செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

தமிழக அரசே!

தமிழ அரசே!
1.நிரந்தரமாக மதுக்கடைகளை மூடவேண்டும்.
2.மதுவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வுத்தீர்வு காணவேண்டும்.
3.குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை செய்துகொடுக்க வேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழி செய்யவேண்டும்.
4.மதுவுக்கு பொறுப்பேற்றுள்ள அரசியல்வாதிகள்,அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். அவர்கள் மீது குற்றவியல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
5. மது ஆலை முதலாளிகள் மீதும் குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்கவேண்டும். மக்களிடம் சுரண்டி,கொள்ளையடித்து குவித்துவைத்துள்ள அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்.
6.மதுக்கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று அரசு வேலை வழங்கிடவேண்டும். அவர்கள் செலுத்தியுள்ள முன் வைப்புத்தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும்.
7.மதுவுக்கெதிரான போராட்டத்தில் உயிர்க் கொடுத்த பெரி.கண்ணையன், சசிபெருமாள் ஆகியோரை 'போதை ஒழிப்புத் தியாகிகள்' என்று அறிவித்து 'தியாகிப் பென்ஷனும்,  தலா 1 கோடி ரூபாய் நட்ட ஈடாகவும்,  அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கிடவேண்டும்.
8.மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராடிய போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறவேண்டும்.
9.மதுவுக்கெதிரானப் போரட்டத்தில் மாணவர்கள்,பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, பணிநீக்கம் செய்யவேண்டும்
11.மதுவுக்கெதிராகப் போராடிய தலித்துகளைத் தாக்கிய காவல்துறை மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,பணிநீக்கம் செய்யவேண்டும்.
12.மதுவுக்கெதிரான போராட்டத்தில் காவல்துறையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்றின் படி 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 இலட்சம் ரூபாய் வரை நட்ட ஈடு அளிக்கவேண்டும்.
13. மதுவுக்கெதிரான போராட்டத்தில் காவல்துறையால் தாக்கப்பட்ட தலித்துகளுக்கு கூடுதலாக 'சிறப்பு நட்ட ஈடு' வழங்கவேண்டும்.
14. போராட்டத்தில் காயம்படாவிட்டாலும் கைதுசெய்யப்பட்டிந்தாலே போராட்டக்காரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நட்ட ஈடு வழங்கவேண்டும். கைது செய்யப்பட்ட தலித்துகளுக்கு கூடுதலாக 'சிறப்பு நட்ட ஈடு' வழங்க வேண்டும்.


க.திருவள்ளுவன்.

தலித்துக்களை புறக்கணிக்கும் தமிழ் தேசியம்: 2015இற்கான பாராளுமன்றத் தேர்தலை முன்வைத்து.

தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, பின்பு பலதும் கலந்த தமிழர் விடுதலைக் கூட்டணியாக உரு மாறி, இறுதியாக விடுதலைப் புலிகளின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் ஏற்றவகையில் பெயர் போர்த்திக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் அதன் தலைமைகளும் தொடர்ந்தும் தலித் மக்களை வாக்களிக்கும் ஒரு சமூகப்பிராணிகளாகவே கருதி வருகின்றனர். அம்மக்களின் வாக்குகளை கொத்தாக பெறும் நோக்கத்திலும், வாக்குகளை சிதறவைக்கும் தந்திரத்திலும் தலித் சமூகத்தை சேர்ந்த சிலரை தமிழ் தேசியத் தலைமைகள் வேட்ப்பாளர்களாக நியமித்த, நியமிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றது. இவை அனைத்துமே தமிழ் தேசியத் தலைமைகளின் நலன்களுக்கு உகந்ததாகவே திட்டமிடப்பட்டும் வருகிறது.

தமிழ் தேசியம் பேசும் தலைமைகளோ சாதிரீதியான சமூக ஒடுக்குமுறைக்கு எதராக குரல் எழுப்பிய வரலாறு நிகழ்ந்ததில்லை. தமிழ் மக்களுக்காக அவர்கள் செய்த சமூக அரசில் தியாகம் என்பது எதிர்ப்பு அரசியல் சாதனை மட்டுமே!

சாதிய ஒடுக்குமுறைக்குள்ளான தலித் மக்கள் இடது சாரிகளுடன் இணைந்து போராட்டங்கள் மேற்கொண்ட காலம் ஒன்றிருந்தது. அவ் எழுச்சிப் போராட்டத்தின் அலையில் தமது அரசியல் கனவு மூழ்கிப்போவதை உணர்ந்த மேட்டுக்குடி தலைமை 1977இல் நடைபெற்ற தமிழ் ஈழத்திற்கான தேர்தலில் இராஜலிங்கம் எனும் ஒரு தலித்தை தமது வேட்ப்பாளராக பயன்படுத்தினார்கள். அது ஓரளவு தமிழ் தேசிய வாதிகளுக்கு சாதகமாக இருந்ததென்றே கூறலாம். ஆனால் இராஜலிங்கத்தை தேர்வு செய்த தலித் சமூகம் எவ்வித பயனையும் கண்டதில்லை. மாறாக இராஜலிங்கம் அவர்கள் ஒடுக்குமுறைச் சாதியினரால் அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்களே அதிகம் நிகழ்ந்தது. 2004இல் நடைபெற்ற தேர்தலில் புலிகளால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சிவநேசன் எனும் தலித் வேட்ப்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரும் தமிழ் தேசியத்தின் குரலாகவே கூனிக் குறிகிப்போனார். தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாடு குறித்து அவரால் சிந்திக்கவே முடியாது போனது.

மேட்டுக்குடி அரசியல் தலைமைகள் தமது வர்க்க நலனுக்கும், அதிகார நலனுக்கும் பயன்படுத்தும் ஒரு பண்டமாகவே தலித்துக்களை இன்றுவரை பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பென்பது மிதவாதக் கட்சியுடன் இணைந்த சில ஆயுதப்பபோராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களின் ஒரு கூட்டாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் எமது பார்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பென்பது ஒரு மேட்டுக்குடி அடையாளமாகவே தெரிகிறது. அக்கட்சியின் வேட்ப்பாளர் தெரிவுகளில் அவர்களே முதன்மையானவர்களாக உள்ளனர். கிராமங்களிலுள்ள வாக்குவங்கியை கவனத்தில் கொண்டு ஒரு சில தலித்துக்களை வேட்ப்பாளர்களாக நியமிக்கின்றபோதும் அவர்கள் வெற்றியடைமுடியாத வகையிலேயே பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். இவைகுறித்து கேள்வி எழுப்புகின்றபோது தாம் தகுதி அடிப்படையில்தான் வேட்ப்பாளர்களை தெரிவு செய்கிறோம். சாதிப் பாகுபாடு நாம் பார்ப்பதில்லை என்றும் காரணம் கற்பிக்கின்றனர். அதுசரி என்ன இவர்களது தகுதி? 1948இல் இருந்து ஐம்பதுக்கு ஐம்பது, சமஸ்டி, சுயாட்சி, தமிழ் ஈழம், மாகாணசபை என கோசம் போட்டு  அரசியல் செய்த இவர்களால் தமிழ் பேசும் மக்கள் அடைந்த நன்மை என்ன? எவற்றை இவர்களது தகுதியாக நாம் அடையாளம் காண்பது? மேட்டுக்குடி தகுதி என்பதுதானே இவர்களது ஒரே ஒரு தகுதி! சற்று நிதானித்து ஆழ்ந்து சிந்திப்போமாயின் இவ்வாறான மேட்டுக்குடித் தலைமைகளிடம் எந்தக் கோட்பாடோ தத்துவமோ கிடையாது, தேசப்பற்றும் கிடையாது, இனப்பற்றும் கிடையாது, எந்தவித தார்மீகமும் கிடையாது, தேர்தல்காலம் நெருங்கும் தருணத்தில் பொய்களையும், புழுகு மூட்டைகளையும் அவிழ்த்துக் கொட்டி வாக்கு சேகரிக்கும் நரித்தனுமும் இவர்களிடம் இருக்கும் மேலதிக தகுதியாக இருப்பதையும் நாம் கண்டு கொள்ளலாம்.

