் தனித்தொகுதி உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து அண்ணலின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டுமென்று அவர்களை மூளைச்சலவைச் செய்துபார்த்தார். ஆனால் அவர்கள் அப்படியெந்த எதிர்நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இது இன்னும் காந்தியை பதற்றமாக்கியது.

காந்தியின் அத்தனை அபத்தகாரியங்களுக்குப்பின்னும் அண்ணலின் கோரிக்கையை அரசு ஏற்கவிருந்த சமயத்தில்தான் அவர் எரவாடா சிறையில் தலித்துகளின் தனித்துவ உரிமையை எதிர்த்து சாகும்வரை உண்னாவிரதம் என்ற நாடகத்தைத் துவக்கினார். 'சாதியை எதிர்ப்போர்களை என் உயிரைக்கொடுத்தேனும் எதிர்ப்பேன்' என்று 1922 இல் கூறிய காந்தி 'தீண்டப்படாதவர்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் என்பதை என் உயிரைக்கொடுத்தேனும் தடுப்பேன்' என்று 1932 இல் கூறினார். தலித்துகளுக்கான தனிப்பிரதிநிதித்துவம் சாதியமைப்பை அசைத்துப்பார்த்துவிடும் என்ற பதற்றமே அவரை உண்ணாவிரதம் இருக்கவைத்தது. அந்த உண்ணாவிரத்தைக் கண்டு காந்தியின் அரசியல் சீடர் நேருவே கோபம்கொண்டார். 'அரசியல் சிக்கல்களுக்கு தீர்வுகாண விழையும் போது மத உணர்வுகளைப்பயன்படுத்துவது கண்டும் அடிக்கடி கடவுள் பெயரை உச்சரிப்பதைக்கண்டும் காந்தி மீது எனக்கு கடுங்கோபம் உண்டாகிறது. பட்டினிப்போராட்டத்திற்கு தேதி கூட கடவுள்தான் குறித்துக்கொடுத்தார் என்று கூறும் அளவுக்குச் சென்றுவிட்டார். என்னே மடத்தனமான முன்மாதிரியை மக்களுக்குக் காட்டுகிறார்' என்று பூனா ஒப்பந்தம் நேரத்தில் காந்தி இருந்த உண்ணாவிரத்தைக் கண்டிக்கிறார் நேரு. இப்படி மதஉணர்வால் உண்டான பதற்றத்தில் காந்தி உண்ணாவிரதம் இருக்க அது ஒட்டுமொத்த இந்திய சேரிகளையும் அச்சுருத்தலாக்கி நின்றது. அதனால்தான் அச்சம்பவங்களை 'தீண்டப்படாதமக்கள் மீது காந்தியும் காங்கிரசும் செய்த போர்பிரகடணம்' என்றார் அண்ணல் அம்பேத்கர். இதைக்குறித்தெல்லாம் பேசாமல் பூனா ஒப்பந்தம் மூலம் காந்தி தலித்துகளுக்கு விமோச்சனம் கொடுத்தார் என்று சொல்லுவது நேர்மையாகாது.

