ஞாயிறு, 21 ஜூன், 2015

யோகா நல்லதுதான். வாழும் கலைதான். ஆனால் இங்கே வாழ்வது அவ்வளவு எளிதானதாக இருக்கிறதா?

யோகா நல்லதுதான். வாழும் கலைதான். ஆனால் இங்கே வாழ்வது அவ்வளவு எளிதானதாக இருக்கிறதா என்பதையும் மோடிகள் பேசவேண்டும். ஜாதிவெறி,மத,இனவெறி, இலாபவெறி, வறுமை என பல கொடும்பிரச்சனைகள் இந்திய மண்ணில் மனித வாழ்க்கையை சிதைத்துக்கொண்டிருக்கின்றன. இப்பிரச்சனைகளுக்கும் மத்தியில் ஒருவர் உயிரோடு வாழ்வதே மிகப்பெரிய கலைதான். ஆனால் மோடி போன்ற மத அரசியல்வாதிகள் மேற்பூச்சாக சிலவற்றைத்தூக்கிக்காட்டுகிறார்கள். இன்று யோகாவை உயர்த்திக்காட்டியதும் அப்படித்தான்.

சூரிய வணக்கம் நல்லதுதான்.ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் எந்தக்கூரையுமின்றி நடைபாதையில் கோடிக்கணக்கான மக்கள் இங்கே வசித்துமடிகிறார்களே, அவர்களுக்கு என்னதீர்வு?
நாடுமுழுவதும் கோடிக்கணக்கானபேர் இன்று யோகாவை செய்ததற்காக பெருமைப்படும் இந்நாட்டில்தான் இதேதினத்தில் சுமார் 30 கோடி மக்கள் பட்டினியையும் அனுபவித்துள்ளார்கள்.

தலித்துகள் பழங்குடிகளின் வாழ்க்கைநிலை உயர்த்தப்படுவதைக் குறித்து அக்கறைக்காட்டாத அரசுகளும் அரசியல்வாதிகளும் அம்மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு எந்த யோகாவை பரிந்துரைக்கமுடியும்?

யோகாவை உலகம் முழுக்க ஏற்றுக்கொண்டார்கள். மருத்துவ அறிவியலிலும் அதற்கான இடம் எப்போதோ கிடைத்துவிட்டது. ஆனால் தம்மால்தான் அதெல்லாம் நடந்தது என்று பீற்றிக்கொள்ளும் மலிவான அரசியலுக்கே மோடிக்கும்பல் யோகாவைக்கையிலெடுத்தது. யோகாவை பள்ளிகளில் கிராமங்களில் கொண்டுசெல்ல கல்வித்துறையும் சமூகநலத்துறைகளும் பயன்படுத்தப்படவேண்டும். அதைவிட்டு நாட்டில் உள்ள பிரச்சனைகளையெல்லாம் கவனிக்காமல் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகளில் ஒரு நாட்டின் பிரதமர் பங்கேற்பது அதிகப்பிரசங்கித்தனம்தான்.

ஸ்டாலின் தி
21-06-2015