வியாழன், 21 ஜனவரி, 2016

தொடரும் துப்புரவுத்தொழிலாளர்களின் பலி.


க.திருவள்ளுவன்.

காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரியாணி ஹோட்டலில் கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்ய ஹோட்டல் நிர்வாகத்தால் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட குமார், சரவணன், வேல்முருகன் ஆகிய தொழிலாளர்கள் கழிவுநீர்த்தொட்டியின் விஷவாயுவால் தாக்கப்பட்டு உயிரிழந்தின. அவர்களுடன் அந்த ஹோட்டல் பணியாளர் ஒருவரும் இதில் பலியாகியுள்ளார். இந்த நான்கு பேரின் பலிக்கும் ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியமும் அரசின் அலட்சியமும்தான் காரணங்கள். பல விதிமுறைகளும் சட்ட வழிகாட்டுதலும் இருந்தாலும், மிகவும் கொடிய பணியாண துப்புரவு பணியில் எவ்வித பாதுகாப்பு நிலையும் இங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை.
துப்புரவு பணியாளர்கள் இப்படி பலியாவது இங்கே அன்றாடச் செய்திகளாக மட்டுமே ஆகியிருக்கிறதே தவிர அதைக்குறித்து அரசும் அரசை இயக்கும் அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளுவதே இல்லை. இந்த மோசமான அலட்சியத்துக்கு பின்னுள்ள முக்கியக்காரணம் துப்புரவுத்தொழிலாளிகள் தலித்துகளாகவும் இருப்பதுதான். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும் துப்புரவு பணியில் அவர்களை ஈடுபடுத்தாமல் முழுக்கவும் தலித் மக்களையே ஈடுபடுத்தும் அரசுக்கும் அரசியலுக்கும் பின்னுள்ள உண்மை அவற்றின் தலித் விரோதம்தான். இத்தகைய அரசுகளும் அரசியலும் இங்கே நிகழும் வரை நம் மக்கள் இப்படி சாக்கடையில் மூச்சடக்கி உயிர்விடுவது தொடரும்தான்.
நாம் பலமுறை அரசுக்கு கோரிக்கைகளை வைத்துக்கொண்டும் அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்று போராடிக்கொண்டும்தான் இருக்கிறோம். நமக்கான அரசு நம்மால் உருவாக்கப்படும்போதுதான் இவைத்தீரும். அதற்கும் முன் நாம் கேட்கும் சில கோரிக்கைகள் இவை:
1.துப்புரவு பணியை அனைவரும் செய்யும் பணியாக மாற்றிட அரசு திட்டம் வகுக்கவேண்டும்.
2.துப்புரவு பணியில் அனைத்து தரப்பின் இடஒதுக்கீடும் நிரப்பப்பட வேண்டும்.
3.துப்புரவு பணியின் போது இறப்பவர்களுக்கு நட்ட ஈடுத்தொகையாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு துப்புரவு பணியல்லாத அரசு வேலையை வழங்க வேண்டும்.
4.ஒவ்வொரு அரசு துப்புரவு தொழிலாளி மீதும் அரசு 25 இலட்ச ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும்.
5.தற்காலிகமாக தணியார் நிர்வாகங்களால் தினக்கூலிகளாக துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளிக்கு தினக்கூலி என்பதை மணிக்கூலியாக ஊதியம் கொடுக்கவேண்டும். இதன்படி மணிக்கு 1000 ரூபாய் தொழிலாளிக்கு அளிக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு காப்பீடும் அந்நிறுவனங்கள் செய்யவேண்டும். சுகாதார துறையின் அனுமதியின் அடிப்படியில் சரியான பயிற்சியைப் பெற்ற தொழிலாளர்களை அனைத்துவித பாதுகாப்புடன் துப்புரவுப்பணியில் ஈடுபடுத்தவேண்டும்.
6.அரசு சார்பில் துப்புரவு பணியாளர் வேலையை ஒப்பந்ததாரர் மூலம் செய்யக்கூடாது. நேரடியாக அரசே பணியாளர்களை அனைத்துவகையான பாதுகாப்புகளுடன் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
7.துப்புரவுப்பணியின் பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவணம் செலுத்தாத அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
8.துப்புரவுத்தொழிலாளர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
9. துப்புரவு பணியாளர்கள் மட்டுமே வாக்களித்து தேர்வு செய்யப்படும் சட்டமன்றம்,பாராளுமன்ற, ஊராட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும்.
10. அரசு துப்புரவுப் பணியாளர்களுக்கான வேலை நேரத்தை (ஷிப்ட்) பாதியாக(4 மணிநேரம்) குறைக்கவேண்டும். ஊதியம் 40 ஆயிரத்துக்கும் குறையாமல் இருக்கவேண்டும்.
11.துப்புரவு பணியாளர்களுக்கு மாதாமாதம் அரசு செலவில் முழு உடல் பரிசோதனைகளையும் மருத்துவ உதவிகளையும் கொடுக்கவேண்டும்.

