ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

நிறப்பிரிகை மார்க்ஸும் நிறக்குருடு நிலையும்

ஸ்டாலின் தி.

விடுதலைச்சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் அவர்களுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ள 'அன்பான வேண்டுகோள்' செய்தியை முன்வைத்து இந்த எதிர்வினை எழுதப்படுகிறது.
69 ஆவது இந்திய சுதந்திர தினத்தில் விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரச் சேரியும் சேரியின் தேரும் சாதிவெறியர்களால் பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. தலித்துகளும் சில காவலர்களும் தாக்கப்பட்டனர். இந்நிலையையொட்டி 'இந்து மதத்திலிருந்து வெளியேறவேண்டும்' என்னும் கருத்து தலித்துகளிடம் மேலோங்கியுள்ளச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகளும் இக்கருத்தை பேசத்துவங்கினர். அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பத்திரிக்கையாளர்களிடம் இக்கருத்தை வெளிப்படுத்தினார். பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வனும் தொடர்ந்து பேசிவருகிறார். இச்சூழலில்தான் அ.மார்க்ஸ் ஒரு வேண்டுகோளை அன்பாக முன்வைத்துள்ளார். அதாவது, 'தலித்துகளுக்கு பௌத்தத்தைவிட இஸ்லாமே சரியான வழி' என்கிறார். இதை வேண்டுகோளாகச் சொல்லுவதாகச் சொல்லும் மார்க்ஸ் தனது இக்கருத்தை வலுவாக்க எடுத்தாண்டிருக்கும் கருத்துக்கள் சரியானவைகளாக இருக்கவில்லை என்பதே இந்த எதிர்வினைக்கான காரணமாகும்.  "பவுத்த மதமாற்றம் என்கிற கருத்தை முன்வைத்து அண்ணல் அம்பேத்கர் இயங்கி இன்று அறுபதாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஆனால் அது அவர் எதிர்பார்த்த விடுதலையைத் தந்ததா?" என்று கேட்கிறார் மார்க்ஸ். இதேக் கேள்வியை இந்துத்துவவாதிகளும் கூட கேட்கிறார்கள். மார்க்ஸ் இஸ்லாமிய தரப்பிலிருந்து கேட்கிறார். அறுபதாண்டுகளில் இங்கே தலித்துகள் இயங்குவதற்கான சுதந்திரமான சூழலை நாடு உருவாக்கியிருக்கிறதா? பௌத்ததை பரப்பவும் அதைப்பற்றி பேசவும் தலித்துகளுக்கு அவகாசம் கிடைத்திருக்கிறதா? அண்ணலின் மறைவுக்குப்பிறகு இந்தியாவில் எத்தனை தாக்குதலை தலித்துகள் சந்தித்திருக்கிரார்கள். ஆயிரக்கணக்கான கலவரங்கள். காங்கிரஸ் இல்லாத முதல் மத்திய ஆட்சியை ஜனாதா கொடுத்தபோது அவ்வாட்சியின் முதல் ஓராண்டில் மட்டும் பத்தாயிரம் சாதிக்கலவரங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அறுபதாண்டில் இலட்சக்கணக்கான தாக்குதலை எதிர்கொண்டுவரும் மக்கள் அத்தகைய தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் போராட்டாங்களையே தம் வாழ்க்கையாகக் கொண்டிருக்கையில் அவர்களைப் பார்த்து ஏன் இன்னும் விடுதலையை அடையவில்லை என்று கேட்பது அவர்களை ஏளனம் செய்வதல்லாமல் வேறென்ன. மேலும் அண்ணல் முன்னிறுத்திய பௌத்தம் விடுதலையை மறுக்கிறதா? கடுமையான ஆதிக்கத்தால் விடுதலைத் தள்ளிப்போனால் அதெப்படி பௌத்தத்தின் குறைபாடாகும். தலித்துகளின் விடுதலைக்கு