வியாழன், 4 ஜூன், 2015

தொடரும் கருத்துரிமை மீதான ஒடுக்குமுறைகளும் கருத்துரிமைக்கான பம்மாத்து ஆதரவுகளும்.

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் செயல்பட்டுவந்த 'அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை' கடந்த 15-05-2015 அன்று மத்திய அரசு தடை விதித்தது. "இவ்வமைப்பு மராட்டிய மாநில அரசு மாட்டுக்கறிக்கு தடைவிதித்ததை விமர்சித்தது, மோடி அரசையும், மதம் தொடர்பான கருத்துக்களைக்கூறிய மத்திய அமைச்சர்களை விமர்சித்தது" என்றெல்லாம் அம்பேத்கர்-பெரியார் வாசகர்வட்டத்தின் மீது குற்றங்களை சுமத்துகிறார் ஐ.ஐ.டியின் தலைவர் (Dean) மேலும் அவர் "அமைப்பு இருப்பதற்கான சுதந்திரம் உண்டு. ஆனாலும் கருத்துக்களைக் வெளியிடும் போது, சென்னை ஐ.ஐ.டி.பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. அதை வாசகர் வட்டம் மீறிவிட்டதனால்தான் தடை செய்ய நேர்ந்தது" என்றும் கூறியிருக்கிறார். மத்திய மனிதவளத்துறை அமைச்சரான ஸ்ருதி இராணியும் "அந்த மாணவர் அமைப்பின் சில செயல்பாடுகள் விதிமுறைகளை மீறியுள்ளதால் அவ்வமைப்பை டீன் தடைசெய்துள்ளார்" என்று கூறுகிறார். விதிமுறை என்பதைக்காரணமாகக் காட்டினாலும் இந்துத்துவத்தை அவ்வமைப்பு விமர்சித்ததே முக்கியக்காரணமாக இருப்பது டீனின் மேற்காணும் 'மனக்குமுறலின்' மூலம் தெளிவாக இருக்கிறது. ஐ.ஐ.டி நிறுவனமே தீவிர இந்துக்களால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனம்தான். இடஒதுக்கீடு என்பதெல்லாம் அங்கே மூக்கைக்கூட நுழைக்கமுடியாது. நிர்வாகிகள் மட்டுமல்ல கல்வி பயிலும் மாணவர்களும் ஜாதிமீது அதீத மோகம் கொண்டவர்கள்தான். அங்கே சிறுபான்மையாக பயிலும் மாணவர்கள் மீதான வன்மங்கள் கொடூரமானவைகள். தலித் மாணவர் விடுதி அறை வாயிலில் மலத்தைக் கழித்து ஜாதி இந்து மாணவர்கள் தங்களின் நவநாகரீக அறிவை வெளிப்படுத்துவதெல்லாம் அங்கே சர்வ சாதாரணம். சென்னையில் உள்ள ஐ.ஐ.டியில் இப்படியொரு-அம்பேத்கர் பெரியார் வாசகர்-வட்டத்தை அந்த மாணவர்கள் உருவாக்கியதே பெரும் சவால்தான். அதைத்துவக்கிய போதே ஐ.ஐ.டி. எப்படி அனுமதித்தது என்பதுதான் ஆச்சர்யமான கேள்வி. அந்தக் கேள்வியை மத்திய மனிதவள அமைச்சகமும் கேட்டிருக்கும் போல, டீன் முடித்துவைத்துவிட்டார். பல்வேறு கண்டனங்களைத்தொடர்ந்து நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது; மாணவர்கள் பிடிக்கொடுக்காமல் உள்ளார்கள். ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயத்துக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் "விளக்கம்தான் கேட்டோம், அதை தடையென்று தவறாகப்புரிந்துகொண்டார்கள்" என்கிறார் ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி. ஒரு மின்னஞ்சலைக்கூட புரிந்துகொள்ளமுடியாத மாணவர்களா புகழ்ப்பெற்ற ஐ.ஐ.டி.யில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை அந்த இயக்குனரிடம்தான் கேட்டுப்பார்க்கவேண்டும். அம்பேத்கர்-பெரியார் வாசக வட்டத்துக்கு நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில் "உங்கள் அமைப்புக்கான அங்கீகாரம் ரத்தாகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக" மாணவர் பிரிவுத்தலைவர் எம்.சிவக்குமார் கூறியிருக்கிறார்(தி இந்து 03-06-2015).

