புதன், 12 ஆகஸ்ட், 2015

கால்டுவெல்

கால்டுவெல்லின் பறையர் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்துக்கொண்டிருந்தேன்(தமிழில்-கவிதாச்சரண்).  அதில் விவாதிக்க நிறைய இருக்கிறது. ஆனால் கால்டுவெல் சொல்லியுள்ளதில் ஒன்று எனக்கு பிடித்திருந்தது. அதைத்தான் கால்டுவெல்லைப் படிப்பதற்கும் முன்பே நாங்கள் இங்கே முகநூலில் பலமுறை எழுதியுமிருக்கிறோம். கால்டுவெல் சொல்லியது, " ஒருவன் தன்னைத் தமிழன் என்று அழைத்துக்கொண்டால் அவன் பார்ப்பனனோ அல்லது தாழ்ந்த சாதிக்காரனோ அல்லாத சூத்திரனையே குறிப்பதாகும்".

அதாவது கால்டுவெல் காலத்திலும் நம் தலித்துகள் தமிழன் என்னும் வட்டத்துக்குள் அடக்கிக்கொள்ளவில்லை. சூத்திர திராவிடனும் தலித்துகளை தமிழன் வட்டத்துக்குள் சேர்க்கவில்லை. அதைத்தான் இப்போதைய சூத்திர தமிழ்தேசிய அரசியலும் காட்டுகிறது. அப்படியானால் தலித்துகளாகிய நாம் யார்? அதைத்தான் அண்ணலும் அதற்கும் முன்பாக பண்டிதரும் சொல்லிப்போயிருக்கிறார்கள். நாம் இந்திர தேசமென்னும் இந்திய பூர்வக்குடி பௌத்தர்கள். தமிழன் சூத்திரன். சூத்திரன் இந்து. சூத்திரனுக்கும் தலித்துகளுக்கும் இடையில் உள்ள முரண் இதுதான்.


__ஸ்டாலின் தி

மாட்டுக்கார அமித்ஷாவும் சாதிதேசி குருமூர்த்தியும்.

ஸ்டாலின் தி.

2014 நாடாளுமன்றத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலானக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தப் பிறகு இந்துத்துவா அரசியலின் ஆதிக்கம் மேலும் அதிகரித்து வருகிறது. இஸ்லாமிய, கிறித்துவ மதத்திற்கு முன்பு மாறியவர்களை மீண்டும் கட்டாயப்படுத்தி இந்து மதத்திற்கு அழைப்பது, இந்தியா ஒரு இந்து நாடு என்றக் கருத்தை மீண்டும் மீண்டும் திணிப்பது, தலித்துகளை இந்து வட்டத்திற்குள் வஞ்சகமாகக் கொண்டுவந்து இந்துப்பெரும்பான்மையை வலுவாக்க முயற்சிப்பது என பலவகையிலும் அதன் ஆதிக்கக் கரங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன. குறிப்பாக தலித்துகளை இந்துக்களாக ஆக்குவதை முக்கியவேலைத்திட்டமாக இந்துத்துவா கொண்டிருக்கிறது. அதற்கான சாட்சியாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி (2015) மதுரையில் 'தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மற்றும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சி அமைந்துள்ளது.

"தேவேந்திரர் குலவேளாளர் என்றபெயரை அரசு ஆணையாக வெளியிடவேண்டும்" என்பது இந்நிகழ்ச்சியின் மைய்யக்கோரிக்கையாகும். தேவேந்திரர் என்ற பெயர்பதத்தையே மள்ளர்கள் விரும்புகிறார்கள் என்றால் அதற்கான கோரிக்கையும் அவர்களுக்கு அவசியமானதுதான் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அதனைப் பயன்படுத்தி இந்துத்துவம் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் தமது ஆதிக்க அரசியலைப் பாய்ச்சுகிறது என்பதைக்குறித்தும் பேசவேண்டியிருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடத்தியதில் 'தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை' அமைப்பு தேவேந்திரர் சமூகத்தைச் சார்ந்த சிலரால் நடத்தப்படும் அமைப்பு. 'சுதேசி விழிப்புணர்வு இயக்கம்' என்பதோ இந்துத்துவா அமைப்பு. அதன் தலைமையாகச் செயல்படுபவர் பார்ப்பனரும் இந்து முதலாளிகளுக்கு ஆலோசகராக இருப்பவரும் தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ். தரப்பின் அறிவு ஜீவி(!)யாகவும் இருப்பவருமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தான். தேவேந்திரர்களின் கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏன் முன்வைக்கிறார்கள். சமூக விடுதலைக்கான  தேவேந்திரர்களின் போராட்டங்களில் முன்னெப்போதாவது ஆர்.எஸ்.எஸ்.போன்ற இந்துக் கும்பல் பங்கெடுத்திருக்கிறதா? அரசாலும் ஆதிக்க சாதியாலும் தேவேந்திரர்கள் ஒடுக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும் இத்தகைய இந்துக்கும்பல் எங்கே இருந்தது? யார் பக்கம் இருந்தது? இப்படி நிறையக்கேள்விகள் தேவேந்திரர்களிடமே உண்டு. ஆனால் இந்துக்கும்பலிடம்தான் பதில்கள் இருக்காது.

