சனி, 9 ஆகஸ்ட், 2014

                              NLC -யின் லாபம் என்பது சாதனையா? வேதனையா? 


      மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது, நெய்வேலி நிலக்கரி நிறுவனம்(NLC). மேலும் இது நவரத்னா தகுதிப் பெற்ற பொதுநிறுவனமும் ஆகும். இந்நிறுவனம் ஒரு சாதனை நடத்திவிட்டதாக செய்திகள் வருகின்றன. அந்த சாதனை என்னவென்றால் நடப்பாண்டின்(2014-15) முதல் காலாண்டில் NLC நிறுவனம் 334.05 கோடிரூபாய் இலாபம் ஈட்டி சாதனை புரிந்துள்ளது. இது முந்தைய ஆண்டின்(2013-14) முதல் காலாண்டைவிட 19.98 சதவீதம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் இதனை சாதனையென்று கொண்டாட NLC-க்கு உரிமை இருக்கிறதா? நியாயமிருக்கிறதா?
           

              1956 இல் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தில் சுமார் 18,000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். மேலும் சுமார் 20,000 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றுகிறார்கள்இந்த ஒப்பந்ததொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் சுமார் இருபது ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாகவே இருக்கிறார்கள்.அவர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவதற்கு நிறுவனம் தயாராக இல்லை.பல்லாண்டுகளாக பல போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தியும் கூட, நிறுவனமோ நிறுவனத்தை நடத்தும் மத்திய அரசோ ஒப்பந்த தொழிலாளர்கள் மீது அக்கறைக் கொள்ளவில்லை. “அடுத்தடுத்ததாக பத்தாயிரம் ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டு”மென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் போட்டும் கூட 200 பேர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது நிறுவனம். ஒப்பந்த தொழிலாளர்களும் கடுமையாகவே தங்களது உழைப்பை செலுத்துகிறார்கள். நிறுவனத்தின் அத்தனை வளர்ச்சியிலும் அவர்களுக்கும் முக்கிய பங்கிருக்கிக்கிறது. ஆனால், அவர்களுக்கு ஊதியம் மிகக்குறைவு. அதே போல் நிரந்தரத்தொழிலாளர்களுக்கும் உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இன்னொருபக்கம் நிறுவனம் துவங்குவதற்க்கும் விரிவாக்கத்திற்கும் நிலம் கொடுத்தவர்களில் பலருக்கும் உரிய பலன்கிடைக்கவில்லை. நிறுவனம் கையகப்படுத்திய பகுதிகளில் இருந்த பஞ்சமி நிலத்திற்கான மாற்று நிலங்கள் எதையும் தலித்துகளுக்கு வழங்கிடவும் இல்லை. வினோபா இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்ட நிலங்களுக்கும் அரசால் கட்டிகொடுக்கப்பட்ட வீடுகளுக்கும் எந்த நட்ட ஈடும் வழங்காமலேயே (‘இனாமாக வந்ததுதானே’ என்ற காரணம் சொல்லப்பட்டு) கிராமங்களைக் கைப்பற்றியது நிறுவனம். இத்தனைத் தரப்பினரையும் வஞ்சித்து, சுரண்டிய பணத்தைதான் இங்கே இலாபம் என்ற பெயரில் காட்டுகிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம். மக்களை வேதனையில் தள்ளிவிட்டு, அவர்களுக்குரிய செல்வத்தை அபகரித்துக் கொள்வதை சாதனை என்று எப்படி சொல்ல முடியும்?


                        
                        --- க.திருவள்ளுவன், மக்கள் குடியரசுக் கட்சி.