ஒருவேளை போராட்டங்களால் பணிந்து தடை நீக்கப்படலாம். ஆனால் தடை என்ற நிலை ஏன் வந்தது? ஒருபக்கம் பிரதமர் மோடி "அம்பேத்கர் இல்லாமல் போயிருந்தால் நான் பிரதமாராக ஆகியிருக்கமுடியாது" என்று கூறுகிறார். இன்னொருபக்கம் அதே அம்பேத்கரின் பெயரிலான அமைப்பை மத்திய அரசு தடை செய்கிறது. அதே சென்னை ஐ.ஐ.டி.யில் 'விவேகானந்தர் வாசகர் வட்டம்', 'வசிஸ்டர் வாசகர் வட்டம்', 'ஆர்.எஸ்.எஸ். வட்டம்' போன்ற அமைப்புகளெல்லாம் உள்ளனவாம். ஆனால், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்  மட்டும் ஏன் நிர்வாகத்தை, அதன் தலைவரை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை, அது அடங்கிய மத்திய அரசை ஆளுவோரை உருத்துகிறது? 

விவேகானந்தர் வாசகர் வட்டம் இந்துத்துவத்தை விமர்சிக்கப்போவதில்லை. மேலும் இந்துத்துவத்தை அவ்வமைப்பு இன்னும் பொலிவுபடுத்தலாம். எனவே அதனால் 'சமூக அமைதி' கெடப்போவதில்லை. ஆனால், அம்பேத்கரை வாசிப்பவர்கள் இந்துத்துவத்தை தோலுரிப்பார்கள்;எதிர்த்துநிற்பவர்கள். அது சமூகத்தை கலவரப்படுத்திவிடும். இதுதான் அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் மீது ஐ.ஐ.டி.கும்பலுக்கு எச்சரிக்கை உணர்வை வரவைத்துள்ளது. இது காலம் காலமாக இந்துக்களுக்கு இருக்கும் எச்சரிக்கை உணர்வுதான். அவர்களின் இந்த உணர்வுதான் ஆயிரக்கணக்கான புத்த பிக்குகளை கழுவேற்றி, தீயில் தள்ளி கொலைச்செய்தது. மனுச்சட்டத்தை உருவாக்கியதும் நடைமுறைப்படுத்தியதும் அந்த எச்சரிக்கை உணர்வுதான். அந்த உணர்வு தன்னை ஜாதியின் காவலனாக கருதிக்கொள்ளும் ஒவ்வொரு இந்துவுக்கும் இருக்கிறது. அம்பேத்கர் போன்ற சமத்துவக் கலக்காரர்களைக்கண்டால் அவர்ளின் ஜாதி நரம்புகள் நடுங்கத்தொடங்கிவிடும். ஐ.ஐ.டி.யின் ஜாதி நரம்புக்கும் அந்த நடுக்கமே வந்துள்ளது. அதன் பக்கவிளைவுதான் வாசகர்வட்டத்தை தடைச்செய்வது, அச்சுறுத்துவது, பணியச்செய்வதெல்லாம்.
நம் வரலாற்றின் சுவடுகளில் எத்தனையோ தடைகளை,அச்சுறுத்தல்களை, தாக்குதல்களை பதித்துக்கொண்டுதான் வந்திருக்கிறோம். 1898 இல் சென்னை விக்டோரியா மஹாலில் கூடிய 'சென்னை மஹாஜன சங்க' கூட்டத்தில் பண்டிதர் அயோத்திதாசர் தலித்துகளுக்காக சில கோரிக்கைகளை முன்வைத்தபோது அச்சங்கத்தின் அங்கத்தினர்களான செல்வந்தர்களும் வணிகர்களும்,பிரபலங்களும் கடுமையாக பண்டிதரை எதிர்த்தார்கள். ஒரு நல்ல மனிதரின் கருத்தாக, ஒடுக்கப்பட்டு கீழ்நிலைக்குத்தள்ளப்பட்ட சமூகத்துக்கான குரலாக பண்டிதரின் கோரிக்கைகள் பார்க்கப்படவில்லை. பஞ்சமனை கோயிலுக்குள் நுழைய அனுமதிப்பதா என்ற ஜாதி உணர்வே அந்த கௌரவக்காரர்களுக்கு மிகுந்திருந்தது. 1936 இல் லாகூரில் ஜாத்-பட்-தோடக் மண்டல் என்னும் இந்து அமைப்பின் மாநாட்டுக்கு தலைமை உரையாற்ற புரட்சியாளர் அம்பேத்கர் அழைக்கப்பட்டார். அவரின் மாநாட்டு உரையின் கட்டுரை நகலை வாசித்த மாநாட்டினர் 'கடும் அதிர்ச்சியுற்று' மாநாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று மாநாட்டையே ரத்து செய்தார்கள் அந்த அமைப்பினர். அவர்கள் கடும் அதிர்ச்சியடையக்காரணம் அம்பேத்கரின் உரை 'சாதி ஒழிக்க வழி'யைக்கூறியது. இப்படி நம் கருத்துக்களை நிராகரிப்பதும் தடுப்பதும் தான் இந்துத்துவத்தின் கடமையாகும். இன்று பண்டிதரைக்கண்டித்த சென்னை மஹாஜன சங்கத்தின் சுவடு இல்லை; அண்ணலின் உரையை நிராகரித்த தோடக் மண்டலின் சுவடுமில்லை. ஆனால் பண்டிதரும் அண்ணலும் வரலாறாய் நிற்கிறார்கள்.

