வியாழன், 29 நவம்பர், 2012

தருமபுரி கலவரம்


தருமபுரி கலவரம்

                             ராமதாஸ் பேட்டிக்கு மறுப்பு.
                                                                                .திருவள்ளுவன்  

 
    17.11.2012 அன்று இரவு 9 மணி அளவில் "மக்கள்தொலைக்காட்சியில்" ஒளிபரப்பபட்ட பா...நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி காண நேர்ந்தது.
ராமதாஸ் கூறியவற்றில் சில:
  • தர்மபுரி நிகழ்ச்சி வன்னியர்களுக்கும் தலித்துக்களுக்குமான மோதலே அல்ல.
  • சம்பவத்தில் நாயுடுகள்,செட்டியார்கள்,நாயக்கர்கள் போன்ற சாதிகளும் ஈடுப்பட்டன.
  • பா... மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்கள் மட்டுமல்ல தே.மு.தி..,.தி.மு..,கம்யூனிஸ்ட்டுகள்,.தி.மு..,தி.மு.., விவசாயசங்கம் போன்ற கட்சிகளும் இருந்தனர்.
  • உண்மையில் ஓரிருவீடுகளுக்கு மட்டும் தான் தீ வைக்கப்பட்டது. மற்றஎல்லாவீடுகளுக்கும்தலித்துகளே தீவைத்துக்கொண்டனர்.
  • தலித்துக்கள் பிற சமூகத்து பெண்களை காதலித்து நாடக திருமணம் நடத்தி ஏமாற்றிவிடுகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் மட்டும்தலித்துகளிடம் ஏமாற்றமடைந்த வன்னிய பெண்களின் எண்ணிக்கை2000. .
  • மகாபலிபுரம் மாநாட்டில் குரு பேசிய பேச்சுக்கு தலித்தல்லாத பிறசாதிமக்கள் பாராட்டுதெரிவித்தார்கள்.  


    தர்மபுரி தாக்குதல்-தாக்குதலென்று கூறமுடியாது. சாதிவெறியர்களின் படையெடுப்பு என்றுதான்கூறவேண்டும். கலவரம் நடந்தபிறகு நான் மற்றும் இரண்டு வழக்குறிஞர்கள் மேலும் சில தோழர்களுடன் நத்தம் காலனி பகுதிக்கு சென்று வந்திருக்கிறேன். நான் இதற்கு முன்பாக பல கலவரபகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால், தர்மபுரி தாக்குதலைப்போல் இதுவரை நான் கண்டதில்லை. வீடுகள் எரிக்கப்பட்டன என்றவுடன் எல்லாம் குடிசை கூரை வீடுகளாகத்தான் இருக்குமென்ற நம்பிக்கையில் சென்றோம். இந்த 65 ஆண்டுகால சுதந்திர நாட்டில் சேரிகளின் அடையாளமாக குடிசைகள் தானே இருக்கின்றன. நத்தம் சேரி பகுதிகளும் அப்படித்தான் இருக்குமென்று நினைத்துப்போனோம். 28ஆண்டுகளுக்கு முன்பாக போலிஸாரால் கொல்லப்பட்ட நக்ஸல்பாரி தோழர்கள் அப்பு-பாலன் ஆகியோரின் சிலை திறப்புவிழாவிற்கு இதே நாயக்கன்கோட்டைக்கு சென்றிருந்தேன். 



   அதன் பிறகு நத்தம் சேரிதாக்குதலை காணசென்றேன். முன்புக்கு எவ்வளவோ தலித்துக்களின் நிலைமாறியிருக்கிறது. தாக்கப்பட்ட அனைத்து வீடுகளும் ஓடு வேய்ந்த மற்றும் கான்ரீட் போட்ட கல்வீடுகள்தான். இங்குள்ள தலித்துக்கள் சென்னை,கோவை,திருப்பூர்,பெங்களூரு போன்ற நகரங்களில் உழைத்துச்சம்பாதித்து தமிழகத்தில் பிற சேரிகளை காட்டிலும் கொஞ்சம் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறார்கள். இந்த வளர்ச்சிதான் ஆதிக்க சாதியர்களுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. அந்த வயிற்றெரிச்சல் தான் அந்தசேரிகளை
எரித்திருக்கிறது. கட்டிக்கொள்வதற்கு துணிகளையோ, உணவுப்பொருட்களையோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. எல்லோரையும் வெளியேற்றிவிட்டு பணம், நகைகள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என தங்களுக்குத் தேவையானவற்றைஎடுத்துக்கொண்ட
சாதிவெறியர்கள் வீட்டின் எல்லா அறைகளுக்குள்ளும் பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்திருக்கிறார்கள். 50 க்கும் மேற்பட்ட 


 
இருசக்கர வாகனங்களும் TATA ACE போன்ற வாகனங்களும் கொளுத்தப்பட்டிருக்கின்றன.  




  
    பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாடப்புத்தகங்கள், சான்றிழ்கள் சாம்பலாக்கப்பட்டிருக்கின்றன. நத்தம்காலனி, கொண்டம்பட்டி காலனி, அண்ணாநகர் காலனி ஆகிய மூன்று காலனிகளிலும் எரிக்கபட்ட வீடுகளின் எண்ணிக்கை 268. சேதப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை பல 6 மணி நேரத்திற்கு மேலாக நடைப்பெற்ற இந்த வன்முறையில் கிட்டத்தட்ட 2000 பேர் பயன்ப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 100 க்கும் மேற்ப்பட்டசாதி இந்து பெண்களும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பெண்களிடமும் மாணவர்களிடமும் சாதிவெறியை
புகட்டி புகட்டி வெறியேற்றிருக்கிறார்கள் சாதித்தலைவர்கள். இந்த வன்முறைக்காக அரசுரேஷன் கடைகளிலிருந்து 7 பேரல்மண்ணெண்ணெய் திருடிகொண்டுவரப்பட்டது.
கிட்டத்தட்ட 500 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவதுமிக தெளிவாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய வன்முறை. குழந்தைகளின் கழுத்தில் கத்தியைவைத்துக்கொண்டு பெண்களிடம் நகைகளைப்பறித்திருக்கிறார்கள். பீரோக்களை
உடைத்து நகைகளையும், தீபாவளிசெலவுக்காக வெளியூரில் வேலைசெய்யும் தலித்துக்கள் அனுப்பிய பணம் உள்பட லட்சக்கணக்காண ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
தலித்மக்களின் கோவில்நகை 5 கிலோதங்கம் பறிபோயிருக்கிறது.
இப்படிபறிப்போயிருக்கும் தங்கத்தின் மதிப்புமட்டும் சுமார் 3.5 கோடிக்கு மேல். அந்த தாக்குதலில் தலித்மக்களின் மொத்த இழப்பு என்பது சுமார் 35-50 கோடிவரை இருக்குமென்கிறார்கள் அப்பகுதி மக்கள். இப்படித்திட்டமிட்டு சாதிவெறியோடு நடத்தப்பட்ட வன்முறையை ஏதோகுடும்ப சண்டை போல்கூறுகிறார்.
பிரச்சனை வன்னியர்களுக்கும் தலித்துக்களுக்கும்தான் நடந்தது.
வன்னியர்களின் தலைமையில் தான் தாக்குதல்நடந்தது. ராமதாஸ் கூறுவது போல்
வேறுசாதியினரும் இணைந்திருக்கலாம். தலித்துக்களை சேரிகளைதாக்குவதற்கு எல்லா
ஆதிக்கசாதிகளும் ஒருங்கிணைவது புதிய விஷயமல்ல. சேரிமீதான ஒடுக்குமுறையில்
ஆதிக்க சாதிகள்கட்சிகளை கடந்து ஒருங்கிணைவதும் புதிதல்ல. இதை காரணம்காட்டி வன்முறைக்கு தலைமை
கொடுத்தவர்கள் தப்பிவிடமுடியாது என்பதை ராமதாஸ் கருத்தில் கொள்ள வேண்டும். வன்கொடுமைத்தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்துவதும் அப்படி ஒருசட்டம் இருப்பதாலேயே கலவரங்கள் நடப்பதற்கு காரணமென்றும். கூறுகிறார்
இந்த சட்டத்தின் மூலம்தலித்துகளுக்கு ஆதரவாக எத்தனை
தீர்ப்புகள் வந்திருக்கின்றன என்பதை ராமதாஸ் தான் கூற வேண்டும்.
அதே நேரத்தில் இந்தசட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு இயந்திரங்கள் பெரும் மெத்தனத்தைகாட்டுவதை இங்குகுறிப்பிடுகிறேன். மேலும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தைவிட இன்னும் வலிமையான தேசியபாதுகாப்புச்சட்டம் போன்ற சட்டம் தேவைப்படுகிறது.
அப்புறம் ராமதாஸ் இன்னொரு அரிய கண்டுப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார். அதாவது தலித்துக்கள் தங்களின் வீடுகளையும் வாகனங்களையும் தாங்களேகொளுத்திக்கொண்டார்களாம். இதைஅறிவுடையோர் யாரும் சொல்லவும்மாட்டார்கள் நம்பவும்மாட்டார்கள். இப்படிசொல்வதன் மூலம் வீடுகளை இழந்து உடைமைகளற்று பனிக்காலத்தின் கொடும்குளிரிலும் மனவேதனையிலும் தம்குழந்தைகுட்டிகளோடு வீதியிலே படுத்துகிடக்கும் அகதிகளாக தவித்துகிடக்கும் எமது ஆயிரக்கணக்காண தலித்துமக்களை கொச்சைபடுத்தியிருக்கிறார் ராமதாஸ்.
மேலும் மகாபலிபுரத்தில் நடந்தவன்னியர் மாநாட்டில் சாதிவெறியோடு பேசிய குருவின் பேச்சைநியாயப்படுத்துகிறார்.
அன்று குருபேசியது ஒருமாநாட்டிற்கான சிறப்புபேச்சல்ல. கனன்று கொண்டிருக்கும் சாதிநெருப்பில் ஊற்றப்பட்ட
எண்ணெய் அது. அதுதான் தர்மபுரியை எரித்திருக்கிறது.கடலூர் மாவட்டத்தில் 2000 வன்னியபெண்கள் தலித்துக்களால் ஏமாற்றுப்பட்டிருப்பதாக ராமதாசுவும்,குருவும் கூறுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சாதிமறுப்பு திருமணத்தையொட்டி நடந்த நிகழ்வை குறிப்பிடவிரும்புகிறேன்.
இதுநடந்தது 2003 ஜீலை 8. என்னுடைய
ஊருக்கு அருகில் விருத்தாசலம் - கடலூர் நெடுஞ்சாலையில் இருக்கிறது
புதுக்கூரைப்பேட்டை. இதன்
அருகில் நெடுஞ்சாலைக்கு உள்ளேதள்ளியிருக்கும் கிராமம் குப்பநத்தம். புதுக்கூரைப்பேட்டை வன்னியபெண்ணான கண்ணகியும் குப்பநத்தம்
சேரியைசார்ந்த முருகேசனும் காதலித்து வீட்டிலிருந்து வெளியேறி திருமணம்செய்துகொண்டனர்.

