புதன், 25 நவம்பர், 2015

பண்டிதர் ஏற்றிவைத்த கார்த்திகை தீபம் என்னும் கார்த்துல தீபம்.

தி.ஸ்டாலின்



கார்த்திகை தீபம் என்னும் திருநாளை இன்றைக்கு இந்துக்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள். நாத்தீகம் பேசும் இந்துக்களும் ஆம் அது இந்துக்கள் பண்டிகைதான் என்று கூறி இந்துக்களுக்கு சார்பாக நிற்கிறார்கள். பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கு இடையில் நடந்த 'ஈகோ' சண்டையை சிவன் தீர்த்து வைத்ததைப் போற்றும் வகையில் சிவனைப் போற்ற தீபநாள் கொண்டாடப்படுவதாகவும், முருகனி அவதார நாளே தீபத் திருநாள் என்றும் பலக் கதைகள் தீபத்திருநாளுக்கு கூறப்படுகின்றன. நாத்தீகர்களும் இக்கதைகளையே நம்பிக்கொண்டு தீபத்திற்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஆனால் கார்த்திகை திரு நாள் குறித்த மாறுபட்ட பார்வையும் இங்கே இருக்கிறது. அது பௌத்த பார்வை. அதில் மூடநம்பிக்கை இல்லை. பகுத்தறிவான பார்வை. பண்டிதரின் பகுத்தறிவு பார்வை நம்முன் ஏற்றிவைக்கும் தீப வரலாறு இதுதான்.

நெடுங்காலத்திற்கும் முன் மலாடபுரம் என்னும் ஊரில் இருந்த பௌத்த சங்க அறிஞர்கள் ஆமணக்கு (ரிசினஸ் கம்யூனிஸ்) தாவரங்களான பேராமணக்கு, சிற்றாமணக்கு விதைகளைக் கொண்டு அதிலிருந்து எண்ணெய் எடுத்து அதை மருந்துகளுடன் இணைத்து ஆராய்ந்தும், அதன் மூலம் ஏற்றப்படும் தீபம் வெப்பம் இன்றி குளிர்ச்சியான சூழலைக் கொடுப்பதை அறிந்தும் அவற்றை மக்களுக்கும் பயன்படும் நோக்கத்தில் அரசனிடம் சமர்ப்பித்தனர். பௌத்த ஆராய்ச்சியாளர்களின் படி ஆமணக்கு விதைகளைச்  சேகரித்து எண்ணெய் எடுத்து தனது அரசாட்சிக்குட்பட்ட பெரும் மலை ஒன்றில் பெரிதாக பள்ளம் வெட்டி அதில் ஆமணக்கு எண்ணெய் ஊற்றி, பருத்தியினால் பெருந்திரிகளை தயாரித்து அதிலிட்டு தீபமேற்றிட ஆனையிட்ட அரசன், விடியும் வரை தீபம் எரிவதைக் கண்டு பிறகு காலையில் அம்மலையில் இருக்கும் பறவைகளுக்கும் உயிர்களுக்கும் ஏதேனும் அதனால் தீங்கு ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்தார். எவ்வுயிர்களுக்கும் அதனால் எத்தீங்கும் ஏற்படவில்லை என்பதை அறிந்த அரசன் மக்களின் பயன்பாட்டுக்கு ஆமணக்கு எண்ணெயை அறிமுகப்படுத்தினார். ஆனாலும் இதுவரை பயன்படுத்திராத அவ்வெண்ணெயை பயன்படுத்த மக்களுக்கு சிறிது அச்சமாக இருந்தது. அதனால் மூன்று நாட்களுக்கு ஆமணக்கு எண்ணெய் இட்ட தீபத்தை வீட்டு வாசல்களிலும், மாடங்களிலும் ஏற்றி சோதித்தனர். அப்போதும் எந்தக் கெடுதலும் வராததைக் கண்டு மகிழ்வுற்ற மக்கள் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தத் துவங்கினர். அச்சம்பவங்களை நினைவுக் கூறவே கார்த்திகை தீபம் என்னும் கார்த்துல தீபம் கொண்டாடப்பட்டது. அதாவது, பௌத்த அறிஞர்கள் கருமேகம் சூழும் மாதத்தை கார்திகை என்று பெயரிட்டனர். காரிருளை அகற்றும்-துலக்கும்- தீபத்தை கார்த்துல தீபம் என்று குறிப்பிட்டனர். கார்த்துல தீபத்தை கார்த்திகையில் ஏற்றி மக்கள் கொண்டாடினார்கள். முதன் முதலில் பெருந்தீபம் ஏற்றப்பட்ட மலையை மக்கள் அண்ணாந்து பார்க்கும் மலை என்றனர். பிறகு அதுவே அண்ணாமலை என்றும் திருவண்ணாமலை என்றும் ஆனது. அம்மலையில் அமைக்கப்பட்ட பௌத்த விஹாரைக் கைப்பற்றிய பார்ப்பனிய மதம் கார்த்திகை மாத பௌர்ணமியில் கொண்டாடப்பட்ட கார்த்துல தீபத்தையும் கைப்பற்றி கட்டுக்கதைகளைத் திரித்துக்கொண்டது.
சீனாவிலிருந்து வந்த யாத்ரீகன் யுவாங் சுவாங் சீனாவுக்கும் இப்பண்டிகையை பரபப்பச்செய்தார். நாம் கார்த்திகைக் கொண்டாடும் இதே காலத்தில் சீனாவில் தீபங்கள் ஏற்றுவதும் பட்டாசு வெடிப்பதும் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் ஆமணக்கு உற்பத்தியில் இந்திவுக்கு முதலிடம், சீனாவுக்கு இரண்டாமிடம் என்பதையும் இங்கே கவனம் கொள்ளவேண்டும்.

