வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

தமிழ் குடிதாங்கி - செல்லாதப்பட்டம்

                                 குடிதாங்கி பிரச்சனையில் ராமதாஸ் மிகைபடுத்தப்படுகிறார். தலித் பிணத்தை  அவர் சுமந்து சென்றார் என்று கூறுவது மிகைப்படுத்தல் தான். திருப்பானந்தல் மணி என மக்களால் அழைக்கப்படும் மூத்த தலித் தலைவர் T.M.மணி பல ஆண்டுகளாக தலித் போராளியாக இருப்பவர். நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனரான அவர் கொலை வழக்கு உட்பட பல வழக்குகளை சந்தித்து ஆயுள் தண்டனையையும் சந்தித்தவர். தற்போது இஸ்லாம் மார்க்கம் தழுவி உமர்ஃபாருக் என மாறியுள்ளார். அவர் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் . அவற்றில் ஒரு போராட்டம் தான் குடிதாங்கி சுடுக்காட்டு உரிமை போராட்டம் . கும்பகோணத்திலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் உள்ள ஊர். அங்கு வன்னியர்கள் தலித்துக்களை கொள்ளிட ஆற்றுக்கரையில் உள்ள சுடுக்காட்டில் பிணம்புதைப்பதற்க்கு தடைப்போட்டிருந்தனர். அதற்குமுன்பே அந்த சுடுகாடு தலித்துக்களின் பயன்பாட்டில் இருந்தாலும் ராமதாசின் வன்னியர்சங்கம் வந்த பிறகு தான் பிரச்சனையும் வந்தது. இந்த நிலையில் 23-8-1988 அன்று அங்கு தலித் சமூகத்தை சார்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் செல்வம் என்பவர் இறந்துவிட்டார். சுடுகாட்டை நோக்கி இறுதி ஊர்வலம் போய்கொண்டிருந்த போது வன்னியர்கள் வீச்சரிவாள்களுடன் வந்து தடுத்து நிறுத்தினர். பிணத்தை அதே இடத்தில் வைத்து விட்டு தலித்துக்கள் வந்துவிட்டனர். செய்தி அறிந்த T.M.மணி மற்றும் அவரது அமைப்பினர் கும்பகோணம் சப்-கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். மீண்டும் அதிகாலை தலித்துகள், பிணத்தை எடுக்க போன போது பாடையும் இல்லை பிணமும் இல்லை. காவல்துறையும் அதிகாரிகளும் பிணத்தை எங்கோ எடுத்து சென்று புதைத்து விட்டதை அறிந்த தலித்துகள் போராடத்தொடங்கினர்.அந்த போராட்டத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. அன்று (24-8-1988) இரவு காவல்துறையின் ஆயுதப்படை இறக்கப்பட்டது. குடிதாங்கி சேரி உட்பட 9 சேரிகள் இரவு முழுவதும் சூறையாடப்பட்டன. 100 மேற்பட்டவர்கள் மீது வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டனர்.அதில் குடிதாங்கி சேரி பெண்கள் மட்டும் 22 பேர். நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்ற தலித்துக்களின் போராட்டம் வலுவடைந்தது தமிழகம் முழுவதும் பேசப்பட்டது. தமிழக சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. தலித்துக்கள் பிணத்தை கொண்டு செல்வதை யாரும் தடுக்கக்கூடாது என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு போட்டார். 82 வன்னியர்கள் வன்கொடுமைத்தடுப்புச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டனர். எல்லாம் முடிந்த பின் வந்தார் ராமதாஸ். தங்கள் வீட்டு ஆண்கள் சிறைக்கு சென்றுவிட்டதில் கோபத்தில் இருந்த வன்னிய பெண்கள் ராமதாசை திட்டித்தீர்த்தனர். ஆனால் தலித்துக்கள் தான் அவரை மரியாதை கொடுத்து  வரவேற்றனர். இது தான் குடிதாங்கியின் வரலாற்றுச்சுருக்கம்.ராமதாஸ் குடிதாங்கி சேரிக்காக போராடவில்லை. சிறைப்படவில்லை.  நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தலித்துகளோடு மோதிக்கொண்டிருந்த வன்னியர் சங்கத்தினரை தடுத்ததும் இல்லை. போராடியதும், சிறைப்பட்டதும், அடிப்பட்டதும் தலித்துக்கள். ஏறத்தாழ ஐந்தாண்டு காலம் தலித்துக்களால் நடத்தப்பட்ட வீரியமான, நியாயமான, உன்னதமான போராட்டத்தின் வரலாறு  'தமிழ் குடிதாங்கி' எனும் ஒரேஒரு பட்டத்தின் மூலம் மறைக்கப்படுகிறது. வரலாற்றை மீட்டெடுப்பதும் ஒருவகையான போராட்டம் தான். 

                                                                      தி.ஸ்டாலின்