தேவேந்திரர்களின் கோரிக்கையை தீர்த்துவைப்பதில் உண்மையில் குருமூர்த்தி இயகத்திற்கும் அமித்ஷாவைத் தலைவராகக்கொண்ட பிஜேபிக்கும் அக்கறையிருக்குமா? வாய்ப்பேயிருக்காது என்பதாகத்தான் இதற்கான பதிலாக இருக்கமுடியும்.  ஆனால் தேவேந்திரர்களின் கோரிக்கைகள் நியாமானவை. உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து ஒற்றைப் பெயரில் அழைக்கப்படவேண்டும் என்பது அவர்களின் முக்கியமானக் கோரிக்கை. அதில் குற்றமெதுவுமில்லை. அது இன்னும் தேவேந்திர சமூகத்தை பலமாக்கும். 50 ஆண்டுகால திராவிட அரசியலை நம்பியதால் அடைந்த ஏமாற்றம் தமிழக்த்தின் எல்லாத் தலித் பிரிவுகளுக்கும் உண்டு, தேவேந்திரர்களுக்கும் உண்டு. ஆக, இன்று மத்தியில் ஆட்சியாளர்களாக உள்ள பிஜேபியின் மூலம் தம் கோரிக்கையை நிவர்த்தி செய்ய தேவேந்திர சமூகத்தின் ஒரு அமைப்பு நாடியிருக்கிறது. அது சரியான வழியா இல்லையா என்பது வேறு.  அதுவும் விவாதத்திற்குட்பட்டதுதான். ஆனால் அவ்விவாதத்தை தலித்துகளுக்குள்தான் நடத்திக்கொள்ளலாமேத் தவிர பாரதிய ஜனதாவை விமர்சிக்கிற சாக்கில் தலித் அல்லாதவர்கள் உள்ளே வந்து வழிக்காட்டக்கூடாது. பார்ப்பனியமும் இந்துக்களுடையது, பார்ப்பனிய எதிர்ப்பும் இந்துக்களுடையது என்ற தோற்றத்தை தொடரச்செய்ய தலித்தல்லாதவர்கள் இதிலும் முயற்சிக்கக்கூடாது. அதே வேளை இதேக் கோரிக்கை திராவிட ஆட்சியாளர்களிடமும் ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கின்றன. திராவிட ஆட்சியாளர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கை பாரதிய ஜனதாக் கும்பலிடமும் வைக்கப்படுவதில் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. தலித்துகளுக்கு பாரதிய ஜனதாவும் திராவிட அரசியலும் வெவ்வேறல்ல. எனவே கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கும் போது அமித்ஷாவிடமும் வைக்கலாம் தான். ஆனால் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேவேந்திரர் அமைப்பு இந்தப்பார்வையில்தான் இந்நிகழ்சியை நடத்தினார்கள் என்று சொல்லிவிட நம்மிடம் ஆதாரமில்லை. அதே வேளை அவ்வமைப்பினர் பாரதிய ஜனதாக் கும்பலை பெரிதும் மதித்தே அழைத்திருப்பதாக அவர்களின் செயல்மூலம் தெரிகிறது. அதனால்தான் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் தங்கராஜ் அமித்ஷாவை 'தேவேந்திரர்களின் குலதெய்வம்' என்கிறார். சமூகப்போராளிகளை போற்றும் பாடல்களுக்குப் பதிலாக ஆண்டாள் பாசுரம் பாடல் ஒலிக்கப்பட்டது. ஹெச்.ராஜா தலைமையில் விழா நடத்தப்பட்டது. தேவேந்திரர் அரங்கில் தவிர்க்கவே முடியாத போராளி 'இம்மானுவேலர் சேகரன்' இந்நிகழ்ச்சி அரங்கில் தவிர்க்கப்பட்டிருக்கிறார். ஆக, இந்நிகழ்ச்சி பாரதிய ஜனதா ஆதரவு அமைப்பால்தான் நடத்தப்பட்டது என்பது உண்மையாகிறது. பாரதிய ஜனதா மட்டுமல்ல அதன் பிறப்பிடமான ஆர்.எஸ்.எஸும் கூட இதன் பின்னணியில் இருக்கவாய்ப்பிருக்கிறது. அதை உறுதிப்படுத்தும்விதமாக தமிழக ஆர்.எஸ்.எஸ்.குரலாக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி இந்நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். அவருடைய சுதேசி விழிப்புணர்வு அமைப்பும் பங்காற்றியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களாகக் கலந்துகொண்டவர்கள் இரண்டுபேர். ஒருவர் பாரதிய ஜனதாவின் தேசியத்தலைவர் அமித்ஷா. மற்றொருவர் ஆர்.எஸ்.எஸ்.குருமூர்த்தி. தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டாலும் முக்கியத்துவம் தரப்படவில்லை. அவரும் பாதியிலேயே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஹெச்.ராஜாவுக்கு கிடைத்த முக்கியத்துவம் தமிழிசைக்கு கிடைக்காததற்கு வர்ணபேதமெல்லாம் காரணமா என்பது முதலில் தமிழிசையின் பிரச்சனை. எனவே, நிகழ்ச்சியின் முக்கியமானவர்கள் அமித்ஷாவும்  குருமூர்த்தியும். முதலில் அமித்ஷாவின் உரையைப்பார்த்துவிடலாம்.

