சனி, 20 ஜூன், 2015

யோகக்கலை இந்துத்துவத்தின் சொத்தா?

ஜூன் 21 சர்வதேச யோகா நாளாக அறிவித்து 2014 டிசம்பர் 11 அன்று ஐ.நா.சபை தீர்மானம் நிறைவேற்றியது. 2014 செப்டம்பர் 27 ஆம் தேதி ஐ.நா.சபையிம் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடியின் கோரிக்கையைத்தொடர்ந்து ஐ.நா.இவ்வறிவிப்பை வெளியிட்டது. ஜூன் 21 என்னும் தேதியை பரிந்துரை செய்ததும் மோடிதான். சம இரவு-பகல் நாளாக இதைக்கூறினாலும் ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களில் ஒருவரான ஹெட்கேவரை சிறப்பிக்கும் வகையிலேயே இந்நாளை மோடி தேர்வு செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதில் உண்மையிருக்கவும் வாய்ப்புள்ளது என்பதை மோடியையும் அவரது இந்துத்துவ அரசியலையும் அறிந்தவர்கள் ஒத்துக்கொள்ளவேச் செய்வார்கள். ஆக, துவக்கத்திலேயே யோகா தினம் சர்ச்சையைக்கிளப்பிவிட்டது என்பது உண்மைதான். பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு விரும்பியதற்கும் கடும் கண்டணங்கள் வந்தன. யோகா நிகழ்ச்சிகள் இந்துத்துவா நிகழ்ச்சிகளாக ஆக்கப்படும் என்பதே கண்டணங்களுக்கு அடிப்படையாக இருந்தது. அப்படி ஆக்கப்படும் என்பதையும் நாம் மறுக்கமுடியாது. ஏனெனில் மோடிகளைப்பற்றியும் அவர்களின் இந்துத்துவ அரசியல் பற்றியும் அறியாதவர்களல்லர் நாம்.

இப்போது இப்பிரச்சனை யோகாக்கலையை எதிர்க்கும் திசையை திறந்துவிட்டிருக்கிறது. இந்துத்துவத்தை எதிர்க்கும் இடத்திலிருப்பவர்கள் யோகாவையும் எதிர்த்தாகவேண்டுமென்ற இடத்திற்கும் வரநேர்ந்திருக்கிறது. சரியாகச்சொன்னால் "யோகா இந்துத்துவத்தின் வடிவம்" என்ற பிம்பம் காட்டப்படுகிறது. அந்த பிம்பத்தை ஏற்கனவே இந்துத்துவா சக்திகள் உருவாக்கிவைத்திருக்கிறார்கள்தான். அதையே எலோரும்- இந்துத்துவாவை எதிர்க்கும் சக்திகளும்கூட- ஏற்கும்நிலை வந்திருக்கிறது. இதைத்தான் மோடிகளும் விரும்பினார்கள், விரும்புவார்கள். ஆனால் யோகா இந்துத்துவத்தின் சொத்தா என்பதுதான் இங்கே முக்கியமானக் கேள்வி.

யோகக்கலையை பதஞ்சலி முனி என்பவர்தான் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது, நம்பப்படுகிறது. பதஞ்சலி என்பவர் யார்? பலவாறு அவரின் சரித்திரம் புனையப்படுகிறது. இந்துப்புராணங்கள் அவரை ஆதிசேஷனின் அவதாரம் என்கிறது. சிலர் சித்தர்களில் ஒருவர் என்கிறார்கள். பாம்பின் உடலும் மனிதத்தலையும் கொண்டவர் என்ற கதையும் உண்டு. திருமூலரின் வழிக்காட்டிதான் பதஞ்சலி என்றும் பதஞ்சலியின் 'மஹா பாஷ்யம்'தான் திருமூலரின் திருமந்திரம் என்றும் கூறப்படுகிற்து. அதேவேளை பதஞ்சலி என்னும் பெயரில் ஒரே ஒரு முனிவர் மட்டுமில்லை;நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலி வேறு,யோகக்கலை எழுதிய பதஞ்சலி வேறு,மஹா பாஷ்யம் எழுதிய பதஞ்சலி வேறு என்ற கருத்தும் இருக்கிறது. இப்படிக் கலவையான கருத்துக்களால் உருவகப்படுத்தப்படும் பதஞ்சலியை இந்துக்கள் இன்று தங்களின் ஞான குருவாக சொல்லிக்கொள்கிறார்கள். எனவே பதஞ்சலி உருவாக்கியதாகச் சொல்லப்படும் யோகாக்கலையையும் இந்துத்துவத்தின் அடையாளமாக கருதும்நிலை ஏற்பட்டிருக்கிறது. பதஞ்சலியின் காலமும் தெளிவாக இல்லை.சிலர் கி.மு.2 என்றும் சிலர் கி.மு.4 என்றும் கூறக்காண்கிறோம். மேலும் யோகக்கலை இந்திய தொன்மத்தில் பல்வேறு பகுதியில் பல்வேறு குழுக்களிடம் வெவ்வேறு பெயரில், வடிவில் இருந்து வந்தது என்றும் அவற்றை பதஞ்சலி தொகுத்திருக்கலாம் என்றக்கருத்தும் இங்கே இருக்கிறது என்பதை எல்லோரும் சுலபமாக மறந்துவிடுகிறார்கள். பதஞ்சலி என்ற தெளிவில்லாத காரணத்தைக்கொண்டு யோகாவை மறுப்பது சரியாகுமா என்று நாம் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.
பதஞ்சலிக்கதை இருக்கட்டும்.யோகாவுக்கும் பவுத்தத்திற்கும் உள்ள உறவைக்குறித்தும் பார்ப்போம். புத்தருக்கும் முன்னவே இங்கே இருந்த சாக்கிய, சாங்கிய முனிகளிடம் தியான ஒழுங்கும், உடற்கலையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் முக்கிய சமூகமாக இருக்கும் பறையர்கள் இத்தகைய தியானநிலைகளைக் கடைப்பிடித்து மண்ணையும் விண்ணையும் குறித்து ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். தியானத்தில் காற்றை உடலில் சரியானமுறையில் செலுத்தி(பிராணயாமம்!) உடலையும் மனத்தையும் ஒழுங்குப்படுத்திய பறையர்களே அன்று பூணூல் அணிந்தனர்.  இன்றும் கூட வள்ளுவப்பறையர்கள் உயிர்நீத்தவர்களை தியான நிலையில் அமரவைத்தே அடக்கம் செய்கிறார்கள். இன்று யோகாவை சொந்தம் கொண்டாடும் பார்ப்பணர்கள் உள்ளிட்ட இந்துக்களில் இந்த முறை அடக்கம் இருக்கவில்லை. இப்படி தொன்மையான மக்களிடமிருந்த தியானமும் உடற்செயலியலும் புத்தரின் காலத்தில், இமையச்சாரலில் ஒழுங்குபடுத்தப்பட்டு தொகுக்கப்பட்டது. அதற்கு வழிக்காட்டியவர் புத்தர். தியானநெறிகள் மனப்பயிற்சியுடன் செய்யப்பட்டு ஞானமெய்து மேன்மையடையவேண்டுமென்று புத்தர் பயிற்றுவித்தார். அங்கே பயின்றவர்கள் புத்தெழுச்சியுடன் புறப்பட்டு எல்லாத்திசைகளிலும் சென்று யோகதியானத்தையும்,நன்னெறியையும்,மொழிப்புலமையையும், மருத்துவ சித்தாந்தத்தையும் போதித்தனர். தெற்கே வந்து போதித்தவர்தான் அகஸ்திய முனி.

