சனி, 23 மார்ச், 2013

தமிழக மீனவர்களுக்குக் குரல் கொடுக்கும்,
தமிழக அரசியல் கட்சிகளே,
          மாணவர்களே வாருங்கள் மீனவர்களுக்குத்                   'தன்னாட்சி' கோருவோம் !
- க.திருவள்ளுவன்


மீன்பிடித் தொழில் என்பது மனிதர்களிடம் தொன்றுதொட்டே இருக்கின்ற ஓர் தொழில் தான் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டுமே மீன்பிடித் தொழிலைச்செய்யவில்லை யார் வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாம், எப்போது வேண்டுமானாலும் மீன்பிடிப்பதை விட்டு விட்டு வேறு வேலைகளை அவர்கள் செய்யலாம். ஆரியர்கள் இந்தியப்பகுதியைக் கைப்பற்றுவதற்கு முன்னால், யார் எந்த வேலையையும் செய்யலாம்.
ஆரியர்கள் கைக்கு இந்தியப் பகுதிகள் சென்றப் பிறகு தான், சாதிகள் உருவாக்கப்பட்டன சாதிக்கொரு வேலையென்று தீர்மானிக்கப்பட்டது. கட்டாயப்படுத்தப்பட்டது. அதாவது, உழைப்பின் சனநாயகம் பறிக்கப்பட்டது. மீன்பிடித்தவர்கள், அத்தொழிலை விட்டு விட்டு வேறு வேலையைச் செய்யமால் தடுக்கப்பட்டார்கள். அவர்கள் மீன்பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்கள் மீனவர்களே !
மீனவர்களில் சிலர் அரசுப்பணிகளிலும், ஆலைப்பணிகளிலும் மற்றும் வேறு தொழில்கள் செய்தாலும் அவர்கள் மீனவர்கள் என்று தான் அழைக்கப்படுவார்கள். அறிவின் அடிப்படையில் அவர்கள் பார்க்கப்படுவதில்லை. எத்தொழிலுக்குச் சென்றாலும் அவர்கள் பிறவியின் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள், பார்க்கப்படுவார்கள்.இந்த இழிவான நிலை அவர்களுக்கு இந்து மதமே அதாவது பார்ப்பனர்களாலேயே உருவானது.
மீனவர் மீது அக்கரை உள்ளவர்கள் போல் காட்டிக்கொள்பவர்கள் இந்த இழிவை நீக்க ஏன் முன் வரவில்லை?
அவர்களுக்கு என்று வாழ்வதற்குத் தனி குடியிறுப்புகள், அவர்கள் வேறு சமூகப்பிரிவுகளிடம் சாதிகளிடம் திருமண உறவுகொள்ளக் கூடாது, வேறு எந்த உயர் அரசுப்பணியிலும் அவர்கள் பங்கு பெற வாய்ப்பு கிடையாது. இப்படி தான் நாகவம்சம் பல்வேறு சாதிகளாகப்பிரிக்கப்பட்டு அவர்களுக்கு என்று ஓர் வேலையும் பிரிக்கப்பட்டன. இச்சாதிகள் எல்லாம் ஆரியர்களுக்கு உட்பட்டு அவர்கள் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு கொண்டு வரப்பட்ட சாதிகளில் சில சாதிகள் உயர் சாதிகள் என்ற தகுதியை பெற்று, பல உரிமைகளைப் பெற்றன. பல சாதிகள், சாதியின் படி நிலையில் கீழ்சாதிகளாக்கப்பட்டன. அவ்வாறு ஆக்கப்பட்ட சாதிகளில் கீழான சாதிகளில், மீனவர்களும் ஒரு சாதியினர் என்பது வரலாற்று உண்மை. இவர்களைக் கீழ்சாதியாகவே வைத்திருப்பதற்கு இந்து மதத்தை ஆரியர்கள் உருவாக்கி இவர்களுக்கு எவ்வித உரிமையுமில்லாமல் கடல் நீங்கலாக இந்திய பூமியில் எல்லாவித மண்ணுரிமையையும் பறித்தனர்.