"உங்கள் சமூகம் எவ்வளவு உயர்ந்தது என்று மத்திய பிரதேசத்தில் ஒரு மாநாட்டில் ஒரு மாணவன் சமர்பித்த கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். அதில் தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்று பசுவை வணங்கி, தேவேந்திரனை வழிபடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து உங்கள் சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்பட்டது. இந்தியாவிலேயே அனைத்து சாதிகளும் எங்களை பி.சி.பட்டியலில் சேருங்கள் என்று லாபத்தை எதிர்பார்த்து கேட்கும் போது, எங்களுக்கு இடஒதுக்கீடே வேண்டாமென்று கூறும் ஒரு சமூகத்தை இங்குதான் பார்க்கிறேன். உங்களுக்காக பிரதமரிடம் பேசி நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன்" என்று பேசியிருக்கிறார் அமித்ஷா. மேலும், "தானே முன்வந்து இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்வது தேசத்துக்கே முன்னுதாரணம்" என்று கூறியும் மகிழ்ச்சியைத்தெரிவித்திருக்கிறார். இடஒதுக்கீடு பிறபடுத்தப்பட்ட ஜாதி இந்து பெற்றாலும் கூட தலித் மக்கள் பெறுவதைத்தான் தேசவளர்ச்சிக்கே எதிரானது என்பதுதான் சராசரி இந்துவின் மனநிலை. அமித்ஷாவின் மனநிலையும் இந்து மனநிலைதானே. எனவே தேவேந்திரர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என்பதில் அமித்ஷா மனதைப்பறிக்கொடுக்கிறார்.  அடுத்ததாக அவர் பேச்சில் முக்கியத்துவம் பெறுவது மாட்டுக்கும் உயர் நிலைக்கும் உள்ள தொடர்பு பற்றியக் கருத்தாகும். மாட்டை வணங்கும் சமூகம் என்பதால் தேவேந்திரர் மீது மரியாதை வந்ததாகக் கூறுகிறார் அமித்ஷா. இதுதான் தீண்டாமையின் தோற்றுவாய். 

