வியாழன், 29 அக்டோபர், 2015

தீண்டாமைக்குக் காரணம் இஸ்லாமியர் படையெடுப்பா?

தி.ஸ்டாலின்

"இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு  அடிபணிய மறுத்த  பிராமணர்கள் மற்றும் சத்திரியர்கள்தான் அசுத்தமான தொழில்கள் செய்ய நிர்பந்திக்கப்பட்டு தீண்டத்தகாத சாதிகள் ஆனார்கள்"  என்று பாரதீய ஜனதாவின் தேசீய செய்தி தொடர்பாளரும்  தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான பிஸே சோங்கர் சாஸ்த்திரி தெரிவித்து உள்ளார்இது தீண்டாமையை இஸ்லாமியர்கள்தான் திணித்தார்களென்றும்  தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டவர்கள் இந்துக்கள் தான் என்றும் திரிக்கும் வேலையாகும். இந்தியா மீதான இஸ்லாமியர் படையெடுப்பு என்பது கி.பி.11-12 ஆம் நூற்றாண்டில் நடந்தது. ஆனால் தீண்டாமையோ வட இந்தியாவில் கி.பி. 400 ஆவது ஆண்டில் உண்டாக்கப்பட்டது. அதாவது இஸ்லாமியர்களின் வருகைக்கும் முன்பு சுமார் 800 ஆண்டுகளுக்கும் முன்பே தீண்டாமை வந்துவிட்டது.  அது வளர்ச்சி அடைந்து கி.பி. 600க்குப்பிறகுதான் தென்னிந்தியாவுக்கு தீண்டாமை வந்ததது. தமிழகத்தில் களப்பிரர் எனப்படும் களப்பறையர் ஆட்சிகாலம் வரை(கி.பி.6) தீண்டாமை இல்லை. களப்பறையர் காலத்துக்குப்பிறகே தீண்டாமை வலுவடைந்தது. எப்படியானாலும் தீண்டாமை உண்டாக்கப்பட்டபோது இங்கே இஸ்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தீண்டாமை இந்தியா முழுவதும்  நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு  சுமார் 100 ஆண்டுகள் கழித்துதான் நபிகள் மெக்காவில் இஸ்லாமியத்தை பரப்பவே ஆரம்பித்தார்.

தீண்டாமைக்குக் முழுக்காரணமும் இந்துக்கள்தான். பார்ப்பனியத்துக்கும் பௌத்தத்திற்குமான மோதலே தீண்டாமையின் ஆணிவேர் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். அவருக்கும் முன்னவே தீண்டாமையின் வரலாற்றை ஆராய்ந்த பண்டிதர் அயோத்திதாசரும் தீண்டாமைக்குக் காரணம் பார்ப்பனியத்துக்கும் பௌத்தத்திற்குமான பகைதான் என்கிறார். மேலாதிக்கம் பெற்ற பார்ப்பனர்களும் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்ட பிற இந்துக்களும் பௌத்தர்களை தீண்டப்படாதவர்களாக ஆக்கினார்கள். பௌத்த வரலாற்றை மறைக்கும் விதமாக 'மாட்டுக்கறி உண்பவர்களே தீண்டப்படாதவர்கள்' என்ற கருத்தை பரப்பினார்கள் இந்துக்கள்.  பிஸே சோங்கர் சொல்வதைப்போல் அசுத்தமான தொழிலிலிருந்து தீண்டாமை வரவில்லை என்பதையும் தீண்டாமை முழுக்க முழுக்க இந்துக்களால் கட்டமைக்கப்பட்ட சமூகக் கொடுமை என்பதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது. மேலும் தூய்மையற்றவர்கள் என்று இந்துக்களால் கருதப்பட்டவர்களும் தீண்டப்படாதவர்களும் ஒன்றல்ல என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். தூய்மையற்றவர்களில்  பலர் இந்துக்களாகவும் இருந்துள்ளனர்.. 

