திங்கள், 24 ஆகஸ்ட், 2015

அரசின் கையாலாகாத்தனம்.

க.திருவள்ளுவன்

நேற்று (23-8-2015) சேஷசமுத்திரச் சேரிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைக் காணச் சென்ற விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் சகோதரர் சிந்தனைச்செல்வன் மற்றும் தோழர் நல்லக்கண்ணு ஆகியோரை காவல்துறை சேஷசமுத்திரத்துக்கு முன்னுள்ள நெடுமானூர் என்ற கிராமத்திலேயே தடுத்து நிறுத்தியது. பிறகு சேஷசமுத்திரத்தில் பாதிக்கப்பட்ட 83 தலித் குடும்பங்களையும் நெடுமானூருக்கு அழைத்து வந்து விசிக, கம்யூ.கட்சியினர் கொண்டுவந்த நிவாரணப்பொருட்களைப் பெற்றுச்செல்ல ஏற்பாடு செய்துள்ளனர் காவல்துறையினர். இது எவ்வளவு மோசமான அனுகுமுறை. பாதிக்கப்பட்ட மக்களை அவர்களுக்காக பாடுபடும் அமைப்பினர் பார்க்கவே அனுமதிக்காமல், அந்த மக்களையே வெளியேக் கொண்டுவரும் நோக்கமென்ன? அப்படி யார் அங்கே சிந்தனைச்செல்வனையும் நல்லக்கண்ணுவையும் எதிர்ப்பது? வரக்கூடாதெனத் தடுப்பது? அவர்கள் காவல்துறையைவிட, அரசாங்கத்தைவிட சக்திவாய்ந்தவர்களா? சிந்தனைச்செல்வனையும் நல்லக்கண்ணுவையும் அவர்கள் என்ன செய்துவிடுவார்கள்? காவல்துறையால் சிந்தனைச்செல்வனையும் நல்லக்கண்ணுவையும் பாதுகாக்கமுடியாதா? அவ்வளவு பலகீனமாகத்தான் காவல்துறையும் அரசும் இருக்கின்றனவா? அப்படியானால் செஷசமுத்திரத்தில் பலமாக இருப்பவர்கள் யார்? அவர்கள் இந்த நாட்டுக்கு, சட்டத்திற்கு, ஆட்சிக்கு இவற்றின் காவல்துறை, ராணுவம் என எதற்கும் கட்டுப்படாதவர்களா?
இலங்கையில் யுத்தம் நடந்திருந்தபோது இங்கேயிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று தமிழர்களைப் பார்வையிட்டனர், நிவாரணம் கிடைப்பதைக்குறித்து விசாரித்து அறிவித்தனர். அவர்களை எந்த சிங்களன் தடுத்தான்? ஆனால் சிங்களவனை வெறியன் எனக்கூறும் தமிழர்களின் ஊருக்குள் ஏன் தலித்துகளுக்கானவர்கள் நுழையமுடியவில்லை?
சாதிவெறியர்களைக் கண்டு இப்படி அஞ்சும் அரசால் அதன் காவல்துறையால் நமக்கு பாதுகாப்போ நல்வாழ்வோக் கிடைக்கவழியுண்டா? சாதிவெறியர்களை அடக்காமல் அதனால் பாதிக்கப்பட்ட மக்களை அடக்குவதும் அச்சுறுத்துவதும் செய்யும் அரசு யாருக்கான அரசாக இருக்கமுடியும். இத்தகைய அரசுகளை நம்பித்தான் நாம் காலம் கடத்தப்போகிறோமா!

நமக்கான அரசியலை, ஆட்சியை, அதன்மூலமான பாதுகாப்பைக்குறித்து இனியும் நாம் சிந்திக்காமல் செயல்படாமல் இருந்தால் இன்னும் மோசமான நிலைகளுக்குத்தான் தள்ளப்படுவோம் என்பதை தலித் சமூகம் உணரவேண்டும்.