பண்டிதர் அயோத்திதாசர் தீண்டாமைப் பற்றிய ஆய்வில் 'பௌத்தத்தை சார்ந்தவர்கள் இந்துக்களால் பிற்காலத்தில் தீண்டப்படாதோர் ஆக்கப்பட்டனர்' என்றார். அதேக் கருத்தையை புரட்சியாளர் அம்பேத்கரும் தன் ஆய்வின் மூலம் வந்தடைந்தார். ஆனால் புரட்சியாளர் தீண்டாமைக்கு துணைக்காரணத்தையும் கண்டறிவித்தார். 'அதுதான் பசு வழிபாடும் மாட்டுக்கறி உணவும்.' உண்மையில் மாட்டுக்கறியையே இந்துக்கள் தீண்டாமைக்கு முக்கியக்காரணமாக காட்டினர். பௌத்தத்தைக் காட்டினால் ஒருவேளை மீண்டும் மீண்டும் பௌத்தம் நியாபகப் படுத்தப்படும், அதன்விளைவாக பௌத்தம் மீண்டும் எழுந்துவிடும் என்பதால் மாட்டுக்கறியையே தீண்டாமைக்குக் காரணமாகக்கூறி, பௌத்தத்தை தீண்டப்படாதவர் வரலாற்றிலிருந்து அகற்ற கடமையாற்றினார்கள் இந்துக்கள். எனவேதான்  தீண்டப்படாதவரின் அடையாளமாக பௌத்தத்தை விடாமல் மாட்டுக்கறியைக் காட்டியது இந்துமதம். உண்மையில் மாட்டுக்கறியை ஒருகாலத்தில் இந்துக்களும் உண்டார்கள்தான். பசுவை வணங்கியவர்கள் அதன் புனிதத்தன்மையையேக் காரணமாகக் காட்டி அதை உண்டார்கள்தான் என்பதற்கு வேதங்களிலேயே சாட்சிகள் உள்ளன. "வேத காலத்தில் பசு புனிதமாகவே கருதப்பட்டு வந்ததால் அப்புனிதப்பசுவின் இறைச்சியை சாப்பிடவேண்டுமென்று வாஜசனேயி சம்ஹிதையில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக" புரட்சியாளர் கூறுகிறார். ஆரியர்களின் மிகப்பெரிய ரிஷியாகக் கருதப்படும் யாக்ஞவல்கியர் கூட "மென்மையான மாட்டுக்கறியை தின்பேன்" என்கிறார். ஆக, பிராமணர்கள் உட்பட பலரும் மாட்டிறைச்சியை உண்டே வந்திருக்கிறார்கள். ஒருவகையில் தாங்கள் உண்டுக்களிக்கவே பசுவை இந்துக்கள் உரிமைக்கொண்டாடினார்கள் எனலாம். பிறகு, பௌத்ததின் எழுச்சியில் உண்டான அரசுகள் விலங்கள் அழிக்கப்படுவதைத் தடுத்தன. பேரரசர் அசோகர்,  வீட்டு வாத்து,குதிரை,பெண் ஆமை, வௌவ்வால்,குரங்குகள், கலைமான்கள், காட்டுப்புறா, மாடப்புறா பால்கொடுக்கும் வெள்ளாடு உள்ளிட்ட விலங்குகளுடன் பசுவையும் கொல்ல தடைப்போட்டார். தமிழகத்தை ஆண்ட களப்பறையர்களும் பசுவதையை தடைச்செய்தனர். இதற்குக்காரணம் பிராமணர்கள் யாகமென்னும் பெயரிலும் விருந்தென்னும் பெயரிலும் பசுக்களையும் விலங்குகளையும் கூட்டம் கூட்டமாக அழித்ததுதான். வேளான் உற்பத்தியில் கவனம் செலுத்திய பௌத்த ஆட்சியாளர்கள் அதற்கு பேருதவியாக இருந்த பசு உள்ளிட்ட மாடுகளைப் பாதுகாக்கவும் நினைத்திருக்கவேண்டும். பௌத்தத்தின் இந்தக் கருணைச் செயலை ஆதரித்த சமூகம், பசுக்களை கொன்று தின்றுகொண்டிருந்த பிராமணர்களை இழிவாகப் பார்த்தது. இதனால் வீழ்ச்சியுற்ற பார்ப்பனர் தம்மை மேம்படுத்திக்கொள்ள பசு வழிபாட்டை கையிலெடுத்தனர், மாட்டுக்கறியை தின்பதை கைவிட்டனர். "மாட்டிறைச்சியை உண்பதை பிராமணர்கள் நிறுத்தியதன் நோக்கம் பௌத்த பிட்சுக்களிடமிருந்து  மேலாதிக்கத்தைக் கைப்பற்றுவதே" என்கிறார் புரட்சியளர் அம்பேத்கர். அதன் பிறகு வந்த பார்ப்பனிய ஆதிக்கம் பசுவை தமது புனித அடையாளமாக ஆக்கிக்கொண்டு மாட்டுக்கறி தின்பதிலிருந்து தம்மை விலக்கிக்கொண்டது. அதோடில்லாம மாட்டுக்கறியை பூர்வ பௌத்தர்களிடம் திணித்து அதையே தீண்டாமைக்கான காரணமாக ஆக்கியது. "பசு எப்போது புனிதமான பிராணியாக ஆக்கப்பட்டதோ, தலித்துகள் எப்போது மாட்டிறைச்சியை தொடர்ந்து உண்ண ஆரம்பித்தார்களோ, அப்போது அவர்களது கதிப்போக்கு நிர்ணயிக்கப்பட்டது; அவர்கள் சமூக உறவுகளுக்கு அருகதையற்றவர்களாக, அதாவது தீண்டப்படாதவர்களாக ஆக்கப்படனர்" என்கிறார் புரட்சியாளர்.