எதிராக இருப்பது இந்துத்துவம் என்பதை மார்க்ஸும் ஒத்துக்கொள்வார் என்று நினைக்கிறோம். ஆனால், அம்பேத்கரின் பௌத்தம்தான் விடுதலைக்கு வழிவகுக்கவில்லையென்றும் அவர் சொல்லுவது யாருக்கு ஆதரவானக் கருத்து. இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் சுந்தந்திரமில்லை, ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை மார்க்ஸும் சொல்லிவருகிறார்தான். எனவே இஸ்லாம் விடுதலைக்கு வழிவகுக்காது என்று இஸ்லாமியர்களிடம் மார்க்ஸ் கூறுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? இஸ்லாம் ஏன் இஸ்லாமியர்களை இந்துக்களின் பிடியிலிருந்து விடுவிக்கவில்லை என்ற கேள்விக்கு மார்க்ஸ் கொடுக்கும் பதிலென்னவாக இருக்கும். பௌத்தம் ஒட்டுமொத்த தலித்துகளின் அடையாளமாக, இயக்கவடிவமாக மாறும்போதுதான் அதன் மூலம் அவர்களின் விடுதலை சாத்தியமாகும் என்பதே யதார்த்தம். ஆனால் அதைத்தடுத்துக்கொண்டே இருப்பது இந்துமதம். இடதுசாரியம், பெரியாரியம், தமிழ்தேசியம் என எதன் பெயரிலேனும் மீண்டும் மீண்டும் இந்துத்தலைமையை தலித்துகளிடம் திணித்துக் கொண்டிருக்கும் இந்துமதம்தான் பௌத்தத்தை மீட்டெடுக்கவிடாமல் தலித்துகளை தொடர்ச்சியாக தடுத்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை வென்றுகாட்டுவதே தலித் அரசியலின் இலட்சியமாக இருக்கிறது. இதில் அண்ணலின் பௌத்தம் செய்ததென்ன என்பது அபத்தமானக் கேள்வி. மார்க்சியம் உருப்பெற்று நூறாண்டுகளைக் கடந்தபின்னும் முதலாளித்துவமே ஆள்கிறதென்பதால் மார்க்ஸும் மார்க்ஸியமும் தேவையற்றது என்று கூறுவாரா மார்க்ஸ்.

"அவர் (அண்ணல்) எந்தப் பின்னணியில் பவுத்தம் என்பதை நோக்கித் தள்ளப்பட்டார்? இஸ்லாமுக்குப் போகக் கூடாது என எத்தகைய அழுத்தங்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டன?" என்றெல்லாம் மார்க்ஸ் கேட்கிறார். இக்கேள்வியின் மூலம் மார்க்ஸ் இரண்டு விமர்சனத்தை அண்ணல் மீது வைத்திருக்கிறார். அதாவது பௌத்தத்தை தழுவ அண்ணலை யாரோ தூண்டிவிட்டிருக்கலாம் என்பதைப்போல் இருக்கிறது மார்க்ஸின் கேள்வி. அண்ணலுக்கு தெளிவான முடிவெடுக்கும் அளவுக்கு அறிவுக்கூர்மையில்லாததைப்போலவும் அவரை பின்னணியிலிருந்து யாரோ இயக்கியதாகவும் சித்தரிக்கவே மார்க்ஸின் இக்கேள்வி பயன்படுத்தப்படும். அதுவும் இஸ்லாமை அவர் ஏற்காததற்கு இப்பின்னணியேக் காரணம் என்று சொல்லுவதன் மூலம் இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவா சக்தியே அப்பின்னணி என்று மேலும் இச்சித்தரிப்பை நீட்டவும் முடியும். அதாவது இந்துத்துவாக் கும்பலே அண்ணலை பின்னிருந்து இயக்கியது என்ற மோசமானக் கருத்தின் விதையை இஸ்லாமிய ஆதரவு என்னும் நிலையிலிருந்து மார்க்ஸ் விதைக்கிறார். அண்ணல் எந்தப் பின்னணியில் பௌத்தம் தழுவினார் என்பதை அண்ணலின் வரலாற்றை அறிந்தவர்கள் அறிவார்கள். மார்க்ஸும் அறிவார். ஆனாலும் நினைவுத்தப்பிய நிலையில் பேசும் மார்க்ஸ்போன்றவர்களுக்கு நாம் நினைவூட்டுவதில் குற்றமில்லை.