சென்னை மஹாசங்கமும் தோடக் மண்டல் அமைப்பும் தங்களை சிறந்தநிலையின் அடையாளமாகக்காட்டிக்கொண்டன. ஆனால் தங்களின் ஜாதிய மனோநிலையால் வரலாற்றில் கீழ்நிலைக்குத்தள்ளப்பட்டன. ஐ.ஐ.டி.யும் சிறந்த, தரமான நிறுவனமாகத்தன்னை காட்டிக்கொண்டது. ஆனால் அதன் ஜாதிய நிலைப்பாடால் இன்று இந்திய அவலத்தின் சின்னமாகி நிற்கிறது. ஆதிக்கத்தின் கோரமுகத்தை நெடுநாட்கள் மறைத்துவைக்கமுடியாது என்பதற்கான சிறந்த உதாரணம்தான் இன்றைய ஐ.ஐ.டி.

இப்பிரச்சனை கருத்துரிமை மீதான அரசு மற்றும் இந்துத்துவ ஒடுக்கு முறைக்கான எடுத்துக்காட்டாக உள்ளது. அதேசமயம், ஆதிக்கவாதிகளின் இன்னொருப்பிரிவு தங்களின்  கருத்துரிமை என்னும் நாடகத்தை நடத்தும் மேடையாகவும் இப்பிரச்சனை விளங்குகிறது. முற்போக்கு,பகுத்தறிவு என்றெல்லாம் முழங்கும் திராவிட,தமிழிய அமைப்புகள் ஐ.ஐ.டி.யின் ஆதிக்கத்தை கண்டிக்கின்றன. ஆனால், இவ்வமைப்புகள் கருத்துச்சுதந்திரம் என்பதை உள்ளீடாகக்கொண்டிருக்கிறதா? ஈழத்தில் ஜாதிய சூழலோ, தலித் மீது ஒடுக்குமுறையோ இல்லைவே இல்லை என்று சாதிக்கின்றன தமிழிய அமைப்புகள். இது இலங்கைத் தலித்துகளின் விடுதலைக்கான கருத்தியலை மழுங்கடிக்கும் செயலல்லவா? கருத்துரிமைக்கு எதிரான போக்கல்லவா? ஐ.ஐ.டி.எதிர்த்து போராடும் திமுக தலித்துகளின் கருத்துரிமையை நசுக்கிய வரலாறும் உண்டு. 90 களின் இறுதியில் திமுக அரசால் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம் தடைச்செய்யப்படும் என்று அச்சுறுத்தப் பட்டது. ஆயிரக்கணக்கான அப்பாவி தலித்துகளை  சிறைக்குள் தள்ளி ஒடுக்கியது. இட ஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டுமென்று அன்றைய வி.சி.