அமித்ஷாவும் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த மாட்டையே கையில்பிடித்து வருகிறார். பசுவை வணங்குவதே உயர்வின் அடையாளமென்கிறார். இதன் மூலம்  மாட்டுக்கறி உண்ணுவோரை இழிவுபடுத்துகிறார், தீண்டப்படாதவர்களாக கருதுகிறார். மாட்டை முன்வைத்து இந்துக்கள் நடத்தும் அரசியல் குரூரமானது. "பசு நம் தேசியத்தின் கௌரவ அடையாளம். அதைத்தாக்குவது தடுக்கப்படவேண்டும்" என்று கூறுகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர். 2002 இல் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் ஜாஜர் என்னும் கிராமத்தைச்சார்ந்த ஐந்து தலித்துகளை போலிசார் கைது செய்தனர். "மாட்டுத்தோல்களை சந்தையில் விற்க முயன்றனர்" என்பது அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதாவது அவர்கள் பசுவைக் கொன்றுள்ளனர் என்பது வாதம். இந்தச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. திட்டமிட்டபடி கூடிய இந்துக்கும்பல் காவல்நிலையத்திற்குள் புகுந்து அந்த ஐந்து தலித்துகளையும் அடித்து வெளியே இழுத்து வந்து முக்கிய சாலையில் போலிசார் முன்னிலையில் அடித்தேக்கொன்றது. பசுவைக்கொன்றால் கொல்பவனையும் கொல்வோம் என்று கூச்சலிட்டது அந்தக் கொடூர இந்துக்கும்பல். பசுவை உண்மையில் புனிதவிலங்காக இவர்கள் பார்க்கிறார்களா என்றால் இல்லை. பசுவை வணங்கும் எத்தனைப் பிராமணன் அதை மேய்த்துக்கொண்டிருக்கிறான்? கோமியத்தை புனிதமாகக்கருதும் பிராமணப்பெண்கள் எத்தனைப்பேர் சாணத்தைச் சுமந்து உழைக்கிறார்கள்? அதையெல்லாம் செய்வது சேரிமக்கள். ஆனால் அவர்களை  அடித்துக்கொல்ல பசு புனிதமாக்கப்படுகிறது; தலித்தை தீட்டாக்க பசு வணங்கப்படுகிறது. அமித்ஷா தேவேந்திரர்களை புனிதமாக்க பசுவை முன்னிறுத்துகிறார். பசுவின் மூலம் பார்ப்பனியத்தை புனிதமாக்கிச் சென்றிருக்கிறார்.

அமித்ஷாவைவிட இக்கூட்டத்தில் பார்ப்பனியத்தை உமிழ்ந்திருப்பவர் ஆர்.எஸ்.எஸ்.குருமூர்த்திதான். அமித்சாக்கூட ஏதோ மாட்டுபுரோக்கர் போல 'மாட்ட தெய்வமா வணங்கனும்'என்பதோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் குருமூர்த்தி தெளிவான இந்துவாகவே பேசியிருக்கிறார். சோ போன்ற குழப்பவாதிகள் தெளிவான இந்துவாகவும் இருப்பார்கள். சோவின் நண்பரான குருமூர்த்தியும் தானொரு தெளிவான இந்து என்பதை இம்மேடையில் காண்பித்தார். அமித்ஷா போல மாட்டை கும்பிடுங்கள் கோமியம் குடியுங்கள் என்றெல்லாம் பம்மாத்து செய்யவில்லை குருமூர்த்தி. மாறாக, ஜாதி இருந்தாகவேண்டுமென்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டார். அவரின் பேச்சுக்களில் முக்கியமானதாக ஊடகங்களில் வந்தது இதுதான். "நானே தேவேந்திரர்களை தாழ்ந்தவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். தங்கராஜிடம்(இந்நிகச்சியின் ஒருங்கிணைப்பாளர்-தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர்) பேசியபின்புதான் அவர்கள் சாதி பெருமைகள் தெரிந்தது. இந்தியாவில் சாதி அமைப்பை அழிக்க பலபேர் வந்தனர். புதிய சிந்தனைகளை வளர்த்தனர். சட்டங்கள் மூலம் சாதியை உடைக்க பார்த்தார்கள். இன்று இந்தியா உயர்ந்து நிற்கிறதென்றால் அது சாதிகளால்தான். எனவே சாதி இருக்கவேண்டும். ஒவ்வொரு சாதியும் தன்னை உயர்ந்த சாதியாக நினைக்க ஆரம்பித்தால் நாட்டில் சாதி சண்டையே வராது."