அண்ணல் பௌத்தம் தழுவியதன் பின்னணி அவரின் வரலாற்றுப்பூர்வமான சிந்தனைதான். இந்திய மக்கள் குழுக்களிடமிருந்த இரண்டுவிதமானப் போக்கு நாளடைவில் பார்ப்பனியமாகவும் பௌத்தமாகவும் உருப்பெற்றன. பார்ப்பனியம் கையாண்ட சமூகக்கேடான முறைகளைக் கடுமையாக எதிர்த்தது பௌத்தம். பௌத்தத்தால் வீழ்த்தப்பட்ட பார்ப்பனியம் சிலநூற்றாண்டுகளுக்கும் முன் வஞ்சகத்தாலும் வன்முறையாலும் பௌத்தத்தை வீழ்த்தி மேலாதிக்கம் பெற்றபோது பௌத்தர்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களாகவும் பிறகு தீண்டப்படாதவர்களாகவும் ஆக்ப்பட்டார்கள். இவ்வரலாற்றை முதலில் ஆராய்ந்த பண்டிதர் அயோத்திதாசர் பௌத்தம் ஏற்றதுடன் பௌத்தம் குறித்த உரையாடலை மீண்டும் இந்திய மண்ணில் துவக்கிவைத்தார். இதே வரலாற்றை மராட்டியத்தில் பிறந்த அண்ணலும் கண்டடைந்தார். பண்டிதரைப் போலவே அண்ணலும் பௌத்தமே தமது பூர்வத்தத்துவம், அதன்காரணமாகவே தம் எதிரிகளால் ஒடுக்கப்பட்டோம் என்பதை அறிந்து, பௌத்தத்தின் ஜனநாயகப்பூர்வமான உள்ளடக்கத்தை உணர்ந்து, அதன்வழியே தம் சமூகவிடுதலையைச் சாத்தியப்படுத்தவேண்டும் என்ற இலட்சியத்துடன் பௌத்தம் நோக்கி நகர்ந்தார். இதில் வெறென்ன பின்னணியை மார்க்ஸ் கண்டுபிடித்தார். காந்தியின் பின்னணியை 'அகிம்சை' என்று கூறிவரும் மார்க்ஸ் அண்ணலின் பின்னணியாக இந்துத்துவத்தைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டிய அவசியமென்ன?
"இஸ்லாத்துக்குப் போகக்கூடாது என எத்தகைய அழுத்தங்கள் அவருக்கு(அண்ணலுக்கு) கொடுக்கப்பட்டன?" என்ற கேள்வியின் மூலம் மேலும் மேலும் அண்ணலை தவறானவராக, சுயத்தெளிவடையாதவராக, இஸ்லாத்திற்கு எதிரானக்கும்பலின் கையாளாக சித்தரிக்கிறார் மார்க்ஸ். பௌத்தத்தை அண்ணல் முன்னெடுத்ததற்கு முக்கியக்காரணம் வரலாறுதான். ஆனாலும் மேலும் சில விளக்கங்களை அவர் கூறியுமிருக்கிறார். பிற மதங்களை பௌத்தத்துடன் ஒப்பிட்டு ஆய்வும் செய்திருக்கிறார். அண்ணலின் பார்வையில் பௌத்தம் தம் மக்களின் பூர்வ மதம் மட்டுமல்ல, அது ஜனநாயக, சோசலிச சமூகத்துக்கான தத்துவமாகவும் இருப்பதை அண்ணல் ஆராய்ந்தறிந்தார். குறிப்பாக கடைநிலையில் தள்ளப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் தடைபோடாத மதமாக பௌத்தமே இருந்துள்ளதை ஆராய்ந்தறிந்தார். அதனால்தான் தாம் பௌத்தத்தை ஏற்கிறேன் என்றும் கூறியுள்ளார். எல்லாமதங்களும் தங்களின் கோட்பாடுகள் 'கடவுளின் சொற்கள்' என்று கூறிக்கொள்வதன் மூலம் மாற்றங்களுக்கு உடன்படுவதிலிருந்து விலகிநின்றன. ஆனால் புத்தர் தம் கோட்பாடுகளை தாம் சொல்வதால் மட்டுமே ஏற்கவேண்டிய கட்டாயமில்லையென்றார்.  