வியாழன், 6 டிசம்பர், 2012

                         ராமதாஸின் சாதி அரசியல் 

                                                                                                                                                                  - க.திருவள்ளுவன்
      
                            டிசம்பர்  2 ஆம் தேதி சென்னையில் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் சில சாதி அமைப்புகள் கூடின. அதில் முக்கியமான விஷயமாக இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டம் திருத்தப்பட வேண்டும்.  தனித் தொகுதி  என்பது நிலையான தொகுதி என்பதை மாற்றி சுழற்சி முறையை கொண்டு வரவேண்டும்.
           ராமதாஸ்  அடிக்கடி தம்கொள்கை  (!)  யை மாற்றிக் கொள்ளக் கூடியவர். தானோ தன் குடும்பத்தினரோ பதவி பெற்றால் முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என்றார் பிறகு தன் மகனை மத்திய அமைச்சராக்கினார். பச்சைத் துரோகி கருணாநிதி என்பார் பிறகு கருணாநிதியிடம் சீட்டு கேட்பார். ஜெயலலிதாவுடன் கூட்டணி என்பது பெற்றத்தாயுடன் படுப்பது என்பார் பிறகு சகோதரி எனக் கூறிக்கொண்டு  போயஸ் தோட்டத்திற்கு படையெடுப்பார். தமிழினம் என்பார் பிறகு வன்னிய இனம் என்பார். பாட்டாளிகளின் தலைவன் எனத் தம்மைத் தாமே கூறிக்கொண்டு படையாட்சிகளின் தலைவனாகவே காலம் தள்ளுவது. இப்படி  முரண்பாடுகளின் மொத்த உருவமாக வாழும் இராமதாஸ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தன் மலிவான சாதிய அரசியலுக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்ற கனவில் தற்போது இருக்கிறார்.
         வன்கொடுமை தடுப்புச்சட்டம், ராமதாஸ் கூறுவது போல் யாரையும் பழிவாங்குவதற்கோ, நாசப்படுத்தவோ கொண்டு வரப்பட்ட சட்டமல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சாதியின் பெயரால்­­­­­­­- மனுவாத சட்டத்தால் - கோடிக்கணக்கான மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், இழிவுப்படுத்தப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள். பட்டால் பாவம், தொட்டால் தீட்டு என  தீண்டாமையை மிக கடுமையாக பலநூறு ஆண்டுகள் கடைபிடித்து வரும் நாடு இந்தியா உயர் சாதி இந்துக்களிடமிருந்து -  தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட  இந்திய அரசியல் சாசனம் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும் இனி தீண்டாமை கடைபிடிப்பது சட்டப்படியான குற்றமென்றும் கூறுகிறது. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்து 62. ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அரசியல்சாசனம் சொல்வது போல் தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதா? இல்லையே ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான தலித்பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்முறைக்குட் படுத்தப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள். அற்பமான காரணங்களுக்காகவெல்லாம் தலித்துகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். பொது நீர் நிலைகளில் நீரெடுத்தால் படுகொலை, பொது நிலங்களை குத்தகை எடுத்தால் படுகொலை, சைக்கிள் ஓட்டினால் படுகொலை, செருப்பு அணிந்தால் படுகொலை, தேநீர்கடை பெஞ்சில் அமர்ந்தால் படுகொலை, நிலம் வைத்திருந்தால் படுகொலை, காதலித்தால் படுகொலை, மாட்டுக்கறி சாப்பிட்டால் படுகொலை. இப்படி எத்தனை எத்தனை படுகொலைகள் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை இரண்டு இலட்சம் தலித்துகள் சாதிய கொடுமையால் பலியாகியிருக்கிறார்கள். அய்ம்பதாயித்திற்கும் அதிகமான தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கோடிக்கும் அதிகமான தலித்துகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் கூலிங்கிளாஸ் அணிந்ததற்கு கூட தலித் இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இதை அரசே சொல்கிறது. தமிழ்நாட்டில் தலித்துகள்மீதான ஒடுக்கு முறை பட்டியல் நீளமானது. முதுகளத்தூர் படுகொலை, வெண்மணி படுகொலை, விழுப்புரம் படுகொலை, குறிஞ்சான் குளம் படுகொலை, பரமக்குடி படுகொலை, மேலவளவு படுகொலை, புளியங்குடி படுகொலை , தாமிரபரணி படுகொலை  என நீளும் பட்டியல் இங்குண்டு. டாக்டர்.ராமதாஸ் ஆரம்பித்த சங்கமும் கட்சியும் வட தமிழ்நாட்டில் பதினைந்தாயிரம் குடிசைகளை சாம்பலாக்கியிருக்கிறது. தலித்துக்களை படுகொலை செய்து இருக்கிறார்கள். ராமதாஸின் தாஸர்கள். இப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத ஒரு வெட்கம் கெட்ட நாட்டில் தலித்துகள் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டது தான் வன்கொடுமை தடுப்புச்சட்டம்.அரசு தலித்துகள் மீதுள்ள அக்கறையில் இச்சட்டத்தை கொண்டுவரவில்லை. அப்படியெல்லாம் தலித்துகள் மீது அக்கறைபடும் அரசும் இங்கு வந்ததில்லை. தலித்து மக்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக தலித்துகளே போராடிப்போராடி பெற்றசட்டம் இது. இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பும் அளவிற்கு தலித்துகள் ஒன்றும் முட்டாள்களல்ல. ஆனால் சிறி தேனும் வன்கொடுமையும் சாதிய அடக்க முறையும் குறையும் என்ற எண்ணத்தில் தான் இச்சட்டத்தை கொண்டு வரசெய்தோம். ஆனால் வன்கொடுமைதடுப்புச்சட்டம் கொண்டு வந்த பின்னும் கூட சாதிய ஒடுக்குமுறை குறையவில்லை. ஏனெனில் இந்த சட்டத்தை அரசுகள் முழுமையாக நடைமுறைபடுத்துவதில்லை. வன்கொடுமைதடுப்புச்சட்டம் சட்டத்தின் கீழ் வழக்கைபதிவு செய்யவே காவல்துறையும் அதன் எஜமானர்களான அரசும் தயக்கம் காட்டுகின்றன. ஏனெனில் காவல்துறையும் அரசுகளும்  ஆதிக்க  சாதிகளின் நலன்களுக்காகவே இயங்குகின்றன. ஆதிக்க சாதிகளால் தான் அரசுகள் இயக்கப்படுகின்றன. எனவே தான் வன்கொடுமைதடுப்புச்சட்டம் இன்னும் வலிமை படுத்தப்பட்டு மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தலித்துகள்போராடி வருகின்றன. இந்நிலையில் தான் அந்த சட்டத்தை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டுமென்று இராமதாஸ் போன்றவர்கள் போராடுகின்றனர். வன்கொடுமையின் கீழ் வன்னியர்கள்   பாதிப்படைகின்றனர்  என்றால் அவர்கள் வன்கொடுமையில் இறங்குகிறார்கள். சேரிகளை கொளுத்துவதும், தலித்துகளை தாக்குவதும், கொலை செய்வதும், கற்பழிப்பதும் வன்கொடுமையல்லாமல் வேறன்ன திருத்தப்பட வேண்டியது, வன்னியர்களின் மனநிலை  தானே  தவிர வன்கொடுமை சட்டத்தையல்ல.


           வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் விவாதித்து வேண்டுமானல் திருத்தலம் என்று சிலர் கூறுகிறார்கள். பாராளுமன்றத்திலும் இராமதாஸ் போன்றர்கள் தான் ருக்கிறார்கள்.  எனவே பாராளுமன்றத்திற்கும் அந்த உரிமையை கொடுத்து விட முடியாது. அச்சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்டம் அதை ஒடுக்குபவர்கள் திருத்துவதற்கு எப்படி அனுமதிக்க முடியும். பெண்களுக்கான சட்டத்தை ஆண்கள் அவர்களின் பயனுக்கேற்றது போல் மாற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தொழிலாளிகளுக்கான பாதுகாப்புசட்டத்தை முதலாளிகள் திருத்துவற்கு எப்படி ஒத்துழைக்க முடியும். அப்படி தான் வன்கொடுமை தடுப்புச் சட்டமும். அந்த சட்டம் தாழ்த்தப்பட்டவர்களின் கையில் உள்ள விளக்கு. இருட்டில் பயணிக்கும் போது விளக்குத் தேவைப்படுகிறது. வெளிச்சம் அவசியமாகிறது. ஆனால் ராமதாஸ் அந்த விளக்கை இருட்டில் பயன்படுத்தக்கூடாது என்கிறார். ஏனெனில் இருட்டில் இராமதாஸ் ஒளிந்து கொண்டிருக்கிறார். விளக்கின் வெளிச்சம் தம் மீது பட்டு தாம் மாட்டிக்கொள்வோம் என்கிற பயம் திருடர்களுக்கு இருக்கும். இராமதாசுக்கும் அந்தபயம் இருக்கிறது. இருட்டு இருக்கும் வரை விளக்கின் வெளிச்சம் தேவைப்படுகிறது.இராமதாஸ்கள் இருக்கும் வரை  வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவைப்படுகிறது. 

