திங்கள், 24 டிசம்பர், 2012

                      வன்னிய பெண்ணோடு காதல்                               பறையர் படுகொலை  


              கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள சென்னிநத்தம் சேரியைச்சார்ந்த மாயக்கிருஷ்ணனின் மகன் கோபாலக்கிருஷ்ணன் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். கோபாலக்கிருஷ்ணன் திருமுட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் B.com படித்துக்கொண்டிருந்த மாணவர். அதே  கல்லூரியில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரதூரை சார்ந்த வன்னியர் ரவியின் மகள் துர்காதேவி (பெயர் மாற்றப்படவில்லை) B.com படித்து வந்துள்ளார். இருவருக்குமிடையே  நிகழ்ந்த கல்லூரி சந்திப்புகளில் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதல் விவகாரம் துர்காவின் வீட்டினருக்கு - சாதியினருக்கு - தெரியவந்தது. இந்தநிலையில் கலப்பு திருமணங்களுக்கும் சாதி மறுப்பு காதல்களுக்கும் கடுமையான எதிர்ப்புக்களை ராமதாசு,  காடுவெட்டி குருவும் தெரிவித்துக்கொண்டும் நடைமுறைப்படுத்திக்கொண்டும் இருக்கின்றனர். இதனால் வன்னியர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையே மோதல் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வன்னியப்பெண் தலித் இளைஞரை திருமணம் செய்துக்கொண்டதையோட்டி நடந்த பிரச்சனையில் இந்த காதலுக்கு  உடந்தையாக இருந்ததாக, குற்றம் சாட்டப்பட்டு கடலூர் தனியார் கல்லூரியில் படித்து வந்த பிரியா எனும் தலித் இளம் பெண் படுகொலை செய்யப்பட்டார். இப்பொழுது கோபாலக்கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 11ஆம்தேதி சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள  அள்ளூர்  என்கிற ஊரில் வன்னியர் சங்க ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. மறுநாள் 12 ஆம் தேதி துர்காவை அழைத்த தந்தை ரவியும் பிற வன்னியர்களும், கோபாலக்கிருஷ்ணனையே  திருமணம் செய்து வைப்பதாகவும் அதைப்பற்றி பேசபோவதகவும், அதற்காக கோபாலக்கிருஷ்ணனை அழைத்து வரும்படியும் கூறியிருக்கின்றனர். துர்கா தன் காதல் வெற்றி பெறப்போகிறது என்கிற ஆசையில் காதலன் கோபாலக்கிருஷ்ணனை  தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தயாராக இருந்த துர்காவின் தந்தை உள்ளிட்ட வன்னிய சாதி வெறியர்கள் கோபாலக்கிருஷ்ணனை கடுமையாக தாக்கியும்  நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்தியும் உள்ளனர். பின்னர் கோபாலக்கிருஷ்ணனை கடத்தி சென்று உள்ளனர். கோபாலக்கிருஷ்ணனின் உறவினர்களும், பெற்றோர்களும் 13 ஆம் தேதி முழுவதும் தேடியுள்ளனர். தகவல் இரகசிய போலீஸ் மூலம் காவல்துறைக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 14 ஆம் தேதி கோபாலக்கிருஷ்ணன் தந்தை மாயக்கிருஷ்ணன் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். வழக்கம் போல் காவல்துறை அலட்சியமாக இருந்தது. 19 ஆம் தேதி காலை பரதூர்  எல்லைக்குட்பட்ட பகுதியில்  உள்ள ஓடைக்கரையில் நாணல் புதரில் தலை துண்டிக்கப்பட்டஓர் உடலை வயல்வெளிக்கு வந்திருந்தவர்கள் கண்டுள்ளனர். இறுதியாக, அந்த உடல் கோபாலக்கிருஷ்ணனின் உடல் தான் என்று மாயக்கிருஷ்ணனாலும், உறவினர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டது.


                   சாதி வெறி அரசியலாலும்,காவல்துறை சோம்பேறித்தனத்தாலும் கோபாலக்கிருஷ்ணனின் உயிர் பறிபோயிருப்பதை  கண்ட தலித்துக்கள் சேத்தியத்தொப்பு - சிதம்பரம் சாலையில் மறியல் செய்தனர். ஒரு வாரமாக கொட்டாவி விட்டுகொண்டிருந்த காவல்துறை தலித்துக்கள் மறியல் செய்த உடன் 'அலார்ட்' ஆகியது. பிறகு உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து  செல்லப்பட்டது. மறுநாள் 20 ஆம் தேதி  கோபாலக்கிருஷ்ணனின் உடல் பிணக்கூராய்வு செய்யப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மருத்துவமனைக்கு எதிரில் விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி (மா), மக்கள்குடியரசுக்கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, இந்தியமனிதஉரிமை கட்சி, மனிதஉரிமைகள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனக்கூட்டத்தை நடத்தின. இன்னொருபுறம் அரசு தலித் அமைப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தது.
புகாரில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்துவிடுகிறோம், வன் கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணங்களையும் இரண்டு ஏக்கர் நிலமும் வழக்கிவிடுகிறோம் என்று வாக்குறுதியையும் கோபாலக்கிருஷ்ணனின் உடலையும் கொடுத்தது அரசு. மறுநாள் துர்காவின் 80 வயதான பாட்டி கனகவள்ளியை முக்கிய குற்றவாளி என கைது செய்தது காவல்துறை. உண்மை குற்றவாளிகளை மறைப்பதர்க்கே இந்த கைது நாடகம் என குற்றம்  சாட்டிய தலித்துக்கள் மறுநாளும் கோபாலக்கிருஷ்ணன் உடலை வீட்டில் வைத்த படியே அறப்போராட்டம் செய்தனர். பிறகு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அதில் தலித்துக்கள் சார்பாக க.திருவள்ளுவன்(மக்கள்குடியரசுக்கட்சி),  சிந்தனைசெல்வன்(விடுதலைசிறுத்தைகள்), அரங்க.குணசேகரன் (தமிழகமனித உரிமைக்கட்சி), ராஜு வழக்கறிஞர், ரஜினிகாந்த் வழக்கறிஞர்(BSP),
கிளாங்காடு வெங்கடேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மீண்டும் அதே  வாக்குறுதிகளை மட்டுமே அதிகாரிகளால் கொடுக்க முடிந்ததது. மூன்று நாட்களாக வைக்கப்பட்டிருந்த கோபாலக்கிருஷ்ணனின் உடல் சிதைவதை கண்ட மக்கள் உடலை அடக்கம் செய்துவிட்டு போராட்டத்தை  தொடரலாம் என்று முடிவெடுத்தனர்.

        அதை தொடர்ந்து, கோபாலக்கிருஷ்ணன் இல்லத்தில்லிருந்து சுமார் 8.00 மணி அளவில்  இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வீரவணக்க முழக்கங்களோடு  நடைபெற்ற ஊர்வலத்தில் கே. ஆம்ஸ்ட்ராங்(மாநில தலைவர் BSP), க.திருவள்ளுவன், அரங்க.குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். இறுதியாக சென்னிநத்தம் சுடுகாட்டில் 8.45 க்கு சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கோபாலக்கிருஷ்ணன் தோழர்களின் வீரவணக்க மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டார். 
                                                                                                                                 
                                                                                                                                    - தி.ஸ்டாலின்