செவ்வாய், 22 செப்டம்பர், 2015

காவல் அதிகாரி விஷ்னுபிரியா மரணத்திற்கு அதிமுக அரசே முழுப் பொறுப்பு.

க.திருவள்ளுவன். 


காவல்துறை அதிகாரி விஷ்னுப்பிரியாவின் மரணம் குறித்த விசாரணைகளும் விவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. கண்டனங்களும் கருத்துரைகளும் தொடர்கின்றன. ஆனால் இவையெல்லாம் எதைநோக்கிப்போகின்றன என்பதுவும் முக்கியம். கோகுல்ராஜுக்களும் விஷ்னுப்பிரியாக்களும் எதன் விளைவுகள்? ஏன் கோகுல்ராஜுக்களுக்கும் விஷ்னுப்பிரியாக்களுக்கும் மரணம் எளிதாக கிட்டிவிடுகிறது?
சாதிவெறிதான் இவற்றின் பின்னணி என்பதை எல்லோரும் அறிவர். சாதியமுறை இருக்கும்வரை சாதிவெறியும் இருக்கும். சாதிவெறி இருக்கும்வரை இதுபோன்ற சாதிப்படுகொலைகள் இருக்கும்தான்.

விஷ்னுபிரியாவுக்கு ஏன் அழுத்தம் கொடுக்கப்பட்டது? சாதிவெறிக் கொலையை விசாரணைச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான். அதாவது சாதிவெறியை அரசு அனுமதிக்கவேண்டும். இதைச்சொல்வதும் அரசுதான், அதாவது அரசு அதிகாரிகள்தான். விஷ்னுப்பிரியாவின் கழுத்தை நெறித்தது சாதிவெறிக்கு துணைபோன அரசுதான். விஷ்னுப்பிரியாவின் மரணத்திற்கு முழுப்பொறுப்பையும் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுதான் ஏற்கவேண்டும். தன்னை 'அம்மா' என்றைழைக்கும் தொண்டர்களைக்கொண்ட ஜெயலலிதாவின் அரசு யந்திரம் சில சாதிவெறிக்குற்றவாளிகளைக் காக்க ஒரு நேர்மையான, தலித் சமூகத்தைச்சார்ந்த பெண் காவல் அதிகாரியை காவுவாங்கிருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று முதலில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும்.
விஷ்னுப்பிரியாவின் மரணச்சம்பவத்தை வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்காகபதிவு செய்யவேண்டும்.
கோகுல்ராஜ் மற்றும் விஷ்னுப்பிரியா மரணங்களுக்குக் காரணமானவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும்.
கோகுல்ராஜ் மற்றும் விஷ்னுபிரியா குடும்பத்திற்குன் அரசு உடனடியாக ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடாக அளிக்கவேண்டும்.
தலித்துகளைப் பாதுகாக்க தனி காவல்பிரிவுகள் அமைக்கப்பட்டு தலித் காவலர்களை மட்டும் அதில் பணியமர்த்தவேண்டும்.
தலித் மீதான சாதிவெறியை விசாரனை செய்ய தனிநீதி மன்றங்களை அமைக்கவேண்டும்.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களின் மூலம் சாதிவெறியை பாதுகாக்கும் மாநில ஆட்சிகளை குடியரசுத்தலைவர் கலைக்கவேண்டும்.


குற்றங்களை விமர்சிப்பதும், கண்டிப்பதும் மட்டும் தீர்வைக்கொடுக்காது. குற்றமற்ற சூழலைத்தான் நாம் உருவாக்கவேண்டும். இதுபோன்ற சாதியச்சமூகத்தில் இதுபோன்ற சாதிய ஆட்சிகள்தான் நடக்கும். சாதியத்தை வீழ்த்தக்கூடிய, நல்லாட்சியைக் கொடுக்கக்கூடிய சக்தியாக தலித்சமூகம் மாறும்வரை நம் நிலை மாறாது என்பதை ஒவ்வொரு தலித்தும் உணரவேண்டும் என்பதைத்தான் கோகுல்ராஜுக்களும் விஷ்னுபிரியாக்களும் நமக்குச் சொல்லிச்செல்கிறார்கள்.