காலத்துக்கேற்ப திருத்திக்கொள்ள பௌத்தம் இடம்கொடுத்தது. தமது கொள்கையை செப்பனிடும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கிய ஒரே மதம் பௌத்தம்தன்.  மற்ற மதங்கள் கடவுளிடம் தஞ்சமடையவே வலியுறுத்தியபோது பௌத்தம் 'பிரக்ஞை,கருணை,சமத்துவம் ஆகியவற்றை முன்னிருத்தியது. "இம்மூன்று கோட்பாடுகளும் என்னைமட்டுமல்ல இந்த உலகம் முழுவதையும் கவரவேண்டும். ஆண்டவனோ, ஆன்மாவோ சமுதாயத்தைக் காப்பாற்ற முடியாது என்பதால் நான் புத்த மதத்தை ஏற்க விரும்புகிறேன்" என்று தெளிவாகக் கூறினார் அண்ணல். இதில் என்ன அழுத்தம் கொடுக்கப்படதாக மார்க்ஸ் கூறுகிறார். ஒரு தலித்துக்கு தெளிவான சிந்தனை இருக்கமுடியாது என்று நம்புவது அப்பட்டமான சாதியப்புத்தி. மார்க்ஸும் அப்படித்தான் நம்புகிறார்.   
இஸ்லாமே விடுதலைக்கான வழி என்று கூறும் மார்க்ஸ் ஏன் இன்னும் இஸ்லாமை தழுவலில்லை? இஸ்லாமை தழுவக்கூடாது என்று மார்க்ஸுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் யாவர்? ஒருவேலை மார்க்ஸுக்கு இறை நம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான் காரணமா? அப்படியானால் கடவுள் நம்பிக்கையில்லாத தலித்துகளுக்கும் மார்க்ஸ் இஸ்லாமைத்தான் பரிந்துரைக்கிறாரா?(அல்லாதான் உங்களுக்கு சரியான கடவுள் என்றும் சொல்லியிருக்கிறார் மார்க்ஸ்!) இது வன்முறையல்லவா? கடவுளைத் திணிப்பதல்லவா? கடவுள் நம்பிக்கையில்லாத தலித்துகள் இஸ்லாம் மாறினால் அவர்கள் தொடர்ந்து கடவுள் நம்பிக்கையல்லாதவர்களாகவும் கடவுள் நம்பிக்கைக்கெதிராகவும் செயல்பட இஸ்லாம் வழிவகுக்கிறதா? ஆனால் பௌத்தத்தில் அது முடியும். இங்கே புத்தரை கடவுளாக யாராவது வழிபடலாமேத் தவிர நிர்பந்திக்க முடியாது. புத்தர் எங்கோ உகார்ந்து உலகை ஆட்டிவைக்கும் இறவனில்லை, ஞானத்தால் புத்தராக உயர்ந்த மனிதர் என்பதை பௌத்தர்களால் சொல்லமுடியும். "கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு 'எட்டு வழி போதனையைக் கூறும் பௌத்தமே மதம்' " என்பார் அண்ணல் அம்பேத்கர். இத்தகைய ஜனநாயகமான மதத்தை பூர்வமாகக்கொண்ட மக்களிடம் உங்கள் 'மதம் உங்களுக்கு வேண்டாம்' என்று சொவதன் பின்னணி என்ன? இப்படியெல்லாம் சொல்வதற்கும் பௌத்தத்தைக் கடைப்பிடித்த மக்களைக் கொன்று போட்டவர்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கப்போகிறது.