இந்து மதத்தின் மனு தர்ம அடிப்படையில், வர்ணசிரம அடிப்படையில் அதற்கானச் சட்டங்களைக்கொண்டுவந்து, மன்னர்களின் ஆட்சி மூலம் நடைமுறைப்படுத்தினார்கள். மீனவர்கள் விவசாயம் செய்யவோ, வியாபாரம் செய்யவோ வாய்ப்பில்லாமல், அவர்களின் சன நாயக உரிமைகள்  அன்றே பறிக்கப்பட்டுவிட்டது. இலங்கை அரசு மட்டும் மீனவர்களை அழிக்கவில்லை. ஆரியர்களும் அவர்களின் இந்து மதமும், இதன் அடிப்படையில் ஆண்ட ஆட்சிகளும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே மீனவர்களை அழிக்க ஆரம்பித்துவிட்டனர் அந்த அழிப்பு இன்று வரை இந்துத்துவா பாசிச சக்தியால் தொடரப்படுகிறது. இந்திய விளை நிலங்களில் எவ்விதப் பங்கும் மீனவர்களுக்கு இல்லை. அவர்கள் மீன்பிடித்தொழிலை கைவிட்டு, விவசாயம் செய்யலாம் என்று விளை நிலங்கள் பக்கம் திரும்பினால், விளை நிலங்கள் பெரும் பகுதி இந்து பண்ணையார்களின் கையிலும், இந்து கோயில்களின் கையிலும் சிக்கியிருக்கின்றன.
அவர்கள் வியாபாரம் செய்யலாம் என்று வியாபாரத்தை நோக்கி வந்தால், இந்திய வியாபாரமும் இந்து உயர் சாதிகளின் கைகளில் இருகிறது. அவர்கள் கல்வி கற்று ஆட்சியில் நவீன தொழிற்சாலைகளில் பணி செய்து வாழ்க்கையை ஓட்டலாம் என்று இந்தப்பக்கம் திரும்பினால், அவர்களுக்கான கல்வியும் தேவைக்கான அளவுக்கு மறுக்கப்பட்டு, ஆட்சியும், நவீன தொழில் துறையும் இந்து ஆதிக்கக்சாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மீனவர்கள் தடுக்கப்படுறார்கள். எனவே வேறு வழியில்லாமல் மீனவர்கள் கடலுக்கே கட்டாயப்படுத்தித் தள்ளப்படுகிறார்கள்.
மீனவர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரமில்லை. அவர்களை, அரசியல் தலைவராகவோ, ஆன்மீகத்தலைவர்களாக வர முடியாதவாறு சாதிப்படிநிலையின் அடியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சமூகத்திற்கு உள்ள கடல் பொருட்களின் உணவுகளின்  தேவைகளை பூர்த்தி செய்ய மீனவர்களே கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. கடலில் உழைப்பதே உங்கள் கடமை என மதத்தின் மூலம் ஆரியர்கள் அவர்களுக்கு போதித்திருக்கிறார்கள்.
எல்லையைத்தாண்டினார்கள் என்று இலங்கைச்சுடுகிறது. எல்லையைத்தாண்டினால் மீன் கிடைக்கும் என்ற அவலநிலை உள்ளதும் உண்மை. எல்லை தாண்டி வந்தார்கள் என்று சில ஆண்டுகளாக, சுமார் 600 தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. பல கோடி பொறுமானமுள்ள மீன்பிடிப்பதற்கான சாதனங்களை இலங்கை இராணுவம் அழித்திருகிறது.
ஒரு பக்கம் இந்திய எல்லையில் மீன்பிடித்தாலும் உயிருக்குப்பாதுகாப்பு இல்லாத அச்சத்தோடு வாழும் நிலை. இது போன்ற செயற்கை துயரம் ஒரு பக்கம் என்றால் சுனாமி போன்ற இயற்கைத்துயரங்கள் வேறு. இத்தனைத் துயரங்களுக்கும் மாற்றே இல்லையா? உண்டு ! அது தான் மீனவர்களுக்கான ''தன்னாட்சி''.