பண்டிதர் இவற்றுக்கு தரும் இலக்கிய ஆதரங்கள்:
1. பதார்த்த சிந்தாமணி
உண்டாலுதிரப்பலநோயும் ஒடுங்கிருமிகுடல்வாதம்
கண்டே சுவைக்கில் விளக்கெண்ணெய் கண்ணேகுளிருங் குணந்தேறுங்
கொண்டால் கிரந்தி சூலையுடன் கொடிய கரப்பான் பலமேகம்
விண்டோர்தோஷ கணமாந்த மகலுஞ் சித்தாமணக்கெண்ணெய்.


2. பெருந்திரட்டு - பாசமாட்சி
காராமணத்தைக் கருதிக் கரைந்தங்கு / பேராமணக்கைப் பெற்றார்கள் & ஊரா
ருளப்பருத்தி நெய்யூ மீர்ந்தார் பெருவங் / களம்பார்த்த தீபக்கழல்
புரிமலாடதுபதிந்த பொற்றவசங்கத்தோர்கள்
கரதவாமணக்கு நெய்யை தூயமன்னவன்பாற் கொண்டு
பரத வெல்லை அண்ணாந்து பதிசிரம்பதித்து தீப
மொருதீங்க மேறாதலே யூரவரகத்தி லேற்றார்.


(இங்கே நான் எண்ணெய் என்ற சொல்லையே பயன்படுத்தியிருந்தாலும் துவக்கத்தில் எள்ளில் இருந்து எடுக்கப்பட்டதே எண்ணெய் எனப்பட்டது. அதாவது, எள்+நெய்=எண்ணெய். எனவே ஆமணக்கு நெய் என்பதே சரியென்றாலும் தற்போதைய வழக்கில் எண்ணெய் என்பதே பரவலான அனைத்து நெய் வகைக்கும் சொல்லாகிவிட்டதால் அதையே பயன்படுத்தியிருக்கிறேன்.)

சகிப்பின்மையே இந்துக் கலாச்சாரம்.