இவர் என்ன காரணத்தால் தேவேந்திரர்களை 'தாழ்ந்த சாதி'யாக நினைத்துக்கொண்டார் என்று சொல்லவில்லை. ஒருவரை உயர்ந்தவர் என்று சொல்ல ஒரு காரணமிருக்கும்.அமித்ஷா சொன்னது போல மாட்டைக் கும்பிடுவது போன்று. ஒருவரை தாழ்ந்தவர் என்று கருதவும் காரணம் இருக்கவேண்டுமல்லவா? எந்தக்காரணத்தைக் கொண்டு குருமூர்த்தி தேவேந்திரர்களை தாழ்ந்தவர்கள் என்று நினைத்தார் எந்தக் காரணத்தைச் சொல்லி தங்கராஜ் அதை உடைத்தார் என்பதை குருமூர்த்தியும் தங்கராஜும் சொன்னால் நலம். ஆனால், குருமூர்த்தி போன்றவர்கள் யார் தாழ்ந்தவர் யார் உயர்ந்தவர் என்ற சிந்தனையிலேயே கிடப்பது இதன் மூலம் தெரிகிறது. தன்னை ஒரு சுதேசக் காரனாக காட்டிவரும் குருமூர்த்தி தம் தேசத்தின் ஒரு சமூகத்தை 'தாழ்ந்தவர்களாக' எதன் அடிப்படையில் நினைத்துப்பார்த்தார்? இதுதான் சுதேசியின் கலாச்சாரமா?

இந்துக்கள் தங்களின் சாதிக்கும்பல்களை ஒருங்கிணைக்க தேசம், கலாச்சாரம் போன்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதுண்டு. அச்சொற்களில் சுதேசி என்பதும் ஒன்று. சுதேசி என்றால் இந்துவைப்பொறுத்தமட்டில் ஜாதி என்பதுதான். சுதேச உணர்வு என்றால் ஜாதி உணர்வுதான். ஆனால் சுதேசி என்பதற்கு நம்மிடம் நல்லவிளக்கமும் உண்டு. பண்டிதர் அயோத்திதாசர் அந்த விளக்கத்தை தருகிறார். அதாவது, "சாதிபேதமற்ற நிலையைக்கருதி மக்களை மக்களாகப் பாவித்து வித்தியா விருத்தியையும்(கல்வி வளர்ச்சி), விவசாயவிருத்தியையும், வியாபார விருத்தியையுஞ் சிந்தையிலூன்றி சோம்பலின்றி உழைத்து தேசத்தைச் சீர்பெறச்செய்ய முயல்பவர்களே சுதேசி" என்கிறார் பண்டிதர். மேலும் அவர் " சாதிபேதச் செயலால் ஒற்றுமையைக் கெடுப்போரும், சமயப்பேதச் செயலால் சோம்பலைப் பெருக்கி தேசத்தைக்கெடுப்போரும் சுதேசிகளாகமாட்டார்கள்" என்கிறார்.

ஆக ஜாதிப்புத்தி கொண்ட, ஜாதிப்புத்தியையே கலாச்சாரமாகக் கொண்ட குருமூர்த்தி சுதேசியாகமாட்டார்; சாதிதேசியாகத்தான் அவர் இருக்கமுடியும். இப்படிப்பட்டவர்கள், யாரையும் தாழ்ந்தவர்களாகப்பார்க்கும் கீழ்த்தரமான சிந்தனையை எவ்விதக்கூச்சமும் இன்றி வெளிப்படுத்துவார்கள். அதைத்தான் குருமூர்தி 'தேவேந்திரர்களை தாழ்ந்தவர்கள் என்று நினைத்தேன்'  என்று கூறியதின் மூலம் செய்திருக்கிரார். அடுத்து அவர் புரட்சியாளர் அம்பேத்கரை சாடுகிறார். சாதிவெறியைப் பரப்பவே மாநாடு போடுபவர்கள் கூட புரட்சியாளர் அம்பேத்கரை பொது மேடைகளில் விமர்சிக்க தயங்குவதுண்டு. ஆனால் குரு மூர்த்தி பிராமணன் அல்லவா. யாரையும் 'தாழ்ந்தவராக' நினைக்கும் ஞானமுள்ளவரல்லவா. புரட்சியாளரையும் அவர் அப்படித்தான் நினைத்திருப்பார். " இந்தியாவில் சாதி அமைப்பை அழிக்க பலபேர் வந்தனர். புதிய சிந்தனைகளை வளர்த்தனர். சட்டங்கள் மூலம் சாதியை உடைக்க பார்த்தார்கள்" என்று அவர் சொல்லுவது  புரட்சியாளர் அம்பேத்கரைத்தான். எந்த மக்களுக்காக ஒருவர் போராடினாரோ, அர்ப்பனித்தாரோ அந்த மக்களின் கூட்டத்தில் நின்று அந்தப் போராளியை, தியாகியை, மாமனிதரை இழிவு படுத்துவதற்கு எவ்வளவு திமிர் வேண்டும். அவ்வளவுத் திமிரும் பார்ப்பானுக்கு இருக்கிறது என்பதற்கு சான்றுதான் குருமூர்த்தியின் இந்தப் பேச்சு. ராமரஜ்யம், சுயராஜ்யம் என்னும் பெயர்களில் இந்து ராஜ்யத்தை நிறுவும் கனவில் பார்ப்பனியக்கும்பல்  மிதந்துக்கொண்டிருந்த போது அதற்கு பேரிடியாக வந்து இறங்கியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