அடுத்ததாக கட்டுரையாளர் முன்வைக்கும் முக்கியமான விஷயம் காந்தியால் துவங்கப்பட்ட 'ஹரிஜன சேவா' அளவுக்கு தலித் அமைப்புகள் கூட எதையும் தலித்துகளுக்குச் செய்ததில்லை என்கிற குற்றச்சாட்டு. 'காந்தி தலித்துகளைப்பற்றி பேசியதெல்லாம் பூனா ஒப்பந்தத்திற்கு பிறகுதானே' என்று ரயில் பயணத்தில் ஒரு இளைஞர் கேட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் கட்டுரையாளர். உண்மை அதுதான். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது கட்டுரையாளருக்கு என்பதுதான் தெரியவில்லை. பூனா ஒப்பந்தம் முன்னும்பிறகும் காங்கிரசுக்கும் தலித்துகளுக்கும் இடையே தேசமெங்கும் ஒரு பெரும் பிளவு ஏற்பட ஆரம்பித்தது. காந்தியையும் காங்கிரசையும் மதித்த பல தலித்தலைவர்கள் கூட இதில் காந்தி மீதும் காங்கிரஸ்மீதும் சினம் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டின் கல்விமகானும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி சகஜானந்தா காந்தியிடம் நன்மதிப்பைக் கொண்டிருந்தார். ஆனாலும் இவ்விஷயத்தில் அவர் காந்தியை துரோகி என்று குறிப்பிட்டார். இத்தகைய நிலை பரவுவதை விரும்பாத காங்கிரஸ் அவசர அவசரமாக 1932 செப்டம்பர் 30 ஆம் தேதி பண்டித மாளவியாவின் தலைமையில் ஒருக்கூட்டம் கூடியது. அதாவது, அகில இந்திய தீண்டாமை எதிர்ப்புக்கழகம் என்ற அமைப்பை உருவாக்குவதே நோக்கம். தில்லியை தலைமையமாகக் கொண்டு பிற மாநிலங்களிலும் கிளைகள் உருவாக்கவேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டு, ஜி.டி.பிர்லா இதன் தலைவராகவும், அமிர்தலால் வி.தக்கர் பொதுச்செயலாளராகவும் இருப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமைப்பை 'தீண்டப்படாதார் சேவா சங்கம்' என்று பெயர் மாற்றி 1932 டிசம்பர் 9 இல் அறிவித்தார் காந்தி. அதிலும் திருப்தியுறாமல்தான் அவ்வமைப்பின் பெயரை 'ஹரிஜன சேவா சங்கம்' என்று மாற்றினார். பிர்லாவும் தக்காவும் 1932 டிசம்பர் 3 ஆம்தேதி இவ்வமைப்பின் வேலைத்திட்டத்தை பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கினார்கள். அதாவது தலித்துகளுக்கான வேலைத்திட்டம் என்பது காங்கிரசால் புனா ஒப்பந்தத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது. அந்த இளைஞர்கள் சொன்னதை பிறகெப்படி தவறென்றும் சதியென்றும் சொல்கிறார் கட்டுரையாளர்?

கட்டுரையாளர் குறிப்பிடுவதைப்போல் சில பணிகள்  ஹரிஜனசேவா சங்கத்தால் நடத்தப்பட்டிருக்கலாம். கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் குறித்தும் அவர்களின் பணிகள் குறித்தும் நாமும் அறிந்திருக்கிறோம். ஆனால் எந்த தலித் அமைப்பும் தலித்துகளுக்கென இல்லை காந்தியவாதிகளே இருக்கிறார்கள் என்றக் கருத்தை எப்படி ஏற்பது? தமிழ்நாட்டில் எத்தனை வன்கொடுமைகள் தலித்துகள் மீது நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் எத்தனை காந்தியவாதிகள் வந்திருக்கிறார்கள்? இந்த சில பத்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான குடிசைகள் எரிக்கப்பட்டுவிட்டன. எந்த காந்தியவாதி வந்து நின்றார்? வெண்மணியில், மேலவளவில், பரமக்குடியில், குறிஞ்சாங்குளத்தில், சென்னகரம்பட்டியில், திட்டக்குடியில், சிதம்பரத்தில், விழுப்புரத்தில் என