புதன், 15 ஜூலை, 2015

திராவிட இயக்க வரையறை.

நாம் திராடவிட கட்சிகளை, அவைகளின் அரசியலை,ஆட்சிகளை அவற்றின் குறைபாடுகளை விமர்சிக்கும்போது சில நண்பர்கள் 'திராவிட இயக்கம் என்பதுவும் திராவிடக்கட்சிகள் என்பதுவும் வேறுவேறானவை' என்று விளக்கமளிக்கிறார்கள். திராவிடக்கட்சிகள் கொண்டுவரும் திட்டங்களை 'திராவிட இயக்க சாதனையாக' சொல்லிப் பெருமைகொள்ளும் இந்நண்பர்கள் விமர்சனமென்று வரும்போது திராவிடக்கட்சிகளை இப்படிக்கைவிட்டுவிடுகிறார்கள். பொதுவாக தேர்தலில் பங்கெடுக்காத அமைப்பை இயக்கம் என்றும் தேர்தலில் பங்கெடுக்கும் அமைப்புகளை கட்சியென்றும் இவர்கள் கூறுகிறார்கள். இது பரவலாகவே இருக்கும் வரையறைதான். மேலும், இது ஒருவகையில் அவரவர்களுக்கு சாதகமான வரையறையாகவும் ஆக்கப்படுகிறது. ஆனால் திமுகவோ அதிமுகவோ திராவிட இயக்கத்தின் வகைக்குள் வருமா இல்லையா என்பதுவும் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. கருணாநிதியும் சரி ராமச்சந்திரனும் சரி திராவிடத்தலைவர்கள்தான் என்பதை மறுக்கமுடியாது. அவர்களை அப்படித்தான் திராவிட இயக்க வரலாறு பதிவு செய்திருக்கிறது. மூகாம்பிகை கோயிலுக்கு காணிக்கை செலுத்தியதை வைத்து மட்டும் ராமச்சந்திரனை திராவிடத்தலைவர் அல்லர் என்று கூறிவிடுவது சரியாகாது. இந்துமத வழிபாட்டிலும் நம்பிக்கைகளிலும் அதீத ஈடுபாடுகொண்ட குடும்பத்தின் தலைவர் என்பதால் கருணாநிதியையும் அவ்வாறு திராவிடத்தலைவர் பட்டியலிலிருந்து நீக்கிவிடமுடியாது.

திராவிட இயக்கம் என்பதை திராவிட இயக்கத்தவரே வரையறுத்தும் உள்ளார்கள். சென்னை நகரத்தில் பணியாற்றிய பிராமணல்லாத ஜாதி இந்துக்கள் , டாக்டர் நடேச முதலியார் அவர்களின் வழிக்காட்டுதலில் 1912 ஆம் ஆண்டு தங்களுக்கென(பிராமணரல்லாதவருக்கென) துவக்கப்பட்ட அமைப்பு 'மெட்ராஸ் யுனைடைட் லீக்' ஆகும். இதன் முதலாமாண்டு நிறைவு விழாவில் அமைப்புக்கு புதியபெயர் சூட்டுவதை வலியுறுத்தி தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அவ்வமைப்புக்கு 'திராவிடர் சங்கம்' என்று பெயர்மாற்றப்பட்டது. திராவிடர் சங்கம் உருவாக்கிய தாக்கமே திராவிட இயக்க வரலாறாகத்துவங்குகிறது எனலாம். இதையே எஸ்.ஜி.மனவாள ராமானுஜர் தனது 'தி ஆர்ஜின் ஆஃப் தி ஜஸ்டிஸ் பார்ட்டி' என்னும் நூலில் "திராவிட சங்கம் இயக்கிவிட்ட உணர்வுகள் திராவிட இயக்கம் என்று பெயர் பெறலாயின" என்று குறிப்பிடுவதாக முரசொலி மாறன் தனது 'திராவிட இயக்க வரலாறு' என்னும் நூலில் கூறி இவ்வரையறை அங்கீகரிக்கிறார். ஆக, திராவிட இயக்கமென்பது திராவிட உணர்வே ஆகும். இதன்படி பார்த்தோமானால் திராவிட அமைப்புகளில் எந்தவொன்றிலும் இல்லாத திராவிட உணர்வாளரும் கூட திராவிட இயக்கவாதிதான் அவ்வகையில் ஈ.வெ.ரா.,அண்ணாதுரை, கருணாநிதி, வீரமணி, ராமச்சந்திரன், வைகோ, கொளத்தூர் மணி, ராமக்கிருட்டினன், விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் திராவிட இயக்கவாதிகள்தான். ஜெயலலிதா பார்ப்பனராக இருந்தாலும் அவரும் திராவிட இயகத்தின் தலைவர்தான். கருணாநிதி,ராமச்சந்திரன், ஜெயலலிதா(ஓ.பண்ணீர் செல்வத்தின் ஆட்சி ஜெ.ஆட்சிதான்) ஆகியோரின் ஆட்சிகள் திராவிட இயக்க ஆட்சிகள்தான்.


(திராவிட உணர்வு திராவிட உணர்வாகமட்டுமே இருக்கிறதா? அதில் ஜாதி உணர்வு இல்லையா? இக்கேள்விகள் தனியே வாதிக்கப்படவேண்டும்தான்!)

-ஸ்டாலின் தி