வியாழன், 9 ஜூலை, 2015

இதையெல்லாம் யுவராஜுகள் செய்யலாம் தோழர்கள் செய்யலாமா?

தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியில் நடந்துவரும் ஜாதிவெறிக்கொடுமைகள் குறித்து கருத்துக்கூறியுள்ள கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் சுப்புராயன் அவர்கள் "கொங்கு மண்டலத்தை தென் மண்டலத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது. கொங்கு மண்டலத்தில், அண்மைகாலமாக உருவாகிவரும் சாதிய அடக்குமுறைகளுக்கு சில சாதிய சக்திகள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகளே காரணம்" என்கிறார். அதாவது தென்மாவட்டம் போல் சாதிவெறி மேற்குப்பகுதியான கொங்கு மண்டலத்தில் இல்லையென்றக் கருத்தை வலியுறுத்துகிறார். தோழர் சுப்புராயன் பிறந்து வளர்ந்து வாழும் பகுதி என்பதால் கொங்குப்பகுதிக்கு நற்சான்றை தோழர் வழங்குகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் இப்படிக்கூறுவது அங்கே ஆதிக்கம் செய்யும் ஜாதியினருக்கு நற்சான்று கொடுப்பதாகவே அமையும். சில சாதிய சக்திகளென்று அவர்கூறுவது இன்று அங்கேயுள்ள ஜாதிய அமைப்புகளைத்தான். இன்று அங்கே நடக்கும் தலித் கொலைகளுக்கு அவர்கள்தான் காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவ்வமைப்புகள் இல்லாதக்காலத்தில் கொங்குப்பகுதியில் ஜாதிவெறி இருந்ததா இல்லையா? கம்யூனிஸ்டுகள் பணியாற்றியப்பகுதியாதலால் அப்படியிருந்திருக்காது என்பார்கள் கம்யூனிஸ்டுகள். தோழர் சுப்புராயனும் கூட தலித் தொழிலாளரும் பிராமணத்தொழிலாளரும் ஒன்றாகவே உக்கார்ந்து சாப்பிட்டார்கள் என்கிறார். சாப்பிடும் கேண்டீன் வாழும் இடமல்ல. வாழ்நிலையில் ஜாதி உள்ளதா இல்லையா? கொங்கு நிலங்களெல்லாம் யாரிடம் உள்ளது? அதற்கு ஜாதிக்காரணமில்லையா? தீரன் சின்னமலை பேரவ என்னும் ஜாதிவெறிக் கும்பல் வந்துதான் கவுண்டர்களுக்கு நிலங்களைக்குவித்துக்கொடுத்ததா? அங்கே ஏற்கனவே நிலவிய சாதிவெறிதான் யுவராஜ் போன்றவர்களை உருவாக்குகிறது. யுவராஜ் போன்றவர்களால் ஜாதியின் துணையும் பின்னணியும் இல்லையென்றால் தலைவர்களாக வலம்வரமுடியாது.
மேலும் தோழர் இன்னுமொரு விஷயத்தையும் சொல்கிறார். "உழைக்கும் வர்க்கத்தினரிடம் எந்த பாகுபாடும் இல்லை.
ஆனால், உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் சேர்க்காது என்பதால் அவர்களே உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் வகுப்புவாதத்தை தூண்டுகின்றனர்" என்கிறார். உழைக்கும் வர்க்கத்திடம் எந்தபாகுபாடும் இல்லையென்பது அப்பட்டமாக ஜாதியத்துக்குத் துணைப்போவதேயாகும். இதை இடது சாரிகள் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.  இங்கே உழைக்கும் ஜாதிகள் உண்டு. உழைக்கும் வர்க்கமென்று எதுவுமில்லை. வர்க்கமாக உண்ராதவர்களை வர்க்கமென்று நம்பும் குழப்பவாதிகளாகவே தோழர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் தோழர் சுப்புராயனின் கருத்துக் காட்டுகிறது.  பன்னாட்டுக் கம்பெணிகளின் ஆதிக்கம் உள்ள நாடுதான் இது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள்தான் வகுப்புவாதத்தை(ஜாதிவாதத்தை-தோழர்களுக்கு Class க்கும் Casteக்கும் வித்தியாசம் தெரியுமல்லவா) தூண்டுகிறார்கள் என்பதெல்லாம் உள்ளூர் ஜாதிவெறியைப் பாதுகாக்கும் கருத்துரைத்தவிர வேறில்லை. இதையெல்லாம் யுவராஜுகள் செய்யலாம் தோழர்கள் செய்யலாமா?