இந்துக்களுக்குள்ளும் தீண்டத்தகாதவர்களாக சிலர் இருந்திருக்கிறார்கள். தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்ட பௌத்தர்களர்களை தொட்டால் எப்போதும் தீட்டுதான் என்பதுதான் இந்து தர்மம். ஆனால் இந்துக்களுள் இருந்த தீண்டத்தகாதவர்களை குறிப்பிட்ட காலநேரத்தில் தொட்டால்தான் தீட்டு.உதாரணமாக பெண்களை மாதவிடாய் நேரத்தில் தொட்டால் மட்டும்தான் தீட்டு. இத்தகைய தீட்டும் சில சடங்கின் மூலம் தீர்க்கப்பட்டது. "சாதி நீக்கம் செய்யப்பட்டவன், சன்டாளன், நிறைமாத கர்ப்பிணி, மாதவிடாய்கால பெண்களையோ அல்லது பிணத்தையோ ஒருவன் தொட்டாலோ அல்லது இவர்களை தொட்டவனைத் தொட்டாலோ அவன் கட்டிய துணிகளுடன் குளித்து தனது தீட்டைப் போக்கிக்கொள்ளவேண்டும்" என்கிறது கௌதமரின் தர்ம சூத்திரம். அதாவது தீட்டுக்குரியவர்களை தொடுபவன் மட்டுமல்ல அவர்களை தொட்டவனைத் தொட்டாலும் தீட்டுதான் என்கிறது இந்த தர்ம சூத்திரம். மேலும் இதில் தீட்டுக்குரியவர்களாகக் கூறப்படும் கர்ப்பிணி பெண்ணும் மாதவிடாய் பெண்ணும்  தூய்மையற்ற சமூகமோ, தீண்டப்படாத சமூகமோ மட்டுமல்லர். அவர்கள் பார்ப்பன வீட்டுப்பெண்ணாகவும் இருக்கலாம். ஆக, தீண்டாமை என்ற நடைமுறை இந்துகளின் கலாச்சாரத்தோடு தொடர்ந்தே வருகிறது. எனவே, இஸ்லாத்துக்கும் மூத்ததுதான் இந்துக்களின் இந்த தீட்டுக்கலாச்சாரம்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கதையின் மூலம் தென்னிந்திய இந்துக்களின் தீண்டாமைக் கலாச்சாரத்தின் பழமையைக் கூறமுடியும். திருவாரூர் கோயிலில் ஒருமுறை பார்ப்பனர்கள் யாகம் செய்துகொண்டிருந்தார்களாம். அந்த நேரத்தில் அங்கே சிவன் ஒரு பறையன் வேடத்தில் செத்த கன்றுக்குட்டியை தோளில் சுமந்துகொண்டு கோயிலுக்குள் வந்துவிட்டானாம். இதனால் பதற்றமான பார்ப்பனர்கள் "பறையன் நுழைந்துவிட்டானே, யாகம் தீட்டாகிவிட்டதே" என்று கதறியபடி கோயிலைவிட்டு வெளியே ஓடிவிட்டார்களாம். இதில் கோபமடைந்த சிவன் "நீங்களும் பறையர்களாவீர்" என்று சாபமிட்டுவிட்டானாம். பிறகு சிவனிடம் பார்ப்பனர்கள் கெஞ்சியதால் "மதியம் ஒரு நாழிகை மட்டும் பறையராக இருப்பீர்" என்று விமோட்சனம் கொடுத்துவிட்டுப் போனானாம். இதனால் திருவாரூர் கோயில் பார்ப்பனர்கள் 'மத்தியான பறையர்' என்றும் அழைக்கப்பட்டார்கள். இக்கதையை உண்மையாக்கவேண்டும் என்பதற்காக திருவாரூர் கோயில் பார்ப்பனர்கள் மத்தியானம் ஒரு நாழிகை பறையராக இருப்பதால் மத்தியானம் ஒரு முறை குளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இப்பழக்கம் அண்மைக்காலம் வரை அவர்களிடம் இருந்ததாக பேராசிரியர் தொ.பரமசிவன் கூறுகிறார். இக்கதையின் மூலம் பறையனாக சிவனே வந்தாலும் அவன் தீண்டப்படாதவன் தான் என்பதைத்தான் இந்துக்கள் சொல்கிறார்கள். அந்தளவிற்கு தீண்டாமையின் மீது பாசம் கொண்டவர்கள் இந்துக்கள்.