க.திருவள்ளுவன்

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமர்த்தப்பட்ட பிறகு 'இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை' என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல எழுத்தாளர்கள், கலைஞர்கள்,அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் இக்கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். நடிகர் அமீர்கானும் இக்கருத்தை வலியுறுத்தி "நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்" எனக் கூறியிருக்கிறார். அமீர்கான்  போன்றவர்கள் கூறும் சகிப்பின்மை இங்கு குறைந்துகொண்டிருக்கிறத என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால்  கடந்த ஆறு, ஏழு மாதகாலமாகத்தான் இந்நிலை இருக்கிறது என்பதைப் போல் சிலர் பேசுவதை நாம் மறுத்தே ஆகவேண்டும்.

"கடந்த 6 முதல் 8 மாதங்களாக நாட்டில் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளது. அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது" என்கிறார் அமீர்கான். ஆனால் உண்மையென்ன? ஆயிரம் ஆண்டுகளாகவே இந்திய மண்ணில் சகிப்பின்மையும் அதன்காரணமா அச்சுறுத்தல்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை.

இந்திய சகிப்பின்மையின் கொடிய வரலாறு பௌத்தம் வீழ்த்தப்பட்ட காலத்திலிருந்தே தொடர்கிறது. சகிப்புத்தன்மையை போதித்த  பௌத்தத்தை பார்ப்பனியம் வீழ்த்தியபோதே இங்கு சகிப்பின்மை தலைதூக்கி ஆளத்துவங்கிவிட்டது. தமது சகிப்பின்மைக் கொள்கையையே பார்ப்பனியம் பிறகு தீண்டாமைக் கலாச்சாரமாக ஆக்கியது. இந்த கொடிய தீண்டாமைக் கலாச்சாரத்தை பாதுகாப்பதே ஒவ்வொரு இந்துவின் கடமையாக நடைமுறைப் படுத்தப்பட்டு சகிப்பின்மையை வளர்த்தெடுத்தார்கள் இந்துக்கள். அதன் விளைவுதான் சங்பரிவார்களும் மோடிகளும்.


பார்ப்பனியத்தின் சகிப்பின்மைக்கு முதன் முதலில் தாக்குண்டவர்களும் இன்னமும் தாக்கப்படுபவர்களும் தலித்துகள்தான். ஆனால் இங்கே, ஒரு தலித் பொதுக்குளத்தில் நீரெடுத்தால் தடுக்கப்படுவதும், ஒரு தலித் செருப்பணியத் தடுக்கப்படுவதும், ஒரு தலித் ஊராட்சி மன்றத்தலைவராக ஆனால் கொல்லப்படுவதும், ஒரு தலித் இந்துப் பெண்ணை காதலித்தால் கழுத்தறுக்கப்படுவதும், ஒரு தலித் முதல்வரின் காலடிப் பட்ட கோயிலைக் கழுவிடுவதும், சகிப்பின்மையாகப் பார்க்கப்படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில். எந்த எழுத்தாளரும், எந்த கலைஞரும், எந்த விஞ்ஞானியும் தம் விருதுகளை தலித்துகள் மீதான சகிப்பின்மையைக் கண்டித்து தூக்கியெறிந்ததும் இல்லை. ஆனாலும் நாம் இந்து சகிப்பின்மையை வன்மையாக எதிர்க்கிறோம். இந்துவெறியின் சகிப்பின்மையைக் கண்டு அமீர்கான்கள் பயந்து தேசம்விட்டு ஓடலாம். ஆனால் நாம் ஓட முடியாது. இது நம்முடைய மன். இங்கே சகிப்பின்மைக்குத்தான் இடம் இருக்கக்கூடாது. மீண்டும் பௌத்தம் கொண்டு சகிப்புத்தன்மையை நிலைநாட்டி பார்ப்பனிய சகிப்பின்மையை ஒழித்துக்கட்டுவதே நாம் நம்முடையக் கடமையாகக் கொள்வோம்!