இயக்கம் உள்ளிட்ட தலித் அமைப்புகளின் கருத்துரிமையை கடுமையாக எதிர்த்து ஒடுக்கியது திமுக அரசு. கருத்துரிமைக்கெதிரான 'பொடா' சட்டத்தை கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியதும் திமுகதான். ஆனால் இன்று கருத்துரிமைக்குறித்து கவலைப்படுகிறது திமுக. திமுக போன்ற திராவிட மற்றும் தமிழ் அமைப்புகள் ஐ.ஐ.டி.யை எதிர்க்கக்காரணம் அந்த வாசகர் வட்டம் அமைப்பின் பேரில் பெரியார் என்பதுவும் இருப்பதுதான். நிச்சயமாக, அம்பேத்கர் வாசகர் வட்டம் என்று மட்டும் பெயர்வைத்திருந்தால் தலித்துகளைத்தவிர வேறு யாரும் போராடவந்திருக்கமாட்டார்கள். அண்ணலின் சிலை வாரத்திற்கு ஒரு முறையாவது இங்கே உடைக்கப்படுகிறது, தாக்கப்படுகிறது. ஆனால் தலித்தல்லாத யாரும் போராடுவதில்லை, கண்டுகொள்வதுகூட இல்லை. பாமரனாக உள்ள தலித்தல்லாதவனை விடுவோம் 'மாற்றத்தைக் கொடுக்கவே அரசியல் களம் புகுந்த' செயல்வீரர்களாவது கண்டுகொள்வதுண்டா?  இதுவரை அண்ணலின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் போராடியதற்கான ஆதாரம் உண்டா என்று நாம் கேட்டால் நிச்சயம் பதில் வராது. அண்ணலின் சிலையை உடைக்கும் சாதாரண சாதி வெறியன் எப்படி அண்ணலைப்பார்க்கிறானோ அப்படித்தான் நாடாளும் தலைவர்களும் அவர்களின் கட்சிகளும் பார்க்கின்றனர். ஐ.ஐடிக்கு எப்படி அண்ணலைப்பிடிக்காதோ அப்படித்தான் ஒவ்வொரு ஜாதி இந்துவுக்கும் பிடிக்காது. கிராமத்தின் குட்டிச்சுவற்றில் உட்கார்ந்து தலித்தை ஒடுக்கும் ஜாதிவெறியனுக்கும் ஐ.ஐ.டி.டீனுக்கும் படிப்பில், பொருளாதாரத்தில் மிக்க வெறுபாடு இருக்கலாம். ஆனால் இருவருக்கு ஒரே வகையான அறிவுதான். ஜாதி ஐ.ஐ.டியில் மட்டும் இருக்கிறது என்று நம்பும் அளவுக்கு நாம் ஏமாளிகளல்ல.


-ஸ்டாலின் தி.

கருத்துகள் இல்லை: