வெள்ளி, 31 ஜூலை, 2015

திருமாவளவனை தீண்டத்தகாதவரென்கிறது நாஞ்சில் சம்பத்தின் ஜாதிவெறி!

க.திருவள்ளுவன்.

மேடைப்பேச்சு என்ற பெயரில் அபத்தமான,அருவெறுப்பான கருத்துக்களை உளறிக்கொட்டுவது சில திராவிட அரசியல் பேச்சாளர்களின் வழக்கமாகும். தங்களது தலைமையைத் துதிக்கவும் அத்தகைய தலைமையின் சீர்கேடானப் போக்குகளுக்கு முட்டுக்கொடுக்கவும் இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான பிரச்சாரத்தையும் செய்வார்கள் என்பது வெளிப்படையான உண்மை. தங்களின் தனிப்பட்ட சுயலாபத்துக்காக யாரையும் துதிப்பது யாரையும் இழிவுபடுத்துவதுதான்  இவர்களின் தலையாயக்கடமை. அப்படிப்பட்ட பேச்சாளர்களில் ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். வைகோவிடமிருந்து விலகி இன்று ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்திருக்கும் சம்பத் ஜெயலலிதாவைப் புகழ்வதற்கு யாரையும் தரம்தாழ்த்திப் பேசத் தயங்குவதில்லை என்பதை அவரது மேடைப்பேச்சுக்களைக் கவனிப்பவர்கள் அறிவார்கள். ஜாதியப் படுகொலைகள், அரசியல் படுகொலைகள், குடும்ப, தொழில் பகைக் கொலைகள் என கொலைகள் மலிந்துவிட்ட ஜெயலலிதாவின் சீர்கெட்ட ஆட்சியை உயர்த்திப்பிடிக்கும் அதிமுகவின் முக்கியப் பேச்சாளர்களில் இன்றைக்கு முன்னணியில் இருப்பவர்  நாஞ்சில் சம்பத்துதான்.


கடந்த ஜூலை 23 ஆம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில்தான் நாஞ்சில் சம்பத் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியது தமிழ் வாரப்பத்திரிக்கையான குமுதம் ரிப்போர்ட்டரில்(31-07-2015) செய்திக்கட்டுரையில் வந்திருக்கிறது. கருணாநிதியை விமர்சிக்கும் போது "இப்ப கருணாநிதியுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை. திருமாவளவனே இவரை தீண்டத்தகாவர்னு அறிவிக்கிறார், 'இனி தோழமைக்கட்சியெல்லாம் கிடையாது.ஆட்சியில் பங்குதந்தால் கூட்டணி' என்று அறிவிக்கிறார்" என்கிறார் சம்பத். இதில் கருணாநிதையைத்தான் அவர் விமர்சித்துள்ளார் என்று கருதிவிடமுடியாது. கருணாநிதியை விமர்சிக்கும் வகையில் திருமாவளவனையும் அவர் பிறந்த தலித் சமூகத்தையும் இழிவுபடுத்தியிருக்கிறார் என்பதே உண்மை. "திருமாவளவனே இவரை தீண்டத்தகாதவராகப் பார்க்கிறார்" என்பதன் அர்த்தம், "திருமாவளவனே தீண்டத்தகாதவர், அவரே கருணாநிதியை தீண்டத்தயாரில்லை" என்பதுதான். கருணாநிதியை கீழ்ச்சாதிக்காரர் என்றால் ஜெயலலிதாவுக்கு இதமாக இருக்கும் என்பதால் அவரை தீண்டத்தகாதவராகக் குறிப்பிடும் சம்பத் அதற்கு துணையாக திருமாவளவனையும் தீண்டத்தகாதவர் என்கிறார். தீண்டத்தகாதவர் என்று ஏதேனும் சான்றிதழை திருமாவளவனோ அவர் பிறந்த சமூகமோ பெற்றிருக்கிறார்களா? திருமாவளவன் தீண்டத்தகாதவர் என்று அரசு ஆவணங்கள் கூறுகிறதா? யார் தீண்டத்தகாதவர் என்று அரசாணைகள் கூறுகின்றனவா? பிறகெப்படி சம்பத் திருமாவளவனைத் தீண்டத்தகாதவர் என்கிறார்? அதுதான் ஜாதியப்பார்வை. ஒரு பறையையோ பள்ளரையோ, சக்கிலியரையோ, வண்ணாரையோ எப்படி அடையாளப்படுத்த வேண்டுமென்ற அதிகாரத்தை ஜாதி இந்துவே எடுத்துக்கொள்கிறான். திருமாவளைவனை ஒரு கட்சியின் தலைவராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக அடையாளப்படுத்துவதைவிட தீண்டத்தகாவராக அடையாளப்படுத்தவே ஜாதி இந்து விரும்புகிறான் என்பதற்கு நாஞ்சில் சம்பத்தின் பேச்சே சிறந்த உதாரணம். புரட்சியாளர் அம்பேத்கர் அறிவுலகத்தின் நட்சத்திரமென்று உலகமே சொன்னாலும் ஜாதிவெறிக்கும்பலுக்கு அவர் தீண்டத்தகாதவராகத்தான் தெரிகிறார். அதனால்தான் அவரின் சிலைகளை உடைக்கிறார்கள், இழிவுப்படுத்துகிறார்கள். நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்கும் அதே ஜாதிவெறி மனோபாவமே இருக்கிறது. இந்த மனோபாவம் தண்டனைக்குரியது. எனவே, ஜாதியக் கண்ணோட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

கருத்துகள் இல்லை: