வெள்ளி, 12 ஜூன், 2015

அரசு மருத்துவமனையின் அலட்சியம், தலித் பெண் மரணம்.

கடலூர் மாவட்டம் சிவக்கம் கிராமத்தைச் சேர்ந்த விதவைப்பெண்ணை 12-6-2015 அன்று காலை பாம்புக்கடித்தது. அவரை உள்ளூர்ப்பகுதி ஆரம்பசுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்கள் முதல் உதவி செய்துவிட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி கூறினர். அதைத்தொடர்ந்து அப்பெண்ணை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். ஆனால் சுமார் மூன்று மணிநேரம் எந்த மருத்துவ உதவியையும் செய்யாமல் மருத்துவமனை அலட்சியம் காட்டியுள்ளது. பிறகு வந்த மருத்துவர் பரிசோதித்துவிட்டு 'நார்மல்'தான் என்று மருத்துவ பணியை முடித்துவிட்டார். 'நார்மல்' என்ற சான்றையும் கொடுத்து, சாப்பிட டீ,பண் கொடுக்கச்சொல்லியுள்ளனர். டீயும் ரஸ்கையும் சாப்பிட்ட அப்பெண் சுமார் 20 நிமிடத்தில் வாயில் நுரைத்தள்ள துடித்துடித்து இறந்துள்ளார். இறந்தப்பெண் தலித் பெண். விதவையான அவருக்கு 7 வயதிலும் 5 வயதிலும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருவீட்டு பாட்டனார்களும் பாட்டிகளும் கூட இல்லை. அக்குழந்தைகள் அனாதைகளாக இன்று கதறி நிற்கின்றனர்.

மருத்துவமனை 'நார்மல்' என்று சொல்லிக்கொடுத்த சான்றையும் உடனடியாக திரும்ப வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இம்மரணம் ஒரு கொலையைப்போல்தான் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.மருத்துவ மனையில் பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து உள்ள போதும் அது பயன்படுத்தப்படவில்லை. பாமர சேரிப்பெண்ணின் உயிரை மருத்துவரும் மருத்துவமனையும் அலட்சியம் செய்ததன் விளைவு ஓர் அப்பாவி ஏழை தலித் பெண் மரணமடைந்துள்ளார். அவரது மழலைகள் அனாதைகளாக கதியற்று நிற்கிறார்கள்.

தமிழக அரசே!

உயிரிழந்தப்பெண்ணின் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நட்ட ஈடு கொடு!

மருத்தவர் மற்றும் உழியர்மீது குற்றவியல் சட்டப்படி வழக்குப்ப்திவு செய்து உடனடியாக கைது செய்!

மருத்துவக்குற்றவாளிகள் தலித்தல்லாதவராக இருப்பின் அவர்கள்மீது எஸ்.சி./எஸ்.டி.வன்கொடுமை வழக்கின் கீழ் நடவடிக்கை எடு!

உயிரழந்த பெண்ணின் உறவினருக்கு அரசு மருத்துவ மனையில்  வேலைக்கொடு!

தலித்/பழங்குடிகளுக்காக தனி மருத்துவமனைகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவு!

---க.திருவள்ளுவன்.


தண்ணீரும் ஜாதியும்

நீரின்றி அமையாது உலகு என்பதை இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னவே சொன்ன சமூகம் சாக்கிய சமூகம். ரோகினி நதி நீர் மீதான பிரச்சனையில் உருவான போர்ச்சூழலை எதிர்த்து ராஜ்யத்தைவிட்டு வெளியேறிவர் சாக்கிய முனி புத்தர். இப்படி நம் அறிவியலிலும் வரலாற்றிலும் முக்கிய இடம்பெற்ற தண்ணீருக்கும் நமக்குமான உறவு, வஞ்சக பார்ப்பனிய-ஜாதியத்தால் நம் பூர்வ மண்ணிலேயே  உரிமையற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக ஆக்கப்பட்டபிறகு சிதைக்கப்பட்டது.
நம்மிடமிருந்து மண்பறிக்கப்பட்டது. அதன் வழியே மண்ணின் வளமும் பறிக்கப்பட்டது. அவற்றில் முக்கியமானது தண்ணீர். தண்ணீர் அனைத்து உயிர்களுக்குமே முக்கியமானது. வள்ளுவ ஞானி சொல்லியதைப்போல் உலகமே நீரால் ஆனது. மனித உயிர்களும் நீரால் ஆனது;வாழ்வது. அதில் பார்ப்பான் உயிருக்கும் பறையன் உயிருக்கும் வேறுபாடில்லை. இதுதான் இயற்கையின் விதி. ஆனால் பார்ப்பனியம் பார்ப்பனியத்தைக்கொண்டவர்களிடம் தண்ணீரை ஒப்படைத்தது. அதை எதிர்த்தவர்களை தண்ணீரைவிட்டு தள்ளிவைத்தது. தண்ணீரை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தம்மை எதிர்ப்பவர்களைக் கட்டுப்படுத்த நினைத்தது பார்ப்பனியம். தலித்துகளை ஒடுக்கவும் கட்டுக்குள் வைக்கவும் தண்ணீரையே முக்கிய ஆயுதமாக ஆக்கியது பார்ப்பனிய ஜாதிப்புத்தி. தீண்டாமையை நிலைநாட்ட தண்ணீரே சிறந்த துருப்பாக இருந்தது இந்துக்களுக்கு. தீண்டாமையின் வரலாற்றை தொல்லியல் வழியாகக்கூறிய கோபால் குரு "தண்ணீர் இல்லாமல் போயிருந்தால் தீண்டாமை வந்திருக்காது" என்கிறார்.