அய்யா டி.எம்.மணி என்னும் உமர்ஃபாருக் அவர்கள் குறிப்பிட்டதாக, பண்டிதர் அயோத்தி தாசர் போன்ரவர்களால் பௌத்தமேற்றவர்களின் குடும்பங்கள் மீண்டும் இந்துக்களாகவே மாறிவிட்டதாகக் கூறுகிறார் மார்க்ஸ். கோலார் தங்கவயல் தலித்துகள் இன்னமும்கூட பௌத்தக்குடும்பங்களாகவே இருக்கிறார்கள் என்பதை மார்க்ஸும் அறிந்திருப்பார். இங்கே ஒரு தலித் தனக்காக சமூகச் சான்றிதழைப் பெறும் போதே அதில் 'இந்து' என்ற அடையாளத்தைப் போடுவது அரசு. அரசுதான் கட்டாயமாக அந்த தலித்தை இந்துவாக்கியுள்ளது. ஆனால் அந்த தலித் இந்துவா? இந்துக்கள் அப்படியெல்லாம் அங்கீகரிக்கிறார்களா? மார்க்ஸ் தலித்தை இந்து என்றுதான் கருதுகிறாரா? இதில் குற்றம் செய்தது அரசா அயோத்திதாசரின் வழியா?

ஏற்கனவே அருந்ததியருக்கு மிகப்பெரிய எதிரியாக பண்டிதரைக் காட்டியவர்தான் மார்க்ஸ். தற்போது, பறையருக்கும் பண்டிதர் தவறான வழியையேக் காட்டியிருக்கிறார் என்று இதன் மூலம் சொல்லியிருக்கிறார். அதனூடாக பெரியாரென்னும் ஈவெராவைக் கொண்டுவந்தும் நிறுத்துகிறார். "இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றுதான் வழி என்று பெரியார் சொன்னதுதான் உங்களுக்கான வழி"யாக இருக்கமுடியும் என்று அன்பாக வேண்டுகோள் வைக்கிறார் மார்க்ஸ். தலித்துகளிடம் தோன்றி தங்களின் அறிவாலும் உழைப்பாலும் தம் சமூகத்துக்கு வழிக்காட்டிய பண்டிதர், அம்பேத்கர் ஆகியோரின் வழிக்காட்டுதலைவிட பெரியார் வழியே சரியானது என்று சொல்லும் அரசியல் யாருக்கான அரசியலாக இருக்கமுடியும்.

இன இழிவுக்கு இஸ்லாம்தான் வழியென்றால் ஏன் பெரியாரும் அவரது சீடர்களும் இஸ்லாம் தழுவவில்லை. பெரியாரின் இனம் இழிவைச் சுமக்காத இனமா? சூத்திரன் என்றால் விபச்சாரிக்குப் பிறந்தவனென்று அர்த்தமென்றாரே பெரியார். அந்த இழிவைப் போக்க ஏன் சூத்திரர்களுக்கு இஸ்லாத்தை அவர் பரிந்துரைக்கவில்லை. பௌத்தமே சிறந்த வழியென அறிந்த பண்டிதரும் அண்ணலும் பௌத்தம் தழுவினார்கள்.  இஸ்லாமே சிறந்தவழியென்று கண்டுபிடிக்கத்தெரிந்த பெரியாரும் சரி, மார்க்ஸும் சரி இஸ்லாம் வழியில் செல்லவில்லையே அது ஏன்? இஸ்லாமைத் தழுவாததற்கு பெரியாருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் எந்தமாதிரியானவை. மார்க்ஸ் முன்வைப்பது இஸ்லாமைத்தானா அல்லது அதன் வழியில் பெரியாரை முன்னிருத்துகிறாரா? பெரியாரை முன்னிருத்துவதன் மூலம் சாதி இந்துத் தலைமையை முன்னிருத்துகிறாரா? தலித்துகளிடம் மீண்டும் சூத்திர தலைமையை நிறுவ இஸ்லாமைப் பயன்படுத்துவது இஸ்லாமிய நண்பர்களுக்கு மார்க்ஸ் செய்யும் துரோகமல்லவா?

