திங்கள், 6 ஜூலை, 2015

தாத்தா, ராவ் சாஹிப் இரட்டமலை சீனிவாசனார் பிறந்த நாள்-ஜூலை 07

"இரட்டமை சீனிவாசனார் ஆதிதிராவிடர்களுக்காக பாடுபடும் வீரர். இவர் கோயம்புத்தூர் கலாசாலையில் கல்வி பயிற்சிப்பெற்று கணக்கு நிர்வாகத்தில் பிரத்தியேகத் திறனையடைந்தார். தான் பிறந்த குலத்திற்குத் தன்னால் கூடியவாறு ஊழியம் செய்வதே இவருடைய முக்கிய கொள்கை. 1891 இல் இவர் பொது ஊழியத்தில் ஈடுபட்டுச் சென்னை (பறையர் மஹாஜன சபை) ஆதிதிராவிடர் மஹாஜன சபையை நிர்ணயத்தார். 1893 இல் "பறையன்" என்னும் வெறுக்கத்தக்க பெயரின் காரணமாகப் பலதலைமுறைகளாக அநேகக் கஷ்டங்களுக்குள்ளாக்கப்பட்டு வரும் தன் ஜாதியினரை முன்னேற்றமடையக் கருதி 'பறையன்' என்னும் பத்திரிக்கையைப் பிரசுரிக்க ஆரம்பித்தார். 1893 டிசம்பர் 23 அன்று தன்னுடைய மக்கள் உணர்ச்சிப்பெற்று எழும்புமாறு ராயப்பேட்டை வெஸ்லியன் மிஷன் மண்டபத்தில் ஓர் பெரியக்கூட்டம் கூட்டினார். 1895 அக்டோபர் 23 இல் டவுன் ஹாலில் என்றும் இதுவரையில் இவர்களால் நடத்தப்படாத ஒரு பெரியக்கூட்டம் கூடினது. மௌனிகளாக இருந்த ஆதிதிராவிடர்களுக்கு உணர்ச்சியை அளித்தார். சிதறுற்று இருந்த இந்த வகுப்பினர் ஒன்று சேர்க்கப்பட்டு  மற்ற ஜாதியினரைப்போல இந்திய தேசத்தில் ஒரு தனிப்பட்ட வகுப்பினரென்ற பொறுப்பையடைந்தார்கள்.
திரு இரட்டைமலை சீனிவாசனார் தன் சமூகத்தினருக்கு ஒரு ஞானியாகவும், வழிக்காட்டியாகவும், சிநேகிதனாகவும் இருந்து அவர்களது நன் மதிப்பைப்பெற்றார்".

(1926 ஜனவரி 1 ஆம் நாளன்று தாத்தாவுக்கு 'ராவ்சாஹிப்' பட்டம் அளிக்கப்பட்டதை முன்னிட்டு, 1926, பிப்ரவரி 20 ஆம் நாள் சென்னை சைதாப்பேட்டையில் நடைப்பெற்ற கூட்டத்தில் அப்போதைய செங்கல்பட்டு கலெக்டர் பி.சீதாராமையா பந்தலுகாரு M.A. அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)