              கடலை ஒட்டி ஐந்து கிலோ மீட்டர் அகலமுள்ள தரைப்பகுதியை அரசு துறைமுகப்பயன்பாட்டிற்கு போக எஞ்சிய பகுதியை மீனவர்களின் தன்னாட்சி பிரதேசமாக ஒதுக்கிட வேண்டும். அப்பகுதியில் மீனவர்களின் தேவையான குடியிருப்பு, கல்விக்கூடங்கள், தொழிற்கூடங்கள், மீன் சம்பந்தப்பட்ட  பிற தொழிற்கூடங்கள் அவர்களுக்குத்தேவையான உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் நிலங்கள், தோட்டங்கள், படகு, மீன்பிடி கப்பல் இன்னும் பிற எத்தொழிலும் எந்த நவீனத்தொழிலும் செய்யப்பயன்படும் வகையில் அப்பிரதேசம் இருக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான வணிக வளாகங்கள் அப்பிரதேசத்தில் அவர்கள் உருவாக்கிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை கட்டாயம் குறையும்.
இதனால் கடல் எல்லையைத்தாண்டுகின்ற அவசியம் வராது. அனைத்துத் தொழிலுக்கும் செல்லும் சன நாயகத்தை அவர்கள் பெறுவார்கள். மீனவர்களைப் பாதுகாக்க, அவர்களுக்கென்று மீனவர்களைக் கொண்ட படை அமைக்கப்பட வேண்டும். அப்படை மீன்பிடித்தொழில் செய்யும் போதும், பிற தொழில் செய்யும் போதும் பாதுகாப்பு அளிக்கும்.
மீனவர்களுக்குரிய, சட்டமன்ற, பாராளுமன்றம் போன்ற அரசியல் உறுப்பினர்களை மீனவர்கள் மட்டும் தேர்வு செய்யும் உரிமை பெற்றிட வேண்டும் ! அவர்களுக்கு என்று தனி உள்ளாட்சி அமைப்பு உருவாக்கிட வேண்டும். மீனவர்களுக்கு ஒதுக்கப்படும்  நிதியை மீனவர்களே செலவு செய்யும் உரிமை பெற்றிட வேண்டும்.
அவர்கள் வாழும் பகுதி தனி வருவாய் கிராமமாக அறிவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு  என்று கிராமக் காவலர் முதல் தலைமை செயலாளர் வரை உருவாக்கிட வேண்டும். அதற்கான செயலகங்கள் தனியே உருவாக்கிட வேண்டும். அண்டை நாட்டு மீனவ அமைப்புகளுடனும், அரசுகளுடனும் மீன்பிடிப்பது சம்மந்தமாக பேச்சு வார்த்தை நடத்திடும் அதிகாரம் வேண்டும்.
கடற்கரை ஓரமுள்ள ஐந்து கிலோமீட்டர் அகலமுள்ள மீனவ தன்னாட்சிப்பகுதிகளில் மீனவரல்லாத குடியிருப்புகள், தொழிற்கூடங்கள், விடுதிகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும். அரசே தன் தேவைக்குப்பயன்படுத்தும் தேவை இருந்தாலும் மீனவர்கள் அனுமதி அளித்தால் தான் பயன்படுத்தலாம்.
மீனவர்களுக்கென்று தனி உள்ளாட்சி, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உருவாக்கிட வேண்டும். மீனவர்கள் தங்களைத் தாங்களே ஆண்டிடும் வாய்ப்பை உருவாக்கிட வேண்டும். அவர்களுக்கு என்று தனி விவசாயத்துறை, வங்கித்துறை, காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை மற்றும் அவர்களுக்கு தேவையானத் துறைகளை அவர்களே நிர்வாகம் செய்யும் உரிமை அளித்திட வேண்டும். இதை அமைத்திட அவர்களுக்குத் தன்னாட்சி அளித்திட வேண்டும்.
உள் நாட்டு மீனவர்களுக்கும், இத்தகைய தன்னாட்சி பிர தேசங்களை உருவாக்கிட வேண்டும். இன்று மீனவர்களின் வாழ்வு இந்து உயர் சாதி ஆதிக்க சக்திகளின் கைகளில் உள்ளது. இது தான் அவர்களின்  வாழ்க்கைச் சீரழிவிற்கு மூலக்காரணம். இதை மாற்றி, மீனவர்களின் வாழ்வு மீனவர்களால் தீர்மானிக்கும்  நிலைவர வேண்டும்.
