சனி, 23 ஏப்ரல், 2016

கருணாநிதியின் பயணம் சொல்லும் குறிப்புகள்.

தி.ஸ்டாலின்




92 வயதில் பிரச்சார பயணம் மேற்கொள்ளும் தலைவர் இந்திய அளவில் -சர்வதேசத்திலும் கூட-கருணாநிதியாகத்தான் இருப்பார். இந்த தள்ளாத வயதிலும் பதவி வெறிப்பிடித்து அலைகிறார், தன் வாரிசுகளுக்கு அதிகாரத்தை கைமாற்றி விடுவதற்கு கொளுத்தும் வெய்யிலில் கிளம்பிவிட்டார், மீண்டும் மீண்டும் சாதி, ஊழல் ஆதிக்கவாதிகளை அரசுத்தளத்தில் அமர்த்த முயற்சிக்கிறார் என்றெல்லாம் அவரது இன்றைய பயணம் விமர்சிக்கப்படுகிறது. இவ்விமர்சனத்தில் உண்மையும் இருக்கிறது. ஆனால் கருணாநிதியின் பயணம் நமக்கு சொல்வது இவைகளை மட்டும்தானா?


14 வயதில் துவங்கிய கருணாநிதியின் பயணம் 78 ஆண்டுகளாக தொடர்கிறது. அவரை எது இத்தனை ஆண்டுகள், இவ்வளவு தூரம் பயணப்பட வைத்தது. இத்தனை ஆண்டுகளில் அவருக்கு நேர்ந்தவைகள் வேறு யாருக்கும் நடந்திருந்தால் எப்போதோ அரசியல் தளத்திலிருந்து விலகி ஓடியிருப்பார்கள். அவரை இன்னமும் இங்கே நிறுத்தி வைத்திருப்பது அவருடைய பயணம் தான். அவரது பயணம் அவ்வளவு எளிதானதாக வாய்க்கவில்லை. பசி,பட்டினி,ஏழ்மை, சாதி, போட்டி பொறாமை, துரோகம், அதிகாரம் என சகலமும் குறுக்கிட்டு தடுத்துப்பார்த்தன அவரது பயணத்தை. பலமில்லாத, ஜனத்திரள் இல்லாத சாதியிலிருந்து ஒருவர் பொதுத்தளம் நோக்கி வரும்போது எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் எதிர்கொண்டது அவரது பயணம். எல்லாவற்றையும் கடந்துதான் இன்றும் பயணப்படுகிறார். அவர் இந்த பயணத்தை இவ்வளவுதூரம் கொண்டுவருவதற்கு அறிவு,தந்திரம்,அதிகாரம், சாதி என அனைத்தையும் பயன்படுத்தினார். இந்த பயணத்தில் தொடர அவர் செய்துகொண்ட சமரசங்களும் பின் வாங்கலும் அப்பட்டமானவை. ஆனால் அவர் எதற்காகவும் பயணத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் கருணாநிதி 'வனவாசம்' சென்றதாக கூறப்படுவதுண்டு. அவருக்கு வனவாசமும் பயணம்தான் என்பதை நிருபித்தும் காட்டினார்.


கருணாநிதியின் சாதி இசை வேளாளர். அப்படி பெருமையாக அதுக் கூறப்பட்டாலும் அச்சாதிக்குள் ஒரு ரணம் உண்டு, பார்ப்பனக் கும்பலால் தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட பெண்கள் இச்சாதியைச் சார்ந்தவர்கள்தான்.இதன் பின்னணியிலிருந்து எழுந்த பிராமண எதிர்ப்பு குணம்தான் கருணாநிதியை 78 ஆண்டுகளுக்கும் முன் புறப்படவைத்தது. அப்போது அவர் புறப்பட்ட போது, மூன்று மனைவிகள், திசைக்கொரு வாரிசு, அவர்களுக்கான சமரசங்கள் போன்ற கனவெல்லாம் இல்லை. அவர் புறப்பட்டதற்கு ஒரே காரணம் பிராமண எதிர்ப்பு. அப்படியொரு வலுவான காரணம்தான் ஒருவரின் பயணத்தையும் வலுவாக்கும் என்பதற்கு இன்று நம்மிடமுள்ள சாட்சிதான் கருணாநிதி. அதனால்தான் பிராமணர்கள் அவரை விரும்புவதுமில்லை. ஸ்டாலினை, ஸ்டாலின் தலைமையேற்கப்போகும் திமுகவை அவர்கள் விரும்ப தயாராக இருக்கிறார்கள். கருணாநிதியும் சமரசங்களுக்கு பெயர் போனவர்தான். ஆனாலும் அவரை அவ்வளவு எளிதாக பிராமணர்கள் நம்பிவிடுவதில்லை. பிராமணர்களுக்கு வீரமணியெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் இன்னமும், பல சமரசங்களை செய்துகொண்ட பின்னரும் கருணாநிதியை அவர்கள் ஏற்கத்தயாரில்லை. அவரை இன்னமும் பிராமணர் எதிர்ப்பின் அடையாளமாகவே பார்க்கிறார்கள். ஒரு பக்கம் ராமானுஜருக்கு வசனம், இன்னொரு பக்கம் 'இந்து என்றால் திருடன்' என்கிற விளக்கம். அதனால்தான் அவரை பிராமணர்கள் எச்சரிக்கையோடு பார்க்கிறார்கள். பிராமணாள்களைப் பொறுத்தவரை அவர் 'துரோகி'தான்.  அவர் மீது பிராமணர்கள் கொண்டிருக்கும் வன்மத்தைதான் துக்ளக் சோவும் ஜெயலலிதாவும் நமக்கு  அவ்வப்போது காட்டிவருகிறார்கள். கருணாநிதியை 'தீய சக்தி' என்று ஜெயலலிதா கூறியது வெறும் அரசியல் மோதலின் சொல்லல்ல. பிராமணருக்குள்  இருக்கும் பிராமண அல்லாதவர் மீதான வெறுப்பின் மனநிலை அதுதான்.


அவரது பயணம் சூத்திர ஜாதி ஆதிக்கத்தை வளர்த்தது. ஊழல் சீரழிவை பரவலாக்க உதவியது. அதிகாரத்திற்கும், பிழைப்புக்குமான அவரது பயணம் ஒரு போதும் எரிக்கப்பட்ட சேரிகளுக்குள் வந்ததில்லை. இவை உறுதியான உண்மை . ஆனாலும், வலுவில்லாத எளிய சாதியைச் சார்ந்த ஒரு சாமானியன் 92 வயதிலும் ஆளுவதற்காக முயற்சிக்கிறான் என்றால் அதற்கு காரணமான பயணத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. கருணாநிதியிடம் கற்க கூடாத விஷங்கள் நிறைய இருக்கின்றன. ஆனாலும் அவரிடம் நாம் கற்க ஏதேனும் இருக்கிறதென்றால் அவற்றில் அவரது பயணம் முக்கியமானது.