இந்தியாவில் இஸ்லாம் வந்தபோது இஸ்லாமியர்களாக ஆனவர்களில் பலரும் இந்துக்களால் தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்ட முந்தைய பௌத்தர்கள்தான். பங்களாதேஷ் இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானவர்கள் முந்தைய பௌத்தர்கள்தான். அதாவது இஸ்லாம் வந்தபோது தீண்டப்படாதவர்கள் தங்களின் மீது சுமத்தப்பட்ட தீண்டாமையை விட்டுவெளியேற இஸ்லாமை பயன் படுத்தினார்கள் என்பதே உண்மை. பிற்கால இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் சமரச்மானார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்துக்கள் இஸ்லாமியர்களிடமும் தலித்துகள் தீண்டப்படாதவர்கள் என்ற நச்சை விதைத்தனர். சில இடங்களில் இஸ்லாமியர்கள் இந்துக்களை பின்தொடர்ந்து தீண்டாமையைக் கடைப்பிடித்தும் இருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கருக்கே அந்த அனுபவம் கிடைத்தது. 1934 இல் தவுலாபாத் அருகே இருக்கும் ஒரு  கோட்டையின் குளத்தில் புரட்சியாளர் அம்பேத்கருடன் வந்தவர்கள் இறங்கிவிட்டதை கடுமையாக அங்கிருந்த இஸ்லாமியர்கள் எதிர்த்திருக்கிறார்கள். "இதைத்தான் உங்கள் மதம் போதிக்கிறதா?" என்று புரட்சியாளர் கேட்டபோது அவர்களால் பேசமுடியவில்லை. ஏனெனில் அவர்களின் மதம் தீண்டாமையை போதிக்கவில்லை. தீண்டாமை என்னும் விஷத்தை எல்லாத் தரப்பிலும் பரப்பியதும்,பரப்புவதும் இந்துக்கள்தான். இஸ்லாமியர்களின் இவ்வனுபவத்தைக் குறிப்பிடும்போது புரட்சியாளர் அம்பேத்கர் "ஒருவன் இந்துக்களுக்கு தீண்டப்படாதவன் என்றால் அவன் முகமதியர்களுக்கும் தீண்டப்படாதவன் ஆகிறான்" என்கிறார். தீண்டாமையையும் தீண்டப்படாதவர் யார் என்பதையும் இந்துக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.

எனவே, தீண்டாமையை  இஸ்லாமியர்கள்தான்   உண்டாக்கினார்கள் என்று சொல்லி இந்துக்கள் தப்பித்துக்கொள்வதற்கு வரலாறு அனுமதிக்காது. தீண்டாமையானது இந்திய வரலாற்றுப்பக்கங்களை ரத்தங்களில் நனைத்துள்ளது. இன்றைக்கும் நூற்றுக்கும் அதிகமான வடிவில் இந்துக்களால் தீண்டாமைக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை அரசின் ஆவணங்களும்கூட ஒப்புக்கொள்கின்றன. உசிலம்பட்டியில் செருப்பணிந்து சென்ற ஏழாம் வகுப்பு படிக்கும் தலித் சிறுவனின் தலையில் சாதிவெறியர்கள் செருப்பை வைத்து இழுத்துச் சென்றதும், ஒரிசாவில் பொதுக்கிணற்றில் நீர் எடுத்ததற்காக தலித் இளைஞனின் இரண்டு கைகளையும் துண்டாக வெட்டியதும் அண்மைக்காலச் சம்பவங்கள்தான். நவீனமான வாழ்க்கைமுறையை இவ்வுலகம் மேற்கொண்டபோதிலும் தீண்டாமை என்னும் பழமைவாதம் ஒழிந்திடவில்லை. ஜாதி இருக்கும்வரை இந்துகளால் நடத்தப்படும் தீண்டாமை வன்முறையும் இருக்கும்தான். ஜாதி கூட இருக்கலாம் தீண்டாமை ஒழியட்டும் என்று காந்தி மொன்னைத்தனமாகச் சொன்னதை ஏற்காமல் ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியாது என்று யதார்த்தத்தை சொன்னார் புரட்சியாளர் அம்பேத்கர். ஜாதியை ஒழிப்பை ஏற்காத இந்துக்கள் இன்று தீண்டாமைக்குக் காரணம் இஸ்லாமியர்தான் என்று பொய்யுரைத்து திசைத்திருப்புகிறார்கள். அதற்கு பிஸே.சோங்கர் போன்றவர்களைப் பயன்படுத்துகிறார்கள். பொய்ப்புரட்டுகளையும், வன்முறைகளையும், சூழ்ச்சி தந்திரங்களையும், வஞ்சகமான துரோகங்களையும் அடித்தளமாகக்கொண்டதுதானே இந்துத்துவம்.    

எல்லாம் இருக்கட்டும். சோங்கர் சொல்வதைப்போல் பிராமணர்களும் சத்ரியர்களும் தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் கதையை முதலில் அவர்கள் ஏற்கிறார்களா என்று சோங்கர் கேட்கட்டும். சோங்கரின் கதை அத்தோடு முடிந்துவிடும்.