வியாழன், 28 மார்ச், 2013











நூறுநாள் வேலை திட்டம் : மக்களை வதைக்கும்
திட்டமா?


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், அருகில் உள்ள பட்டணம் எனும் ஊரில்      25-03-2013 அன்று நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் பணிசெய்து கொண்டிருந்த போது ஓடையின் மண்சரிவுக்கு நான்கு ஏழைப்பெண்கள் பலியாகியிருக்கிறார்கள். நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் ஒழுங்காக வேலைசெய்வதில்லை, அவர்களுக்கு வழங்கும் சம்பளம் வீணான செலவேயாகும் என சிலபுத்திசாலிகள்புலம்பிக்கொண்டிருக்கும் வேலையில் இந்த விபத்து நடந்துள்ளது. தங்கள் உழைப்பை உயிரைக்கொடுத்து உறுதிசெய்ய வேண்டிய நிலை மக்களுக்கு !
இந்த விபத்துக் குறித்து புலம்பல்புத்திசாலிகள் எதும் பேசப்போவதில்லை. ஆனால் நாம் பேசவேண்டிருக்கிறது. விபத்து நடந்த கிராமத்தின் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாநில அமைச்ச .மோகன் கொண்டுவந்த 25,000 ரூபாய் பணத்தை வாங்க மறுக்கிறார்கள். அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவரும் அவரது குடும்பத்தினரும் தங்களைவேலைஎனும் பெயரில் கடுமையாக வதைத்து வந்ததாக மக்கள் கூறுக்கிறார்கள்.
இது இந்த ஊரின் நிலை மட்டுமல்ல. தமிழகத்தின் பல கிராமங்களிலும் இது தான் நிலை. ’வில்லேஜ் மாஃபியாக்களாகஉருமாறிக்கொண்டிருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆதிக்கம் கிராமங்களில் பெரும் தலை வலியைக்கொடுக்கிறது. ஆயிரம் வாக்கு கொண்ட கிராமத்தில் கூட ஊராட்சி மன்ற தேர்தலின் போது இலட்சக் கணக்கில் பணம் செலவிடப்படுவதற்கு. அதிகாரத்திற்கான சந்தையாக ஊராட்சிகள் மாறிவிட்டது தான் காரணம். ஊராட்சி மன்ற தலைவர்களின் குடும்பங்களும் தலைவர்களின் அதிகாரத்தை கையாண்டு சுகம் காணுகின்றன. பல இடங்களில் ஊராட்சி தலைவர்களாகவந்துள்ள தலித்துகள் சாதி இந்துக்களால் அவமதிக்கப்படுவது நடக்கும் இதே காலகட்டத்தில், தலித் ஊராட்சித் தலைவர்களும் பல இடங்களில் சாதி இந்து தலைவர்களைப் போன்றே சீரழிவுக்குப்பட்டிருக்கிறார்கள். அரசியல் வாதிகளும், ஊராட்சிகளை கவனிக்க வேண்டிய அதிகாரிகளும் ஊராட்சி மன்ற தலைவர்களை தங்களின் ஊழல் வலைக்குள் கொண்டுவந்துவிடுவதால் மக்களால் எதிர்க்க முடியாத சக்திகளாக ஊராட்சி தலைவர்கள் மாறிவருகிறார்கள். பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக வரும் பெரும்பாண்மையான ஊர்களில் அந்த பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களாலும், தலித்துகள் ஊராட்சி மன்றத்தலைவராக வரும் பெரும்பாண்மை ஊர்களில் சாதி இந்துக்களாலுமே நிர்வாகம் செய்யப்படுகிறது. ஊராட்சி மன்றங்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து அப்படி ஒரு கட்டுப்பாடான அரசு இல்லை என்பது உண்மையாக இருந்தாலும் கூடவிலகி தனிராஜ்யங்களாகவிளங்குகிறது. சமீபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அல்லது தேர்தலில்  போட்டியிட்டவர்கள். படுகொலை செய்யப்படுவதை கவனித்தால் இதன் வீரியம் புரியும். இவர்களுக்கு இடையே ஆங்காங்கே மக்களோடு இணைந்து நிற்கும் பிழைக்கத்தெரியாத அப்பாவித் தலைவர்கள் இருப்பதும் உண்மை.