காந்திக்கும்பலுக்கு ராமராஜ்யம் கனவு. காந்தியைவிட தீவிர இந்துவாகக்காட்டிக்கொண்ட கும்பலுக்கு சுயராஜ்யம் என்னும் இந்து ராஜ்யம் கனவு. இரண்டுக்கும் வித்தியாசமெல்லாம் இல்லை. அடிப்படை இந்து ராஜ்யம்தான். ஆனால் மக்களாட்சி, அனைவருக்கும் வாக்குரிமை, சமூக பிரதிநிதித்துவம் போன்ற வெடிகளைவைத்து இந்துக்களின் இந்து ராஜ்யதத்தை தகர்த்தார் புரட்சியாளர் அம்பேத்கர். இதை அவர் தீண்டப்படாத மக்களின் நலனுக்காக மட்டுமே செய்தார் என்றும் சொல்லிவிடமுடியாது. ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்காலம் ரத்தக்காடாக ஆகிவிடக்கூடாது என்பதே அவரின் எண்ணன். மக்களாட்ட்சி, ஜனநாயகமே சமூகத்தை அகிம்சையின் வழியில் வளர்த்துச்செல்லும் என்பது புரட்சியாளரின் நம்பிக்கை. ஆனால் இந்துத் தலைமைகளுக்கு இந்து ராஜ்யமே இலட்சியம். கிராமராஜ்யம், ராமராஜ்யம், சுயராஜ்யம் என்று எதன் பெயரிலேனும் இந்து ராஜ்யத்தைக்கட்டமைக்கவே இவர்கள் விரும்பினார்கள். 'சுயராஜ்யம் என் பிறப்புரிமை' என்று முழங்கிய பார்ப்பனரான பாலகங்காதர திலகர் " சுயராஜ்யம் வந்தால் மனு தர்மத்தையே சட்டமாக ஆக்கவேண்டும்" என்றும் முழங்கினார். ஆனால் இந்திய சட்டவிதி புரட்சியாளர் கரங்களில் விழ்ந்தது வரலாறு. ஆக, மனுச்சட்டத்தைக் கொண்டு தொடர்ந்து ஜாதியை உன்னத நிலையில் வைத்திருக்க நினைத்த இந்துக்கும்பலுக்கு புரட்சியாளரின் "எல்லோரும் சமம். யாரும் யார் மீதும் பாகுபாடு காட்டுவது குற்றம்" என்னும் சாட்டையடி எப்படி பொறுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். எனவேதான் குருமூர்த்திக்கும் புரட்சியாளர் எரிச்சலூட்டுகிறார். அந்த எரிச்சலில்தான் குரு மூர்த்தி, சட்டங்களால் சாதியை உடைக்க முடியவில்லை, அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறது என்று இறுமாப்புடன் பேசுகிறார். மேலும் சாதியால்தான் இந்தியா உயர்ந்து இருக்கிறது என்றும் அடித்துவிடுகிறார் குருமூர்த்தி. உலகில் எந்த சமூக விஞ்ஞானி இதை கூறியிருக்கிறார்? இந்தியாவை உலகமே வெறுப்பதற்கு சாதிதான் காரணம். வட்டமேசை மாநாட்டின் போது தாத்தா ரெட்டமைலை சீனிவாசன் தீண்டாமையை விளக்கியபோது பிரிட்டிஷ் மன்னர் காரித்துப்பியது வரலாறு. உலகில் எந்த மூலைக்குச்சென்று சாதியை அதன் கட்டமைப்பை, அதன் வன்முறையைச் சொல்லிப்பாருங்கள். ஜப்பானுக்குச் சென்ற மோடி கூட 'புத்தரின் நாடு' என்றுதான் இந்தியாவைக்குறிப்பிட்டார். 'சாதிகளின் நாடு' என்று சொல்லியிருந்தால் ஜப்பானியர்கள் முகம்சுளிப்பார்களென்று மோடிக்கும் தெரியும்.
மேலும், ஜாதி இருந்தாகவேண்டுமென்கிறார் குருமூர்த்தி. அதாவது சட்டங்களால், காவல் நிலையங்களால் சமூகத்தைக் கட்டுப்படுத்த முடியாதாம். அதற்கு சாதிக்கலாச்சாரம் தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார். சாதிக்கலாச்சாரம் எதைக் கட்டுப்படுத்துகிறது? ஒரு மனிதர் இன்னொரு மனிதரை தொடுவதை கட்டுப்படுத்துகிறது; தெருவுக்குள் செருப்பணிந்து செல்ல கட்டுப்படுத்துகிறது. இன்னும் நூற்றுக்கும் அதிகமான கட்டுப்பாடுகளை சாதி செய்கிறது. சட்டம் அவற்றைத் தீண்டாமை என்று தடைச்செய்துள்ளது. ஆனால் குருமூர்த்தி சமூகத்தைக் கட்டுப்படுத்த சாதிக் கலாச்சாரம் வேண்டும் என்கிறார். இலட்ச்சக்கணக்கான தாக்குதலைத் தொடுத்து கோடிக்கணக்கானவர்களைப் பலியாக்கிய சாதியை ஒருவர் வேண்டுமென்பது எவ்வளவு கொடூரமான உதாராணம். குருமூர்த்தி அப்படி உதாராணமாகி நிற்கிறார்.