--ஸ்டாலின் தி




   

நமக்கான மண்ணில் நமக்கான அதிகாரம் வேண்டும்.

தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் தலைவர் உயர்திரு பி.எல்.புனியா விடுத்துள்ள அறிக்கையில்(9-7-2015).  "கடந்த நான்காண்டுகளில் தமிழ்நாட்டில் 213 தலித்துகள் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.2011 இலிருந்து இதுவரை 118 தலித் பெண்கள்மீது வல்லுறவுத்தாக்குதல் சாதிவெறியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் வெறும் 2 சதவீதத்தை மட்டும் தலித்துகளுக்கு செலவிடும் தமிழக அரசு மீதித்தொகையை வேறு பணிகளுக்கு செலவிடுகிறது" என்று தகவல்கள் வந்துள்ளன.

"தமிழகத்தில் சாதியக்கொலைகளே நடத்தப்படுவதில்லை" என்று சிலமாதங்களுக்குமுன் தமிழக சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் .பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் அதிமுகவின் இந்த நான்காண்டு மாநில ஆட்சியில் 213 தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தேசிய ஆணையம் கூறுகிறது. தமிழக அரசு இவ்வாணையத்தின் தகவலை மறுக்கப்போகிறதா?

"எங்கள் பெண்களுக்கு தலித் இளைஞர்களால் ஆபத்து" என்று மாநாடுப்போட்டும் தொலைக்காட்சிகளிலும் கூச்சல் போட்டுவந்தனர் சாதியவெறியர்கள். ஆனால் நான்காண்டில் 118 தலித் பெண்களை சாதிவெறியர்கள் வேட்டையாடியிருப்பதை தேசிய ஆணையம் வெளிக்கொண்டுவந்திருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் அந்த 'மாதர்குலக் காவலர்கள்'?

"நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதைச்செய்தோம் இதைச்செய்தோம் என்று பட்டியல் போட்டு முழங்குகின்றன தமிழகத்தை ஆண்டக்கட்சியும்  ஆளும்கட்சியும். ஆனால் உண்மை என்ன? இதோ தலித்துகளுக்களுக்கான தேசிய ஆணையம் "தலித்துகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 2 சதவீதம் மட்டுமே தலித்துகளுக்கு செலவிடப்படுகிறது" என்று உண்மையைப்போட்டு உடைக்கிறது. மீதித்தொகை என்ன ஆகிறது? எங்களுடைய பணத்தை எங்களைக்கேட்காமல் எங்களுக்குமில்லாமல் செலவிட ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

தேசிய பட்டியலின ஆணையத்தவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் இத்தகையப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதனால் நடப்பதென்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை. தலித் பிரச்சனைகள் குறித்து வருடத்துக்கு இரண்டுமுறை மாநில அரசு முதல்வர் தலைமையில் கூடிப்பேசவேண்டும் என்று தொடர்ந்து ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால் தமிழகத்தை மாற்றி மாற்றி ஆளும் இரண்டு கட்சித் தலைமகளும் அதையொரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதுகிடையாது. இவ்வாணையத்தை தமிழக அரசு மதிப்பதே இல்லை. அதற்கு காரணம் அது தலித்துகளுக்கான ஆணையம் என்பதுதான். கடந்த திமுக ஆட்சியின் போதும் திமுக அரசு தலித் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லையென்று இதே ஆணையம் சுட்டிக்காட்டியபோது "ஆணையத்தை நான் பிரதமரிடம் புகார் செய்வேன்" என்று கோபப்பட்டார் சமத்துவப்பெரியார். மத்திய அரசு கூடுதலான அதிகாரத்தை தேசிய பட்டியலின ஆணையத்துக்கு அளிக்கவேண்டும். ஆணையம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் மாநில அரசுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கையெடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

நம்மிடையே நிறைய விழிப்புணர்வு வந்துள்ளது. இயக்கங்களும் வந்துள்ளன. ஆனலும் இன்னமும் வஞ்சிக்கப்படுகிறோம். இந்த நிலை மாறவேண்டுமாயின் அரசியல் நடைமுறைகளையும் மாற்றவேண்டும். நமக்கான மண்ணில் நமக்கான அதிகாரம் என்பதே நம் பிரச்சனைகளைக் களையச்செய்யும்.

---ஸ்டாலின் தி