புத்தம் இங்கே செழிப்புற்று இருந்த காலத்தில், பௌத்தர்களால் நடத்தப்பட்ட 'யோகச்சாரப் பள்ளி'கள் தத்துவம் மற்றும் மனோதத்துவத்தையும் யோகக்கலையையும் பயிற்றுவித்தன. பௌத்த தியானநெறிகள் பௌத்தம் பரவியதேசங்களிலும் காலூன்றியது. ஜப்பானில் சென், திபெத்தில் க்ரியா யோகா,அனுயோகா, மஹாயோகா, ஆதியோகா என பலப்பிரிவுகளில் பயிலப்படுகிறது.
பௌத்தத்தின் தியானமுறைகளுள் யோகாவும் ஒன்று என்றக்கருத்தை இங்கே இந்துத்துவா சக்திகள் மறைத்துவருகிறார்கள். இந்துத்துவாவை எதிர்க்கும் சக்திகளும் இந்துத்துவாவின் பிரச்சாரத்தையே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். தியானம்,யோகா என்பதெல்லாம் உடலை உலகுடன் இணைக்கும் செயல்கள். அதன்மூலம் உலகில் உள்ள பிரச்சனைகளை -துக்கங்களை-உள்வாங்கி வாழப்பகுதலே பௌத்த வழிக்காட்டுதல். ஆனால் இந்து மதம் காட்டும் வழியென்ன? ஒருவர் உயர்நிலையை அடைய அவர் உயர் சாதியில் பிறக்கவேண்டும். வேள்விகளாலும் வேண்டுதல்களாலுமே நல்வாழ்வை அடையமுடியும். துக்கத்தில் சிக்கியவனுக்கு அவனது விதியே காரணமும் விமோச்சனமும் என்பவைகள்தான் இந்துவழி. அதில் மனத்தை உடலை சீர்படுத்தும், ஞானத்திற்கு வழிக்காட்டும் தியானத்துக்கும் யோகத்துக்கும் என்னவேலை.

இந்துக்கள் தங்களுடையது என்று யோகாவைச்சொல்வதால் அவர்களுடையதாகிவிடுமா? அவர்கள் எதைத்தான் சொந்தம் கொண்டாடவில்லை. பௌத்த விஹார்களை இந்துக்கோயில்களாக்கினார்கள். பௌத்த இலக்கியங்களை இந்துப்புராணங்களாக ஆக்கினார்கள். அரசமரத்தை,அதன் கீழிருந்த புத்தரை,வேப்பம் மரத்தை அதன்கீழிருந்த பௌத்த அம்மனை, குறள்வடித்த வள்ளுவனை என எதைத்தான் அவர்கள் விட்டுவைத்தார்கள். எதைத்தாம் நாம் விட்டுக்கொடுக்கவில்லை. பௌத்ததையே இந்துமதத்தின் கிளையென்றார்கள்;புத்தரையும் விஷ்ணுவின் அவதாரமென்றனர். இந்துவாகச்சாகமாட்டேன் என்று பௌத்தம் தழுவிய போதிச்சத்துவர் அண்ணல் அம்பேத்கரையே இன்னமும் அவர் ஓர் 'இந்து'தான் என்றுதானே இன்னமும் சொல்லிவருகிறார்கள். இந்துமதத்தில் ஏதெனும் நல்லது இருந்தால் அது பௌத்தத்தின் சொத்துதான். இந்துக்களிடமுள்ள பௌத்தச்சொத்துக்களெல்லாம் மீட்கப்பட்டால் அங்கே இருப்பது ஜாதியம்தான். ஜாதியம் மட்டுமே இந்துக்களுக்கு உண்மையானச்சொத்து, மற்றைவையெல்லாம் களவாடியச்சொத்து யோகா உட்பட.

-ஜூன் -21, சர்வதேசிய யோகா தினம்!


-ஸ்டாலின் தி