மேலும் மார்க்ஸ் அய்யா டி.எம். மணி அவர்களின் இஸ்லாம் ஏற்பை முன்வைத்து தம் வாதத்தை வலுவாக்க முயற்சிக்கிறார். இதுகூட நல்லதுதான். அய்யா டி.எம் மணி அவர்களின் இறுதிக்கால மனபோக்கை வெளி உலகிற்குச் சொல்லும் வாய்ப்பு நமக்கு இதன் மூலம் கிட்டியிருக்கிறது. அய்யா திருப்பனந்தாள் மணி என்று மக்களால் அழைக்கப்படும் டி.எம்.மணி நீண்டகால போராட்ட-தியாக வரலாற்றைக்கொண்ட தலித் தலைவர். நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனரான அவர் சில ஆண்டுகளுக்கும் முன் இஸ்லாம் தழுவி டி.எம்.உமர் ஃபாருக் என மாறினார். ஆழ்ந்த மக்கள் பற்றுள்ள தலைவரான அய்யா மணி அவர்கள் தொடர்ச்சியான போராட்டங்கள் கொடுத்த படிப்பினைக்காரணமாக, இந்துவாக இருக்க முடியாதென்ற நிலைக்கு முன்னவே வந்திருந்தாலும் இந்துவாக இனி இருக்கவே முடியாதென்ற கலகக்குணத்தின் மூலம் மதமாற்றம் அடைந்தவர். இஸ்லாம் அவருக்கு சிறப்பான வழியாக தெரிந்தது. இஸ்லாமிய நண்பர்களும் அவரை அரவணைத்துக்கொள்ள அழைப்புவிடுத்தனர். மேலும் புத்தம் இன்னமும் நிறுவனமயமாக ஆக்கப்படுவதில் உள்ள தாமதத்தால் இருப்பதில் நல்லதாக இஸ்லாமை ஏற்றார். ஆனாலும் இஸ்லாம் மாறிவிட்டாலே விடுதலைதான் என்று மார்க்ஸ் சொல்வதைப் போலவெல்லாம் ஒதுங்கிவிடாமல் தொடர்ந்து தலித் விடுதலைக்குப் பாடுபட்டார். டி.எம். மணியாக இருந்த அவர் நீலப்புலிகள் என்னும் தலித் அமைப்புக்குத் தலைவராக இருந்தது போலவே, உமர் ஃபாருக் ஆனபோதும் அதே தலித் இயக்கத்துக்கு அவர்தான் தலைவராக இருந்தார். அதாவது இஸ்லாமியரான தலித்தும் தம் மக்கள் விடுதலைக்கு பாடுபடவே வேண்டியிருக்கிறது. இதையே அய்யா மணி என்னும் உமர் ஃபாருக் வாழ்க்கை நமக்கு போதிக்கிறது.

இரண்டு மாதங்களுக்கும் முன் இறந்து விட்ட அய்யா டி.எம்.உமர் ஃபாருக் தம் வாழ்வின் இறுதி நாட்களில் பௌத்தம் குறித்த விவாதித்தவை மார்க்ஸுக்கு தெரியவாய்ப்பில்லை. அய்யா உமர் ஃபாருக் இறப்பதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கும் முன் அவரது வீட்டில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தார் தலித் செயல்பாட்டாளரான க.திருவள்ளுவன். பௌத்தம் குறித்து பலமுறை விவாதித்திருந்தாலும் அன்று அய்யா உமர் ஃபாருக் அவர்கள் திருவள்ளுவனிடம் சொல்லியது முக்கியமானதாகும். "பௌத்தத்தால்தான் விடுதலை என்பது சாத்தியமானால் அதை மக்களிடம் எடுத்துச்சொல்லுவதில் எந்த தயக்கமும் தனக்கில்லை" என்று திருவள்ளுவனிடம் கூறியிருக்கிறார் அய்யா உமர் ஃபாருக். அப்போது உடனிருந்தவர்கள், தற்போதைய நீலப்புலிகள் இயக்கத் தலைவரும் அய்யா உமர்ஃபருக்கின் மூத்த மகனுமான சகோதரர் டி.எம்.