ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

சேரிகள் எரிப்பு: வேண்டும் தீர்வுக்கான சிந்தனை.

ஸ்டாலின் தி

விழுப்புரம் மாவட்ட சேஷசமுத்திரம் சேரி வன்னியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறதுபெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. தலித்துகளால் உருவாக்கப்பட்ட மரத்தாலானா விலைமதிப்புள்ள 'அம்மன் தேர்' எரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சாதிவெறிதான் காரணமென்பது அப்பட்டமான உண்மை. அதே போல் இதற்கு இன்னொரு முக்கியமானக் காரணமும் இருக்கிறது. அது எண்ணிக்கை.

அந்த கிராமத்தில் வன்னியர்கள் சுமார் 3000 குடும்பங்கள். ஆனால் தலித்துகள் 100 குடும்பங்களுக்கும் குறைவு. தமிழகம் முழுக்க- இந்தியா முழுக்கவும் கூட- இப்படி மக்கள்தொகைக் குறைவான சேரிகள் ஏராளம் உள்ளன. இந்தச் சிறிய  சேரிகள்தான் சாதிவெறியர்களின் வன்முறைக்கான களங்களாக பெரிதும் பயன்படுததப்படுகின்றனதங்களை தங்களின் ஆதிக்கத்தை தலித்துகள் எதிர்த்து வென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஜாதி இந்து இத்தகையச் சேரிகளை ஒடுக்கிவருகிறார்கள். இந்தச் சேரிகளை ஒருவகையில் பணயக்கைதிகளாகவே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சிறிய சேரிகளை ஒடுக்குவதன் மூலம், கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்கள் தங்களின் சாதியத்தை அச்சுறுத்தலான சக்தியாக காட்டுகிறார்கள். இது சேரிகள் மீதான ஒடுக்குமுறையின் முக்கிய அம்சமாக இருக்கிறது. அதேபோல அதிகம் பேசப்படாத விஷயமாகவும் இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் தனிக் குடியேற்றங்களைக் கோரியதன் பின்னுள்ள காரணம் இதுதான். ஆனால் இன்றைக்கு அம்பேத்கரிய இயக்கங்கள் இக்கோரிக்கையில் கவனம் செலுத்துவது குறைந்துள்ளது. ஏறத்தாழ கைவிடப்பட்ட கோரிக்கையாகத்தான் இருக்கிறது. எம்முடைய பார்வையில் தனி நகரங்கள் அல்லது தனி மாநிலம் என்பதை விவாதித்துக்கொண்டிருக்கிறோம். சாதி இந்துவின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு அவர்களின் நிலத்திலேயே உழைத்துக்கொண்டு அவர்களின் தீண்டாமையையெல்லாம் அனுபவித்துக்கொண்டு, அடி உதைப் பட்டுக்கொண்டு, உயிரையும் கற்பையும் உடைமைகளையும் இழந்துகொண்டு அவர்களிடம் உரிமையையும் கேட்டுக்கொண்டு வாழ்வது சரியானதுதானா என்று நாம் இனியும் கேட்காமல் அல்லது அத்தகையக் கேள்விக்கு விடையோ தீர்வோ தேடாமல் இருந்தால் அதுவே நம் விடுதலையை இன்னும் தள்ளிப்போடும் காரணங்களாகிவிடும் ஆபத்திருக்கிறது.

இங்கே நாம் ஆராயப்படவேண்டிய தீர்வுகளை சுருக்கமாகச் சொன்னால், சாதி இந்துக்களின் கட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் சிறியவகைச் சேரிகளை அங்கிருந்து வெளியேற்றி தலித்துகளுக்கான தனி நகரங்களை உருவாக்கி அங்கே அமர்த்தவேண்டும். அல்லது ஒவ்வொரு மாநிலத்திலும் தலித்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனி மாநிலங்களை உருவாக்கவேண்டும். அவ்வகைப் பிரதேசங்களின் நிலம், வளம், தொழில் என அனைத்தும் தலித்துகளிடமே இருக்கவேண்டியுள்ளதால் அதில் சாதி இந்து தம் ஆதிக்கத்தைச் செலுத்த வழியற்றுப் போகிறது.

இப்பிரச்சனைக்குறித்து,  இவ்வகையான தீர்வுகள் குறித்து நமக்கு சிந்தனையும் உரையாடலும் அவசியமாகிறது என்பதைத்தான் சேஷசமுத்திரம் உணர்த்துகிறது.