இன்னொரு பிரச்சனை இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம். முழுமையான ஊதியம் எங்குமே வழங்கப்படுவதில்லை. கேட்டால், ஊராட்சி மன்ற தலைவர்களும், அதிகாரிகளும் மக்கள் முழுமையாக வேலை செய்யவில்லை என்கிறார்கள். வேலை நடக்கும் இடத்தில் மக்கள் அரட்டை அடிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். அலுவலக கணிப்பொறிகளின் வழியே இணையதளத்தில் கூத்தடிக்கும் மேட்டுக்குடிகளின் வாதம் இது. சட்டமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, தங்களின் அலைபேசியில் ஆபாச படம் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் மரியாதை உழைக்கும் மக்களுக்கு கிடையாது. இங்கு யார் தான் ஒழுங்காக, முழுமையாக வேலை செய்கிறார்கள். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஒழுங்காக வேலைப்பார்த்தால் சமூக அவலங்களும் மலிவான ஊழல்களும் எப்படித்தொடரும். மின்சாரம்,தண்ணீர்,சுகாதாரம் என அடிப்படைத்தேவைக்கு மக்களின் அன்றாடப் போராட்டங்கள் நடக்கிறதே. தாங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு பிரதமரும், முதல்வர்களும், அமைச்சர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கலெக்டர்களும்,அதிகாரிகளும், தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ளத் தயாரா? இது மக்களை முட்டாளாக்கும் வித்தை. இவ்வளவு ஒழுங்காக வேலையைப்பற்றிக் கவலைப்படும் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊரில் இல்லாதவர்கள், மாணவர்கள் போன்றோர்களின் பெயரில் போலி அட்டைகளை உற்பத்தி செய்து ஊதியத்தை களவாடுகிறார்கள். ஊராட்சி ஒன்றிய அதிகாகளுக்கும் இந்த களவில் பங்கிருக்கிறது.
மூன்றாவது விஷயம், வேலை செய்யும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஆனால் கிடைக்காத பாதுகாப்புகள் பற்றியது. தற்போது இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பெண்களுக்கும் தலா ரூ.25,000 வழங்க முன் வந்து மக்களிடம் மூக்குடைப்பு அடைந்திருக்கிறது அரசு. மக்களின் போராட்டத்தால் இன்னும் தொகை கூடலாம். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு காப்பீடு ஏதும் இல்லை. காயம்பட்டால் இலவச மருத்துவ சிகிச்சை மட்டுமே உறுதியளிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்குறித்தெல்லாம் திட்டத்தில் எதுவும் சொல்லப்பட்டிருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தமிழக அரசு ஒரு குத்து மதிப்பாக 25,000 ரூபாயை தூக்கிக்கொண்டு வருகிறது. இது தொழிலாளிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. அவர்களுக்கு விபத்துக்காப்பீடு, உயிர் காப்பீடு வேண்டும். வேலைத்திட்டத்தின் கீழ் வேலையில் பங்கு பெற அனுமதி அட்டை கொண்டுள்ள பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் சிறப்பு நிதி வழங்கிட வேண்டும். இந்த அனுமதி அட்டை வைத்திருப்பவர்க்கு, வேலை இடத்தில் மட்டுமல்ல வேறு எங்கேனும் பயணத்தின் போதோ, அல்லது வேறு வகையிலோ விபத்து நேரிட்டாலும் மருத்துவ இழப்பீடு வழங்கிட வேண்டும். வேலை நேரத்தில் உயிர் பலி நிகழ்ந்தால் ரூ.10,00,000 நிதியும்,இரண்டு ஏக்கர் நிலமும், கட்டாயமாக அவர் குடும்பத்திற்கு ஒருவருக்கு நேரடியான அரசு பணியும் கொடுத்திட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்கள் வயது முதிர்ச்சி அடையும் போது ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். கடுமையான மழை மற்றும் கடுமையான வெயில் காலங்களில் வேலை செய்ய முடியாமல் போனாலும் அனைத்து பணியாளர்களுக்கும் குறிப்பிட்டத்தொகையை ஊதியமாக வழங்கிட வேண்டும். மக்களிடம் நேரடி கருத்தாய்வு செய்து இவர்களுக்கானத்திட்டத்தினை, அரசு விரிவாகவும், விரைவாகவும் நீதியுடன் வரையறுக்க வேண்டும்.
அதற்கு முன்பாக ஊராட்சி மன்றங்களை கடுமையாக கண்காணிக்கவும், கண்டிக்கவும் வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
-தி.ஸ்டாலின்.