                மேலும்  வன்கொடுமை  தடுப்புச்சட்டத்தை  தீவிரப்படுத்த  வேண்டும்.  தலித் அல்லாதாரால் தலித் கொல்லப்பட்டால் நிச்சயமாக மரண  தண்டனை  வழங்க வேண்டும்.  கொலை செய்த தலித் அல்லாதாரின் சொத்துக்களை  பறிமுதல் செய்து கொல்லப்பட்ட தலித் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும். வன்கொடுமை குற்றம் நிரூப்பிக்கப்பட்டால் குற்றவாளியின் வாக்குரிமை, ரேஷன் சலுகை, இட ஒதுக்கீடு நீக்க பட வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு வழக்கு முடியும் வரை பினண (ஜாமீன்) கொடுக்கக் கூடாது. அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கொடுக்கக்கூடாது. சாதிவெறியால் கொல்லப்படும் தலித் குடும்பங்களுக்கு  கட்டாயம்  நிலம்  வழங்க வேண்டும்.  இப்படி  இன்னும் பல திருத்தம் கொண்டு வர வேண்டும் தனித் தொகுதிகளை  சுழற்சி முறையில்  அமைக்க வேண்டுமென்கிறார்  இராமதாஸ். தனித்தொகுதிகள் மூலம் இராமதாஸ் போன்ற அரசியல் முதலாளிகள் தான் பெரும் லாபம் அடைகிறார்களே ஒழிய தலித்துகளுக்கு பெரிதான பயன் ஏதும் கிடையாது. தனித்தொகுதிகள் மூலம் தலித்துகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதை எப்போதோ சொன்னார் எங்கள்  அம்பேத்கர். அதனால் தான் அவர் தனி வாக்களார் தொகுதியை முன் வைத்தார். தனித்தொகுதி பிடிக்கவில்லை என்றால் ராமதாஸ் தங்கள்  கட்சியின் மூலம் வேட்பாளர்களை தனித் தொகுதியில் நிறுத்தியது ஏன்?பா.ம.க வின் மத்திய அமைச்சர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் தலித் எழில்மலை சிதம்பரம் தனித் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டவர் தானே . அப்பொழுது சொல்ல வேண்டியது  தானே சுழற்சி முறையை.
                
              இராமதாஸ் கருத்தின் படியே நாமும் வருவோம். தனித்தொகுதிகள் சுழற்சி முறையிலேயே இருக்கட்டும். ஆனால்  அணைத்திலும் சுழற்சி முறை வேண்டும். ஜனாதிபதி பதவியில், முதலமைச்சர் பதவியில், பிரதமர் பதவியில், துணை ஜனாதிபதி பதவியில், உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பதவியில், முப்படைகளின் தளபதிகள் பதவிகளில், கவர்னர் பதவிகளில், சபாநாயகர் பதவிகளில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், தலைமைச் செயலர்கள், துறை இயக்குனர்கள், மாவட்ட கோட்ட, வட்டார, வருவாய் துறை அதிகாரிகள்,கிராம நிர்வாக அலுவலர்கள், உட்பட இந்தியாவின் அனைத்து பணியிலும் சுழற்சி முறைவேண்டும். அது மட்டுமல்ல துப்புரவு பணியில் மலம் அள்ளும் பணியில் பல நூறு ஆண்டுகளாகவே தலித்துகள் தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ராமதாஸின் சுழற்சி முறை கொள்கையின்  படி அணைத்து சாதிகளும் இனி மலம் அள்ள வேண்டும். இதற்கு தயாரா?
        
                   நாமும் கூட சுழற்சி முறையை விரும்புகிறோம். ஆனால் அது ராமதாஸின் திட்டத்தின் அடிப்படையில் அல்ல. நாம் சொல்லும்   சுழற்சிமுறை  வேறு, 1000ஆண்டுகளுகளா இந்திய மண்ணை இந்துக்கள் ஆண்டுவருகிறார்கள். இசுலாமியர்கள்  800
ஆண்டுகள் ஆண்டனர். ஆங்கிலேயர், பிரெஞ்சுக்கார்கள், டச்சு, போர்த்துகீசியர்கள்  200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர். ஆயிரம் ஆண்டுகளாக இந்த சுழற்சிமுறை உள்ளது. இப்பொது சுழற்சிமுறையில்  தலித்துகள் தான் இனி ஆயிரம் ஆண்டுகள் ஆள வேண்டும். ஒத்துக்கொள்வாரா இராமதாஸ் . இந்த நியாயமான நம்கோரிக்கைக்கு நம்மோடு இணைந்து போராட தயாரா  இந்த சமூகநீதி  போராளி.