தமது குடும்பங்களையும், பிள்ளைகளையும் பாதுகாப்பாக வெளிநாடுகளில் வாழவைத்து ஏழை, எளிய மக்களை போர்க்களத்திற்கு அனுப்பியதிலும் அவர்களை தமக்கு வாக்களிக்க வைத்ததிலும் இவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே! அந்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான எந்தவித முயற்சிகளையும் இவர்கள் மேற்கொண்டதில்லை.
தமிழ் தேசியத்தின் உணர்ச்சியின்பால் உந்தப்பட்ட பல படித்த தலித்துக்கள் மேட்டுக்குடித் தலைமைகளின் நயவஞ்சக புத்தியை தெரிந்திருப்பினும் தமது எதிர்ப்பினை இதுவரை காட்டியதில்லை. தமது எதிர்ப்பை தெரிவிப்பதனூடாக துரோகிகள் எனும் அடையாளம் தம்மீது ஒட்டிக்கொள்ளும் எனவும் அவர்கள் தயங்கக்கூடும்.

17-08-2015இல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வட-கிழக்கில் போட்டியிடும் தமிழ் கட்சிகள், வேட்ப்பாளர்கள் குறித்த பல்வேறு விவாதங்களும் விமர்சனங்களும் மிக சுவாரசியமாகவே நடந்து வருகின்றது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான காட்டமான விமரசனங்கள் என்றுமில்லாதவாறு சிலபொதுப் புத்திகளிடமிருந்துமேல்கிளம்புகிறதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் தேசியத்தின் (முற்போக்கு தமிழ் தேசியம்) பால் நெருக்கமான பற்றுடைய அரசியல் விமர்சகர்கள் கூட தலித் சமூகம் குறித்தும் அவர்களது பாராளுமன்றப் பிரநிதித்துவத்தின் நியாயங்கள் பற்றி பேசியும் எழுதியும் வருகிறார்கள். இவ்வாறான சூழலையும் சாதகமாக கொண்டு நாம் இத்தேர்தல் குறித்த எமது பார்வையை முன்வைக்கிறன்றோம்.

நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தலித்துக்களுக்கான வேட்ப்பாளர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இல்லாத காரணத்தால் (வடமராட்சியில் ஒரு தலித் வேட்ப்பாளர்) சிறுபான்மைத் தமிழர் மகாசபை எனும் சமூக விடுதலை இயக்கம் சுயேட்சையாக போட்டியிடுகிறது. அதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் பல தலித் வேட்ப்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வடபகுதியில் வெற்றிலைச் சின்னத்திலும் தலித் வேட்ப்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். எனவே நிலமையை கவனத்தில் கொண்டு நாம் எந்தக்கட்சியையும் இத்தேர்தலில் பிரத்தியேகமாக ஆதரிக்கமுடியாது. பல்வேறு கட்சிகளில் இணைந்தும், சுயேட்சையாகவும் போட்டியிடும் தலித் வேட்ப்பாளர்களிடமும், அதன் தலைமைகளிடமும், கட்சிகளிடமும் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு சில ஆலோசனைகளை முன்வைக்கின்றது.

 1, சாதிரீயாக ஒடுக்கப்பட்டு வரும் எமது சமூகத்தில் மேலெழும் மேட்டுக்குடி அரசில் போக்கையும் அதனை கடைப்பிடிக்கும் கட்சிகளையும் தலித் மக்களும், தலித் வேட்பாளர்களும், நிராகரிக்கவேண்டும்

2, சாதிய ஒடுக்குமுறையை இனம் கண்டு அதற்கெதிராக குரல்கொடுக்கும் இடதுசாரிகள் மற்றும் சமூக முற்போக்கு சக்திகளுடன் உறவை பேணவேண்டும்.

3, எதிர்காலத்தில் தலித்துக்களின் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பொருளாதார தொழில் மேம்பாட்டிற்கும் ஏற்றவகையில் செயல்படும் வகையில் தலித்துக்களுக்கான தனித்துவமான அரசியல் செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.
மேற்கொண்ட அவசியத்தை கவனத்தில் கொள்ளாது மீண்டும், மீண்டும் மேட்டுக்குடி நலன்களுக்கான தமிழ் தேசிய நீரோட்டத்தில் அள்ளுண்டு போவதையும், மௌனமாக இருப்பதையும் நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கமுடியாது. மேட்டுக்குடி அரசியலானது எம்மை மிதித்தேறி உயரத்தில் அமரும் ஏணியாக பயன்படுத்தியே வருகின்றது. நலிந்து கொண்டிருக்கும் எமது சமூகத்திற்காக இவர்களோடு இணைந்து பயணிப்பது சாத்தியமாகுமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி -பிரான்ஸ் 03-08-2015


நன்றி. www.thuuu.net