சாதிச்சண்டைகளை தீர்க்க ஒரு எளியவழியையும் குருமூர்த்தி சொல்கிறார். குருமூர்த்தி போன்ற குளறுபடி மூளைக்கொண்டவர்களுக்குத்தான் இது போன்ற 'ஐடியா'வெல்லாம் வரும். "ஒவ்வொரு சாதியும் தங்களை உயர்சாதியாகக் கருதிக்கொண்டால் சாதிச்சண்டைகளே வராது" என்கிறார் குருமூர்த்தி. எப்படி ஒவ்வொரு சாதியும் தங்களை அப்படிக்கருதமுடியும். அதற்கான சாத்தியக்கூறு உள்ளதா? நானும் உயர்சாதிதான் என்று ஒரு சூத்திரன் ஶ்ரீரங்க கோயிலில் அர்ச்சகனாக முடியுமா? நானும் உயர்சாதிதான் என்று ஒரு அம்பட்டர் கவுண்டர் வீட்டுகுள் அமர்ந்து தமக்கு வரன் கேட்க முடியுமா? வன்னியர்களும் வேளாளர்களும் ஒன்றாகக் கலந்துவாழ அவர்களின் உயர்சாதி சிந்தனை வழிவகுக்குமா? தங்களை உயர்சாதிக்காரர்களாகக் கூறிக்கொள்ளும் சாதி இந்துக்கள் தங்களின் சகோதரப் பிரிவை ஏற்றுக்கொள்வதுண்டா?  சாதி அப்படியெல்லாம் நடக்கும் வகையில்தான் சாதிக்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா?

மேலும் இங்கே நடக்கும் சாதிசண்டைகள்  இந்துக்களுக்குள் பெரும்பாலும் நடப்பதுமல்ல. சாதியை எதிர்க்கும் தலித்துக்கும் சாதியைக்காக்கும் சாதி இந்துவுக்கும் இடையிலான மோதலைத்தான் சாதிக்கலவரம் என்று கூறுகிறார்கள். உயர்சாதியாகக் காட்டிக்கொள்பவர்களிடம் 'எங்களையும் மனிதராகப் பாருங்கள்' என்று ஒரு தலித் கூறினாலே அங்கே கலவரம்,தீவைப்பு,கொலை, கற்பழிப்பு, சூறையாடலெல்லாம் நடத்தப்படுகிறது. எனவே உயர்சாதி என்ற உணர்வு தீங்கானது, தீங்கையே விளைவிக்கக்கூடியது. வன்முறையை, ஒடுக்குமுறையை கலாச்சாரமாக்கொண்ட உயர்சாதிவெறிச் சாக்கடையில் தலித்துகள் ஒருபோதும் விழப்போவதில்லை என்பதை நாம் குருமூர்த்தி போன்ற காவித்தரகர்களுக்குச் சொல்லிக்கொள்வோம்.  

இறுதியாக, குருமூர்த்தி போன்ற சாதியவாதிகளின் வஞ்சகத்தில் அகப்பட்ட சில தலித்துகளும் சாதி வேண்டும், சாதி ஒழியக்கூடாது என்றெல்லாம் பேசுவது அபத்தத்தின் உச்சம். "சாதி பொருளாதார மேம்பாட்டுக்கும் நன்மை தரக்கூடியதல்ல. சாதி இனமேம்பாட்டுக்கும் உதவவில்லை; அவ்வாறு உதவவும் அதனால் முடியாது. சாதி, இந்துக்களை முற்றிலுமாகச் சிதைத்துச் சீரழித்து சின்னாபின்னமாக்கியுள்ளது" என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். அவர் சொல்படி, சாதி சீரழிக்கும்;சின்னாபின்னமாக சிதைக்கும். சாதி யாருக்கும் ஏற்றதல்ல.சாதி இருக்கக்கூடாதது. சாதி, அழித்தொழிக்கப்படவேண்டியது.