ரோகித் வெமுலா மரணம் பௌத்த-பார்ப்பனிய மோதலின் தொடர்ச்சியே!

க.திருவள்ளுவன்.


இந்தியாவின் அனைத்து சேரிகளின் மீதும் நெடுங்காலமாக இந்துக்களால் யுத்தம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ரோகித் போன்றவர்கள் அதில் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். யுத்தத்திற்கு தீர்வு யுத்தமாகாதுதான். ஆனால் யுத்தத்தை யுத்தத்தால்தான் நிறுத்தமுடியுமென்றால் அதற்கு தலித்துகள் தயாராக வேண்டியிருக்கிறது.
அறிவார்ந்த பௌத்த அறநெறியைக் கொண்டு அடக்கப்பட்டமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்துப்பாசிசத்தை வீழ்த்தி, சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தைக்கைப்பற்றித் தம்மையும் பிறமக்களையும் பாதுகாத்திடவேண்டும். அதற்கு இந்து பிற்படுத்தப்பட்டவர்களின் வருகை இல்லாமல் போனால் இந்துக்கொடுங்கோலர்களிடமிருந்து தலித்துகள் தம்மை விடுவித்துக்கொண்டு தங்களின் பாதுகாப்புக்கான, சுதந்திரத்துக்கான பௌத்த நாட்டை உருவாக்கிக்கொள்ளுவதே சரியாகும். அப்படியில்லாமல் போனால் ரோகித்துகளின் மரணங்கள் தொடரவேச்செய்யும். ஏனெனில் ரோகித் போன்றவர்கள் கொல்லப்படுவது பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்துக்குமான மோதலின் தொடர்ச்சியேயாகும்.
நம் முன்னெடுக்க வேண்டிய கோரிக்கைகள்!
1. தலித்துகளுக்கு தனிப்பல்கலைக்கழங்களை தேசம் முழுவதும் துவக்கவேண்டும். அவற்றின் கீழ் தலித்துகள் மட்டுமே பயிலும்,பயிற்றுவிக்கும் கல்லூரிகள் உருவாக்கப்படவேண்டும். துணைவேந்தர், முதல்வர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் தலித்துகளாகவே இப்பல்கலைக்கழங்களிலும் கல்லூரிகளில் நியமிக்கப்படவேண்டும்.
2.கலை,வரலாறு,அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் என அனைத்து துறைக் கல்விகளையும் கட்டணம் ஏதுமின்றியே தலித் மாணர்வகளுக்கு வழங்கவேண்டும். \
3.தலித் மாணவர்களுக்கான விடுதிகள் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பாதுகாப்பு உறுதியையும் கொண்டு மேம்படுத்தப்படவேண்டும்.
4.தலித்துகளுக்காக ஒதுக்கப்படும் கல்விக்கான நிதிகளை தலித்துகளை மட்டுமேக் கொண்ட கவுன்சில்கள் மூலம் செலவிடப்படவேண்டும்.
5.இறந்த(படுகொலையான) தலித் மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு நட்ட ஈடாக ரூபாய் 1 கோடிரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிலம் வழங்கப்படவேண்டும்.
6.தலித் மாணவர்களின் மரணங்கள் குறித்து தலித் தலைமையிலான தனி விசாரணைகள் அமைத்து விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றங்கள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.
7. உடனடியாகா, இந்தியா முழுவதும் உள்ள தலித் மாணவர்களின் நிலைக்குறித்து தலித் தலைமையில் அரசால் அமைக்கப்படும் குழுக்களைக்கொண்டு ஆராய்ந்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்