செவ்வாய், 15 டிசம்பர், 2015

சதிகாரக் கும்பலின் நிதி அரசியலும் நமது தேவையும்.

 தி.ஸ்டாலின்



மழைவெள்ளத்தால் சீர்குலைந்துள்ள தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடிரூபாய் நிதியினை கோருகிறார் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தின் கனிமங்களை,வளங்களை சூறையாடும் கும்பலை, ஊழலில் தலைவிரித்தாடும் அரசியல் கொள்ளையர்களை கட்டுப்படுத்தினாலே நமக்கான நிதிக் குறைபாடுகள் குறையவாய்ப்பிருக்கிறது. ஆனால் அத்தகைய கும்பலால் நடத்தப்படும் கட்சிகளால் ஆளப்படும்வரை தமிழகத்துக்கு குறைகளில் குறையிருக்காதுதான். இன்னொருபக்கம் ஆட்சியாளர்களால் செய்யப்படும் செலவுகள் வீண் செலவுகளாகவே இருக்கிறது. கருணாநிதியின் மீதுள்ள கோபத்தில் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக ஜெயலலலிதா மாற்றியதற்கு 76 கோடிரூபாய் கூடுதலாக செலவிடப்பட்டதுஜெயலலிதா ஆட்சியேறிய ஓராண்டில் 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை' என்னும் விளம்பரம் அரசால் செய்யப்பட்டது. அதற்கு மட்டும் 29 கோடிரூபாய் விரயமாக்கப்பட்டது. அதுபோலவே, நான்காண்டு சாதனையென நடத்தப்பட்ட விளம்பரத்திற்கு 19 கொடி ரூபாய் செலவிடப்பட்டது. சென்னையில் புதியதாக கட்டப்பட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை திறந்துவைக்க செய்யப்பட்ட விளம்பரத்துக்கு சுமார் 72 இலட்சம் அரசு பணம் செலவிடப்பட்டது. இப்படி  ஏராளமான பணம் வீணடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மாநிலம் நிதிப் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது என்று தமிழக நிதி ஆதாரத்தை சூறையாடுபவர்களாலே கூறப்படுகிறது. ஆக, மத்திய அரசிடமிருந்து வரப்போகும் நிதி சூறையாடப்படத்தானா?

மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கேட்பதற்கான உரிமை இருக்கிறது. தமிழகத்துக்கு நிதியளிக்கவேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதில் மறுப்பதற்கில்லை. ஆனால் மத்திய அரசு கொடுக்கும் நிதிகளை முழுமையாக, சரியாக பயன்படுத்துமா தமிழக அரசு என்பதுதான் முக்கியமானக் கேள்வி. மத்திய அரசு தலித்துகளுக்கு ஒதுக்கும் நிதியினையே திருப்பி அளித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இதில் திமுக, அதிமுக இரண்டு தரப்புகளுமே ஒற்றுமையாகத்தான் செயல்படுகின்றனதற்போதைய அதிமுக அரசுகூட, தமிழக தலித்துகளுக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்ட  500 கோடி ரூபாயை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது. ஏன் திருப்பி அனுப்ப வேண்டும். தலித்துகளுக்கு நிதி தேவையில்லையா? இன்றைக்கு குடிசைகளை இழந்து தவிப்பவர்களில் சரிபாதிக்கும் அதிகம் தலித்துகள்தான். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அவர்களுக்கே செலவிடப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் குடிசையில் இருக்கவேண்டும். அவர்களுக்கான நிதியை பந்தாடிவிட்டு அவர்களை குடிசையிலேயே தள்ளிவிட்டு, இன்று குடிசை இழந்தவர்களுக்கு வீடு கட்டவேண்டும் எனவே 1500 கோடி வேண்டும் என்று மத்திய அரசைக் கோருவது எப்படி சரியாகும்இப்போது மத்திய அரசுக் கொடுக்கும் நிதியை மட்டும் இவர்கள் அவ்வளவு யோக்கியமாகச் செயல்படுவார்கள் என்று எப்படி நம்பமுடியும்?


எனவே நாம் நமக்கு மாற்றுவழியைக் கோரவேண்டும். தலித்துகளுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் நிதியை இரண்டு மடங்காக உயர்த்தவேண்டும். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு போர்கால அடிப்படையில் பாதுகாப்பான இடத்தில், அதுவும் தலித்துகளே விரும்பும் இடத்தில் உடனடியாக கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுக்கவேண்டும். பிறபகுதிகளில் உள்ள தலித்துகளுக்கும் பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பான வீடுகளை கட்டிக்கொடுக்கவேண்டும். மழையின் சீற்றம் இருந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து தலித் குடும்பங்களுக்கும் ரூ 25 ஆயிரம் நிவாரணமாகக் கொடுக்கப்படவேண்டும். தலித் மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் விகிதத்தைக் குறைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தலித்துகள் பெற்றுள்ள கல்விக்கடன், வங்கிக்கடன்களை ரத்து செய்யவேண்டும். தலித் விவசாயிகளுக்கு மூன்று சாகுபடிக்கான தொகையை நிவாரணமாக வழங்கவேண்டும். தலித்துகளுக்கான நிதியினை செலவிட தலித் அதிகாரிகள் மட்டுமேக் கொண்ட தனிக் குழு அமைக்கவேண்டும். தலித் நிதி செலவினங்களை  கண்காணிக்க தலித்துகளால் தேர்வு செய்யப்பட்ட, தலித்துகளை மட்டுமேகொண்ட குழுக்களை மாநில,மாவட்ட, ஒன்றிய,ஊராட்சி அளவில் அமைக்கவேண்டும்