புரட்சி மணி அவர்களும், கும்பகோணம் வழக்கறிஞர் சகோதரர் கார்த்திக் அவர்களும்தான். இவ்விஷயத்தை அய்யா மணி அவர்களின் நினைவேந்தல் நிகழ்சியில் இறுதியாக உரையாற்றிய திருவள்ளுவன் கூறியுள்ளார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்ஸ் அப்போது மேடையில் இல்லை, கிளம்பியிருந்தார். இருந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். "அண்ணன் மணியின் அந்த பேச்சு கிட்டத்தட்ட ஒரு மரண வாக்குமூலம்"  என்கிறார் திருவள்ளுவன். அதாவது அய்யா உமர் ஃபாருக் தன்னுடை நிலையைவைத்து மட்டுமே தீர்வை சிந்திக்கவில்லை. தான் இஸ்லாம் மாறினாலும், நமக்கு இஸ்லாமே வழி என்று கறாராகக் கூறாமல்,  தம் மக்களுக்கு பௌத்தம் தான் தீர்வென்றால் அதை முன்னெடுப்பதில் தயக்கமோ அச்சமோ இருக்கக்கூடாது என்று சிந்தித்திருக்கிறார் அய்யா உமர் ஃபாருக். அதுதான் ஒரு போராளியின் குணம். ஆனால் மார்க்ஸ் டி.எம். மணியே இஸ்லாம் ஆகிவிட்டார், உங்களுக்கென்னத் தயக்கம் என்று அந்தப் போராளியை ஒரு மதத்தரகராக காட்ட முயல்கிறார். அய்யா டி.எம்.மணி அவர்கள் குடிதாங்கியில் நான்காண்டுகாலம் போராடியபோது அங்கே 'போராட்டக் குணம் கொண்ட தலித் இயக்கம் இல்லை' என்று எழுதி ராமதாஸை குடிதாங்கி நாயகனாக சித்தரித்த நிறப்பிரிகைக் குழுவின் தலைவரே மார்க்ஸ்தான். அய்யா மணியின் போராட்டங்களை உதாசினப்படுத்திய மார்க்ஸ் இன்று அவர் இஸ்லாம் மாறியதைமட்டும் உயர்த்திப்பிடிப்பது ஏன்? யார் அழுத்தம் கொடுக்கிறார்கள் மார்க்ஸுக்கு.

அண்ணல் குறித்த கார்ட்டூன் பிரச்சனையின் போது தலித்துகள் கொடுத்த எதிர்வினையை 'சகிப்புத்தன்மை குறைபாடு' என்று சொன்ன மார்க்ஸ், இஸ்லாத்தை அவதூறு செய்த படம் என ஒரு சினிமாவுக்கெதிராக இஸ்லாமியர் கொடுத்த எதிவினையை 'எழுச்சி' என்றும் கூறினார். தற்போது தலித் தலைமைகளையும் அவர்களின் பூர்வ மதத்தையும் கையாலாகதவைகளாகச் சித்தரிக்க இஸ்லாமை துணைக்கு அழைக்கிறார். பல்வண்ணங்களை அடையாளப்படுத்தும் நிறப்பிரிகையின் வழியே வந்து எது எந்த வண்ணம் என்பதே குழப்மாகி நிற்கும் நிறக்குருடு நிலைதான் தோழர் அ.மார்க்ஸுக்கு.


பின் குறிப்பு: இது மார்க்ஸின் கருத்துக்களுக்கான எதிர்வினையே. இஸ்லாம் குறித்தும் இஸ்லாமுக்கும் பௌத்தத்துக்கும் இருந்த பிரச்சனைகள் குறித்தும் விரிவாக பேச முற்படவில்லை. மார்க்ஸை விமர்சிப்பது இஸ்லாமை விமர்சிப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. சூத்திர வழிக்காட்டுதலை திணிக்க தலித்துகளிடம் இஸ்லாமை மோதவிடுவது மார்க்ஸ்தான். இது இஸ்லாமியர்களுக்கும் தலித்துகளுக்குமான மோதலாக ஆகிவிடும் ஆபத்திருப்பதை இருதரப்பும் உணரவேண்டும். சமூக வலைதளத்தில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறேன். மேலும், இஸ்லாமா பௌத்தமா என்பது தனியே பேசவேண்டியது. பேச வேண்டிய தேவையும் இருக்கிறது. இதில் தயக்கமோ அச்சமோ நமக்கில்லை. இஸ்லாம் என்னும் ஆதரவு நிலையில் தலித் தலைமைகளின் வழிக்காட்டுதலைக் குறைபாடாகவும் பெரியார் போன்ற ஜாதி இந்துக்களின் தலைமையை தலித்துகளுக்கான வழிக்காட்டுதலாகவும் காட்டும் அ. மார்க்ஸின் அரசியலுக்கான எதிர்வினையே இக்கட்டுரை.