                               முருகேசனன்                                                                 கண்ணகி

               அதன்பிறகுவன்னியபிரமுகர்கள் முருகேசனின் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் வஞ்சகமாக பேசி அவர்களை அழைத்துவரச்செய்துள்ளனர்.பிறகு ஊரே கூடிநின்று அடித்துஉதைத்திருக்கின்றனர்.புதுக்கூரைப்பேட்டையில் நூற்றுக்கணக்கான வன்னிய மக்களின் மத்தியில் முருகேசனின் உறவினர்களை மரத்தில் கட்டிவைத்து விட்டு முருகேசனும் கண்ணகியும் அந்த கொடும் சாதியினரால் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.இறுதியாக இருவரது பிணங்களையும் முந்திரி காட்டிற்கு எடுத்துச்சென்று கொளுத்திவிட்டார்கள் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கும் விருத்தாசலம்  காவல்நிலையத்திற்கும்  DSP அலுவலகத்திற்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 3 கிலோ மிட்டர் தான். இது தான் கடலூர் மாவட்டத்தில் வன்னியதலித் திருமணத்தின் லட்சணம். இப்படிருக்க ராமதாஸ் 2000 வன்னிய பெண்களை தலித்துக்கள் திருமணம் செய்துவிட்டதாக கூறுவதை நம்பமுடியவில்லை. அப்படி நடந்திருந்தாலும் தவறில்லை. கலப்பு திருமணம் ஒன்றும் சட்டத்திற்கு புறம்பானதுமில்லை மற்றபடி தலித்துக்கள் திட்டமிட்டே காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் திட்டமிட்ட பொய்பிரச்சாரமே. இந்த நாட்டில் தலித்துக்கள் தான் பெரும்பான்மையாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். ராமதாசு கூறும் கடலூர் மாவடத்தில் சில
ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த மிகக்கொடுரமான

இரண்டு நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுகிறேன். தருமபுரி கலவரம்கோ.ஆதனூர் பொன்னருவி என்னும் தலித் பெண் வன்னிய வெறியர்களால் சிதைக்கப்பட்டு கொடுரமாக சித்திரவதைக்கு ஆட்பட்டு பிறப்புறுப்பில் மரக்கழி செருகப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். மேலப்பாலையூர் என்னும் ஊரில் சகுந்தலா என்னும் சேரிப்பெண் வன்னிய சாதியைச்சார்ந்த தன் காதலன் மற்றும் அவனது சக வன்னிய நண்பர்கள் ஆகியோர்களால் கூட்டாக வன்புணர்ச்சிக்காளக்கப்பட்டு இரண்டுமார்புகளும் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். இன்னும் பட்டியல் எங்களிடமிருக்கிறது. ஆனால் எந்த வன்னியர் வீட்டையும் தலித்துக்கள் கொளுத்தவில்லை. குடிசைகொளுத்துவது தலித்துக்களின் பண்பாடுமில்லை.
இறுதியாக இலங்கை தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்ட போது துடி துடித்த இராமதாஸ் தர்மபுரி தலித்துகளின் வீடுகள் தாக்கப்படும் போது அவர்களே தாக்கிக்கொண்டார்கள் என்று கூறுவது என்ன மாதிரியான அரசியல் பார்வை. கடல் கடந்து நீளும் தொப்புள்கொடி தர்மபுரிக்கு நீளாததன் காரணமென்ன. இலங்கையில் அடித்தவர்களை குற்றவாளிகள் எனக்கூறும் ராமதாஸ் தர்மபுரியில் மட்டும் அடிப்பட்டவர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதின் நோக்கமென்ன? தேசியம்,தமிழ்,திராவிடம்,இடதுசாரியம்,முற்போக்கு என எந்த வகையான முகமூடியை கொண்டும் சாதியின் முகத்தை மறைத்துக்கொள்ள முடியாது. இதோ ராமதாஸின் தமிழனத்தலைவர் என்னும் முகமூடி வீழ்ந்துவிட்டது.