வியாழன், 25 ஜூன், 2015

பறையர் இளைஞர் படுகொலை-கவுண்ட ஜாதிவெறி.



சேலம் ஓமலூர் பகுதியைச்சார்ந்த கோகுல்ராஜ் என்னும் பொறியியல் பட்டதாரி இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலைச்செய்யப்பட்டுளார்.  கோகுல்ராஜும் சுவாதி என்னும் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சுவாதி ஜாதி இந்துப்பெண். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு கோகுல்ராஜும் சுவாதியும் சென்றுள்ளனர். அங்கு வந்த 'தீரன் சின்னமைக்கவுண்டர் பேரவை'யினர் (ஒருவரின் பெயர் யுவராஜ்) இருவரையும் தாக்கி, சுவாதியை மட்டும் விரட்டிவிட்டு கோகுல்ராஜை இழுத்துச்சென்றுள்ளனர். மறுநாள் திருச்செங்கோடு கிழக்குத் தொட்டில்பாளையம் என்னும் ஊரில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கோகுல்ராஜின் உடல் கிடந்துள்ளது. கோகுல்ராஜின் குடுப்பத்தினர் புகார்கொடுத்தும்,  கோகுலை அடித்து இழுத்துச்சென்றவர்கள் யுவராஜின் கும்பல்தான், அவர்களின் காரில் 'தீரன் சின்னமலை' என்று இருந்தது என்று சுவாதியால் தகவல்தரப்பட்டும் காவல்துறையால் நடவடிக்கை எடுக்கபடவில்லை. அப்பகுதி தலித் அமைப்புகள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

கோகுல்ராஜின் தந்தை இறந்துவிட்டார். கோகுல்ராஜும் அவரது அண்ணன் கலைச்செல்வனும் அவர்களின் தாய் சித்ராவினால் சிறப்பாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். கலைச்செல்வன் முதுநிலை பொறியியலும் கோகுல்ராஜ் இளநிலை பொறியியலும் படித்திருக்கிறார்கள். ஜாதிவெறி அந்த இளைஞனின் தலையை மட்டுமல்ல, ஒரு தாயின் உழைப்பை, நம்பிக்கையை, எதிர்காலத்தையும் துண்டித்திருக்கிறது.

தருமபுரி பயங்கரத்துக்குப்பிறகு தமிழ்நாட்டில் காதலுக்கு ஜாதிவெறியர்கள் கடுமையான,கொடுமையான எதிர்க்கருத்துக்களைப் பரப்பிவருகின்றனர். ஜாதியை அசைத்துப்பார்க்கும் காதலின் மீதான ஜாதிவெறியர்களின் தாக்குதல்களும் வன்முறைகளும் எப்போதும் இருந்து வருபவையாக இருப்பினும் தருமபுரி பயங்கரத்திலிருந்துதான் அவற்றுக்கு அரசியல் அதிகாரத்தின் துணை வெளிப்படையாக கிடைத்தது. தருமபுரி இளவரசனின் சடலத்தைப்போலவே கோகுல்ராஜின் சடலும் தண்டவாளத்திலேயே வீசப்பட்டிருப்பது ஜாதிவெறியின் அரசியலின் அடையாள உறவேயாகும். இதை தெளிவாகத் திட்டமிட்டேதான் ஜாதிவெறிக்கும்பல் செய்திருக்கிறது. கோகுல்ராஜின் கொலைக்கு காரணமானவர்கள் சாதாரண, சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்தவர்கள் அல்லர். அவர்கள் ஜாதிவெறியை நிலை நிறுத்துவதற்காக எக்கொடியச்செயலையும் செய்ய துணிந்த பயங்கரக்குற்றவாளிகள். சமூகவெளியில் நடமாடவே அவர்களை அனுமதிக்கக்கூடாது. அவர்களை முதலில் கைது செய்யவேண்டும். வழக்கும் தண்டனையும் முடியும் வரை அவர்களை ஜாமீனில் விடவும்கூடாது.

தலித் அமைப்புகளின் பணி இன்னும் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படவேண்டும். சமூகப்பாதுகாப்புக்கு உத்திரவாதமில்லாத சூழலில் அமைப்புகள்தான் அதை நிவர்த்திசெய்யவேண்டும். தலித் அமைப்புகள் விரைவில் கூட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். இளைஞர்களுக்கு அறிவு,பாதுகாப்புக்குறித்த பயிற்சிகளை அளிக்கவேண்டும். 

கோரிக்கைகள்.
1.கோகுல்ராஜ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். அவர்கள்மீது கொலை மற்றும் வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.
2.கோகுல்ராஜ் குடும்பத்திற்கு ரூ 1 கோடி கொடுக்கவேண்டும். உடனடியாக கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனுக்கு அரசுவேலைக்கொடுக்க வேண்டும்.
3.கோகுல்ராஜின் தாய் சித்ரா அவர்களுக்கு 5 ஏக்கர் வேளான் நிலத்தை அரசு உடனடியாகக்கொடுக்கவேண்டும்.
4.வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்யவும் குற்றவாளிகளை கைதுசெய்யவும் பாதுகாப்புக்கொடுக்கவும் தமிழக அரசு உடனடியாக தலித்துகளுக்கென தனி காவல் பிரிவை உண்டாக்கவேண்டும். 
5.கொலைவெறியை பரப்பும் ஜாதி அமைப்புகளை,குழுக்களை தடை செய்யவேண்டும். 

-க.திருவள்ளுவன்.