இன்னும் பல இடங்களில் தலித்துகளின் ரத்தம் ஓடியதே, எத்தனை ஹரிஜன சேவகர்கள் வந்தனர்? மதுவுக்கெதிராக செல் ஃபோன் டவரில் ஏறி மரணிக்கும் காந்தியவாதிகள் ஏன் தீண்டாமை ஒழிக்க எந்த டவரிலும் ஏறுவதில்லை. தமிழ்நாட்டில் தலித்துகளுக்கான உரிமைக்கு போராடி உயிர்விட்ட தலித் இயக்கவாதிகளின், தலித் ஆதரவாளர்களின், கம்யூனிஸ்ட்டுகளின் பட்டியல் இருக்கிறது. எத்தனை காந்தியவாதிகள் சாதி எதிர்ப்பால் உயிர்விட்டிருக்கிறார்கள். உயிர்விடுவதை வலியுறுத்தவில்லை. ஆனால் உயிரையும் கொடுத்து சொந்த மக்களுக்காக உழைக்கும் தலித் அமைப்புகளை கீழ்நிலைப்படுத்த கதர்சட்டை கசங்காத காந்தியவாதிகளை உயர்த்திப்பிடிக்கும் அரசியல் ஏன்? காந்தியவாதி என்று யாரையும் தலித்துகளுக்குத்தெரியாது. அவர்களுக்கு அவர்களுடனாக இணைந்து வாழ்ந்து அவர்களுக்காக சிந்தித்து செயல்பட்டவர்களைத்தான் அடையாளம் தெரிகிறது.அப்படித்தான் அண்ணலை இந்தியாவின் எந்த மூளையில் இருக்கும் தலித்தும் தன்னுடைய வழிக்காட்டியாக ஏற்கிறார். காந்தியை வழிக்காட்டி என்று சொல்லுவதை தலித்துகள் ஏற்காமல் இருப்பதற்கு காரணம் சமஸ் கூறுவதைப்போல் வரலாற்று சதியோ, வெறுப்பரசியலோ அல்ல. அறிவு ஜீவிகளுக்கு தெரிவதைப்போல் மக்களுக்கு சதியோ வெறுப்போவெல்லாம் தெரியாது. தனக்காக உழைப்பவர் யார் என்பது தெரியும். அவர்களுக்காக உழைத்த அண்ணல் அப்படித்தான் தலைவரானார். தலித்துகளிடம் வந்து யாரும் அண்ணல் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று புலம்பிக்கண்ணீர் விட்டு கட்டுரையெல்லாம் எழுதவில்லை. அது யதார்த்தமாக நடந்தது.

இறுதியாக. சமஸ் மட்டுமல்ல, இன்னும் பலரும் கூட காந்தியில்லாமல் தலித்விடுதலை சாத்தியமில்லை என்கிற வாதத்தை திரும்பத்திரும்ப முன்வைக்கிறார்கள். உண்மையில் இது எதைக்காட்டுகிறதென்றால், மீண்டும் மீண்டும் தலித்துகளுக்கு தலித் அல்லாத சாதி இந்துவே தலைவராக வேண்டுமென்ற சாதியக்கோட்பாட்டைத்தான். துவக்கத்தில் காந்தியேகூட அண்ணல் அம்பேத்கரை பார்ப்பனர் என்றுதான் நினைத்திருக்கிறார். ஏனெனில் தலித்துக்கு தலித் அல்லாதவனே தலைவனாக ஆகமுடியும் என்கிற சமூக ஏற்பாட்டைத்தான் காந்தியும் நம்பினார். என்னதான் முற்போக்கு புரட்சிகர சிந்தனைக்கு தம்மை உட்படுத்திக்கொண்டாலும் ஒரு இந்துவால் தனது சாதியக் கூறுகளிலிருந்து விடுபட்டுவரமுடியாமல் போனதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. காந்தியும் ஒரு உதாரணமாகி நின்றார். அவரது வழியில் இங்கே பத்திரிக்கையாளர், ஜனநாயகவாதி, மாற்றுசிந்தனாவாதி என பலரும் அந்த நிலையிலேயே இருக்கிறார்கள். தலித்துகளுக்கு எது வழி என்று தெளிவாகத்தெரியும். பண்டிதர் அயோத்திதாசர், பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற மாமனிதர்கள் அவ்வழியை மீண்டும் அடையாளப்படுத்திவிட்டுதான் சென்றிருக்கிறார்கள். பௌத்தம் என்னும் மாபெரும் சமுத்திரம் எமக்காக இருக்கும்போது காந்தியம் என்னும் காலாவதி கோட்பாடு தேவையில்லை. எங்களின் பயணத்தில், எங்களுக்காகவே வாழ்ந்த எங்கள் தந்தை அண்ணல் அம்பேத்கர் துணையாக இருக்கும்போது காந்தி போன்ற நேர்மையற்ற எதிரிகளின் துணை தேவையேயில்லை.