ஜாதியின் இருப்புக்கு அந்தளவுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தலித் பெண்களை பாலியல் ரீதியாக ஆக்கிரமிக்க தண்ணீர்தான் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. தண்ணீரின் மீதான உரிமையில்லாததால் தலித்துகளால் சீர்செய்யப்பட நிலங்களை ஜாதி இந்துக்கள் கைப்பற்றியதும் நடந்தது.

பிணத்தை அடக்கம்/தகனம் செய்யும் முன் தண்ணீர் நிறைந்த மண்குடம் உடைத்து பிணத்தின் வாயில் நீரூற்றும் பண்பாட்டைக்கொண்ட இந்த மண்ணில்தான்  தாகத்துக்கு தண்ணீர் தரும்போதும் கூட "என்ன ஆளு" என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. புத்தர் ஒருமுறை ஒரு வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாகமெடுக்க, அவ்வீதியில் தண்ணீர் குடத்துடன் ஒதுங்கி நின்ற பெண்ணிடம் தண்ணீர் கேட்டார். "நான் கீழ் சாதி" என்று அந்தப்பெண் கூற, "நான் தண்ணீர்தான் கேட்டேன், ஜாதியை அல்ல" என்றாராம் புத்தர். பாபாசாகேப் சிறுப்பிள்ளையாக இருந்தபோது, குடிநீரைப்பெற மகார் என்பதை மறைத்து முகமதியச்சிறுவனாக நடித்தார். இப்படி தண்ணீர் ஓர் ஒடுக்குமுறைக்கருவியாக ஆக்கப்பட்டது.

தலித்துகளின் மண்ணுரிமைப்போராட்டம் போல் தண்ணீர் உரிமைப்போராட்டமும் நெடும் வரலாற்றைக்கொண்டது. பாபாசாகேப் மகத் போராட்டத்தின் வழியேதான் உலக அரங்கில் ஜாதியின் கொடூரத்தை படம்பிடித்துக்காட்டினார். 1881 இல் பண்டிதரின் திராவிட மஹாஜன் சங்கத்தின் முதல் மாநாட்டு தீர்மானங்களில், "ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வித தடையுமின்றி பொதுக் கிணறு, குளத்தைப்பயன்படுத்துவதற்கு உரிமையளிக்கவேண்டும்" என்பதுவும் ஒன்று. தாத்தா ரெட்டமலையார், எம்.சி.ராஜா, எல்.சி.குருசாமி ஆகியோரும் அக்கால சட்டமண்றக்கூட்டங்களில் தண்ணீர் உரிமையைக்கோரியிருக்கிறார்கள். வெகுமக்கள் போராட்டங்களாகவும் ஏராளம் நிகழ்ந்திருக்கின்றன. சேரிமீதான தாக்குதலுக்கு இப்போராட்டங்கள் காரணங்களாகவும் இருத்திருக்கின்றன. இன்னமும் தண்ணீர் மறுக்கப்படும் கிராமங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஜாதியின் பிடி தண்ணீரின் மீது முற்றிலுமாக அகன்றுவிடவுமில்லை. ஆனால் தண்ணீரை தம் கட்டுக்குள் கொண்டுவந்த ஜாதிக்கூட்டத்துக்கு அதை எப்படி பாதுகாப்பது என்ற அறிவு இல்லாததால் இன்றைக்கு நீர்நிலைகள் அழிந்துவருகின்றன. தலித்துகளை அனுமதிக்காத குளங்களும் ஏரிகளும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி காணாமல் போனதை முச்சந்தியில் உக்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ஜாதிய நோயாளிகள். மனிதரை இழிவுசெய்து மறுபுறம் நதிக்கு புனித சாயம் பூசியவர்களால் பன்னாட்டுக்கம்பனிகளின் நீர் வேட்டையை தடுக்க முடியவில்லை. ஒரு டம்ளர் தண்ணீரைக்கூட தலித்துகளுக்கு கொடுக்க மனமில்லாதவர்களின் கவுரவத்தால் ராட்சச குழாய்சொருகி தண்ணீரை உறிஞ்சும் கார்ப்பரேட்டுகளை எதுவும் செய்யமுடியாது.

"புலியும் பசுவும் ஒரு துறையில் இறங்கி நீரருந்திய தம்ம தேசம் இன்று மனிதனோடு மனிதன் ஒன்றாக இறங்கி நீர் அருந்தமுடியா அதர்ம தேசமாகிவிட்டதே" என்று வேதனைப்பட்டிருப்பார் பண்டிதர் அயோத்திதாசர். அந்த தம்ம காலம் மீண்டும் வரும் வரை நக்கிருக்கட்டும் விடுதலைத் தாகம்.

மார்ச்.22. உலக தண்ணீர் தினம்.(முகநூல் பதிவு)
-ஸ்டாலின் தி