மீனவர்களுக்கு என்று தனியாக எண்ணை நிறுவனம் உருவாக்கிட வேண்டும். மீனவர்களுக்கு தேவையான பண்டங்களை மீனவர்களே தயாரிக்கும் வாய்ப்பு பெற்றிட வேண்டும். அவ்வாறு தயாரிக்க முடியாத பண்டங்கள், மீனவ கூட்டுறவு விநியோக சங்கங்கள் மூலம் மீனவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
மீன்,  மீன் சார்ந்த, மீனவர்களால் தயாரிக்கப்படும் பொருள் ஏற்றுமதி, இறக்குமதி அவர்களின் கட்டுபாட்டிலிருக்க வேண்டும். மீன் பிடித் தொழிலுக்கென்று  கடலோரக் காவல் படை மீனவர்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இப்படிப்பட்டத்தன்னாட்சி அமைப்பு முறையே மீனவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்கும் முறையாகும். இதுவே உண்மையான சுதந்திரமாக இருக்க முடியும். இத்தகைய தன்னாட்சி முறையே, தலித்துகள், பழங்குடிகள், சீக்கியர்கள்,இஸ்லாமியர்கள்,கிறித்தவர் போன்றோர்களுக்கு விடிவைத்தரும், வெளிச்சத்தை தரும்.
இந்திய என்ற நாடு 10% மக்களுக்கு உரிய நாடாக உள்ளது. இந்த 10% மக்கள்  தான் அரசியல், பொருளாதாரம், சமூகம், மதம் ஆகியவற்றில் தன்னிறைவு பெற்றவர்களாக இந்திய சுதந்திரத்தை நுகரும் மக்களாக வாழ்ந்துவருகிறார்கள். இவர்களே இந்தியாவை ஆளுகின்றனர். எஞ்சிய 90% மக்கள் சாதிய ஒடுக்கும் முறையும், அரசியல் ஒடுக்குமுறையும், பொருளாதார அடக்கு முறையும், மதரீதியான ஒடுக்குமுறையும் உள்ளவர்களாக அதாவது அடிமைகளாக, கொத்தடிமைகளாக, வயிற்றுக்கே போராடும் வறியவர்களாக, இந்திய வளங்களை உற்பத்தி செய்து, அந்த வளங்களை நுகர உரிமையற்றவர்களாக, வறுமைக்கோட்டுக்குக்கீழே வாழும் விலங்கினும் கீழானவர்களாக வாழ்ந்து - மன்னிக்க வேண்டும் - அழிந்துவருகிறார்கள்.
எனவே இந்திய மக்கள் விடுதலை என்பது இந்தியன் என்ற வகையிலோ, இந்து என்ற வகையிலோ, வர்க்கம் என்ற வகையிலோ, தமிழ் தேசியம் போன்ற இன ரீதியிலான வகையிலோ திரட்டப்பட்டு விடுதலையாவதற்கு வாய்ப்பில்லை சமூக ரீதியாகத்திரட்டி, தன்னாட்சி அதாவது தனி மாநிலங்கள் பெற்று அதற்குரிய  மண்ணும் பிரிக்கப்பட்டு இச்சமூகங்கள் அதாவது இந்து, சீக்கியர், தலித்துகள், பழங்குடிகள், இஸ்லாமியர், கிறித்தவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்த பாராளுமன்றமும் அதே நேரத்தில் இவர்களுக்கான தனி வாழ்விடமும்,  தனிசட்ட மன்றமும், தனி நிர்வாகங்களும் உள்ள 'தன்னாட்சியே'  இச்சமூகங்களுக்கு விடுதலையைக்கொடுக்கும். மீனவர்கள் அந்தந்த இந்து  மாநிலங்களில் தன்னாட்சி பெற்று ஒருங்கிணைந்து வாழ்வதா? அல்லது தன்னாட்சியுடன் கூடிய தனி மாநிலமா என்பதை அம்மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால் தன் வாழ்க்கையைத் தானே முடிவெடுக்கும் உரிமை தான் எந்த ஒரு சமூகத்திற்கும்  விடுதலையை அளிக்கும்.